under review

கா. பெருமாள்

From Tamil Wiki
கா. பெருமாள்

கா. பெருமாள் [ஆக்டோபர் 1, 1921 – ஆகஸ்டு 17, 1979] ஒரு மலேசிய எழுத்தாளர், வானொலித் தொகுப்பாளர், ஓவிய கலைஞர் . கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், வில்லுப்பாட்டு போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது துயரப்பாதை நாவல் மலேசியாவில் கவனம் பெற்ற படைப்பு.

பிறப்பு, கல்வி

கா. பெருமாள் தமிழகத்தில் நாமக்கல்லில் அக்டோபர் 1, 1921-ல் பிறந்தார். கா. பெருமாளின் தந்தையார் பெயர் காளியண்ணன், தாயார் பழனியம்மாள். தொடக்கக்கல்வியைத் தமிழகத்தில் முடித்தவர் 1938-ல் மலாயா வந்தார்.

தனி வாழ்க்கை

கா. பெருமாள் தொடக்கத்தில் வணிகராகத் தன் வாழ்வை மலாயாவில் தொடங்கினார். பின்னர், கேமரன் மலையில் அமைந்துள்ள ரிங்கலட், ‘போ’ தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாகப் பணியாற்றினார்.

மலேசியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து காரக் பகுதி படைபிரிவுக்குத் தலைமையேற்று, ’நாயக்’ பதவி வகித்தார்.

கா. பெருமாள் 1959-ல் மலேசியா செய்தி தொடர்பு துறையின் கீழ் மலேசியத் தமிழ் வானொலியிலும், 1963-ல் சிங்கை வானொலியிலும் பணியமர்ந்தார்.

சிங்கப்பூருக்கு குடியேறிய கா.பெருமாள் அங்கே வானொலியில் புகழ்பெற்றார். சிங்கப்பூரின் தேசிய சொத்து எனக் கருதப்பட்ட கா. பெருமாள் அந்நாட்டிலேயே புகழிடமெய்தினார்.

இலக்கிய பணி

கா. பெருமாள் ஜனோபகாரி, முத்தமிழ், சங்கமணி பத்திரிகைகளில் எழுதினார். சங்கமணி கிழமை இதழில் 1958-1959 வரை உதவியாசிரியாராக இருந்தார். தொழிலாளர் ஏடான அதில் உழைப்பாளிகளுக்கு ஊக்கமூட்டும் கட்டுரைகள் எழுதினார். மேலும் சங்கமணி இதழில் கா. பெருமாள் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியபோது, 'துயரப்பாதை' என்ற தொடர்கதை எழுதி, நாவலாக 1978-ல் வெளியிட்டார்.

கா. பெருமாள் தத்துவக் கலை, கூத்துக்களை, நாடகம் பிறந்தது, மலைநாட்டு, உழைப்போர் இலக்கியம், எனும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 40 ஆண்டு கால மலேசியா வரலாற்றில் எல்லா நிலைகளையும் பற்றி கவிதைகள் எழுதியுள்ளார். கா. பெருமாள் எழுதிய கவிதைகளின் கைப்பிரதிகள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் ஆவணப்படுத்தப்படுள்ளன.

கலை வாழ்கை

கா. பெருமாள் நாட்டுப்புறக் கலைகளான தெருக்கூத்து வில்லுப்பாட்டு, மேடை நாடகம், சிலம்பம், தச்சு போன்றவற்றில் ஈடுபட்டார். உருவகப் பாடல்கள், உரை பாடல்கள், உரைபா நாடகங்கள், வில்லுப்பாட்டு கூத்துக்கலை, தோட்டப்புற கும்மி, கோலாட்டம் போன்றவற்றை புதிய கோணங்களில் படைத்துள்ளார்.

ஊடக வாழ்கை

1979-ல் கா. பெருமாள் எழுதிய நாட்டுப்பற்றுப் பாடல்கள் ‘சிங்கப்பூர் பாடல்கள்’ என இசையமைக்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. சிங்கப்பூரின் இசை முன்னோடியான பண்டிட் எம். இராமலிங்கம் அப்பாடல்களுக்கு இசையமைத்தார். தொடர்ந்து சிங்கப்பூர் கலாச்சார அமைச்சின் 'கண்ணோட்டம்' என்ற இதழில் கா. பெருமாளின் தேசபக்தி பாடல்கள் வெளிவந்தன. 1967-ல் சிங்கப்பூரில் நடைபெற்ற பாடல் போட்டியில் கா. பெருமாள் இயற்றிய ‘சிறிய தீவு அரிய நாடு சிங்கப்பூர்’ எனும் தலைப்பிலான பாடலுக்கு பரிசு கிடைத்தது.

கா. பெருமாள் இசை சித்திரங்கள், வாழ்க்கை வினோதம், இஸ்லாம் சமய கருத்துக்களை உள்ளடக்கிய சீறா இசை சித்திரம், தேசத் தந்தை துங்கு எனும் வில்லுப்பாட்டுகளையும் தயாரித்துள்ளார். சிங்கப்பூர் வானொலியில் கா. பெருமாளின் 'கட்டை விரல்' நாடகம் பிரபலமானது.

மறைவு

கா. பெருமாள் ஆகஸ்ட் 17, 1979-ல் மரணமடைந்தார்.

இலக்கிய மதிப்பீடு

கா. பெருமாள் எழுதிய 'துயரப்பாதை' நாவல் மலேசியாவில் முதன்மையான நாவல்கள் ஒன்றென எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு அவர்களால் குறிப்பிடப்படுகிறது. அந்நாவல் கா. பெருமாள் மலேசிய இலக்கியத்திற்கு வழங்கிய முதன்மையான பங்களிப்புகளில் ஒன்று என்கிறார். எழுத்தாளர் ம. நவீன் இந்நாவல் கருத்துப்பிரதிநிதிகளால் உருவான நாவல் என வரையறை செய்கிறார். அழுத்தமற்ற கதாபாத்திரங்களாலும் காரணமற்ற சம்பவச் சித்தரிப்புகளாலும் நோக்கற்ற வசனங்களாலும் சிக்கலை வலுவாக்கும் காட்சி போதாமையாலும் நாவல் வடிவத்தை முழுமையாக அடையவில்லை என அவர் விமர்சிக்கிறார்.

நூல்கள்

நாவல்
  • துயரப் பாதை, 1979
நாடகம்
  • கட்டை விரல் – கவிதை நாடகம் - 1979
  • வானொலி நாடகங்கள் - 1980
கவிதை
  • அன்பு எனும் தத்துவம் இஸ்லாம் – கவிதை - 1978
  • சிங்கப்பூர் பாடல்கள்
கட்டுரை
  • மலைநாட்டில் எழுத்தாளர் - 2008

உசாத்துணை


✅Finalised Page