under review

மைதீ. அசன்கனி

From Tamil Wiki
மைதீ. அசன்கனி

மைதீ. அசன்கனி வானொலி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறியப்பட்டவர். மலேசியத் தொலைக்காட்சியில் தமிழ் செய்தி வாசித்த முன்னோடி.

பிறப்பு, கல்வி

மைதீ. அசன்கனி 1938-ல் பினாங்கில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் மைதீன் பிள்ளை. தயாரின் பெயர் சாராபீபி. இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவரது உடன்பிறந்தவர்கள் இரண்டு அண்ணன், ஓர் அக்காள், மூன்று தம்பி மற்றும் இரு தங்கைகள். இவரது தம்பி எழுத்தாளர் மைதீ. சுல்தான்

வறிய குடும்பத்தில் பிறந்த மைதீ. அசன்கனி கெடா ரோட், டிரன்ஸ்பர் ரோட் பகுதியில் உள்ள வரிசை வீடுகளில் வாழ்ந்தார். அவ்வட்டாரத்தில் இயங்கிய ஐக்கிய முஸ்லிம் சங்கத் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். அங்கு நடந்த இரவு நேர ஆங்கில வகுப்பிலும் கலந்துகொண்டார். அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படிக்கும் வாய்ப்பு இருந்ததால் ஆறாம் ஆண்டு பயில இந்து சபா ஏற்பாட்டில் இயங்கிய சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் இணைந்தார். தொடர்ந்து ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் வேலைக்குச் சேர்ந்தார்.

தனிவாழ்க்கை

வானொலி அறிவிப்பாளர்களுடன் (இரண்டாவது வரிசையில் இடமிருந்து ஐந்தாவது)

மைதீ. அசன்கனி, பள்ளி வாழ்க்கை முடிந்ததும் லிம் லியான் தியேங் எனும் சீன நிறுவனத்தில் அலுவலகப் பையனாக இணைந்தார். நிரந்தர பணி என இல்லாமல் வருமானத்திற்காக பியூனாக, ஐஸ் கட்டிகள் விற்பனை செய்யும் சீனருக்கு உதவியாளனாக, உணவகத்தில் பணியாளனாக என கிடைக்கும் வேலைகளைச் செய்தார்.

மைதீ. அசன்கனி 1961-ல் தனது 23-ஆவது வயதில் கோலாலம்பூருக்கு வானொலியில் பணி தேடி புறப்பட்டார். 1992ன்வரை வானொலி அறிவிப்பாளராகப் புகழ்பெற்றார்.

1985 -86 ஆகிய ஆண்டுகளில் 'ஜக்கா' எனும் விளம்பர நிறுவனம் ஒன்றை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்.

எழுத்து வாழ்க்கை

மாணவராக இருந்தபோதே இவர் தமிழ் முரசு மாணவர் மணிமன்றத்தில் உறுப்பினராகி சிறிய கட்டுரைகள் எழுதினார். இவரது உறுப்பினர் எண் 8480. பின்னர் இளைஞராக வளர்ந்ததும் மாணவர் மன்றத்தை இளைஞர் மன்றமாகப் பதிவு செய்தனர். பினாங்கு தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் மைதீ. அசன்கனியே முதல் தலைவர். 'கவின் செல்வன்' எனும் பெயரில் சில கவிதைகள் எழுதியுள்ளார்.

வானொலி, தொலைக்காட்சி வாழ்க்கை

பணிஓய்வு நிகழ்வில் குடும்பத்துடன்

19ந-ல் 'நீதியின் ஜோதி' எனும் வானொலி நாடகத்தில் எதிர்கதைத்தலைவன் அரசகுரு பாத்திரம் ஏற்று நடித்தது முதல் அசன் கனியின் வானொலி பிரவேசம் தொடங்கியது. கே.எம். ஹனீஃப்பால் அசன்கனியின் வானொலி வாழ்க்கை நிலைகொண்டது. தொடர்ந்து பினாங்கில் ஒலியேறும் வானொலி நாடகங்களில் நடித்தார். பின்னர் சிறுவர் நிகழ்ச்சிகளுக்கு வசனங்கள் எழுதினார்.

கோலாலம்பூருக்கு வானொலியில் வாய்ப்பு தேடி 1961-ல் வந்தபோது ரெ. கார்த்திகேசுவின் உதவியால் வானொலியில் ஐ.நா பேசுகிறது நிகழ்ச்சியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அசன்கனியின் தமிழ் உச்சரிப்பு அனைவரையும் கவரவே தொடர்ந்து அவருக்கு வானொலியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 1961 முதல் 1963 வரை பகுதி நேரமாக வானொலியில் பணியாற்றினார்.

மே 23, 1963-ல் தற்காலிக முழு நேரப் பணியாளராக வானொலியில் வேலை கிடைத்தது. தொடர்ந்து வானொலி செய்திகளை வாசிக்கத் தொடங்கினார். 30 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக வானொலி வழி அறிமுகமானார். தொலைக்காட்சி மலேசியாவில் அறிமுகமானபோது அதில் தமிழ்ச் செய்தி வாசிக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

பங்களிப்பு

தான் தொடங்கிய நிறுவனத்தில்

மைதீ. அசன்கனி தமிழ் உச்சரிப்புக்கு மலேசியாவில் பிரபலமானவர். மலேசியாவில் தமிழ் உணர்வு ஓங்கியிருந்த 60-களில் நாடகம், செய்தி, அறிவிப்புகள் வழி சரியான மொழி உச்சரிப்பை ஊடகங்களின் மூலம் நிறுவினார்.

உசாத்துணை

  • ஒலிச்சிற்பிகள் - ஜனவரி 2017 - உமா பதிப்பகம்
  • முத்தமிழ்ச் சான்றோர்கள் (தொகுதி 2) - 2019 - உமா பதிப்பகம்


✅Finalised Page