under review

சுதேசமித்திரன் (சங்கர்)

From Tamil Wiki
சுதேசமித்திரன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுதேசமித்திரன் (பெயர் பட்டியல்)
சுதேசமித்திரன் (சங்கர்)

சுதேசமித்திரன் (சங்கர்) (பிறப்பு: பிப்ரவரி 2, 1968) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர். கவிதை, நாவல்கள், சிறுகதைகள் எழுதினார். ஆரண்யம், சாம்பல் ஆகிய சிற்றிதழ்களை நடத்தினார். ஆவநாழி இதழின் ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

சுதேசமித்திரனின் இயற்பெயர் சங்கர். கோயம்புத்தூரில் பா. சண்முகநாதன், ராதா இணையருக்கு பிப்ரவரி 2, 1968-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு சகோதரர். பூர்வீகம் போடிநாயக்கனூர். இரண்டு தலைமுறைக்கு முன்பே அரசுப் பணி நிமித்தம் அங்கிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்ட குடும்பம். தாத்தா ஆர்.பாலசுப்பிரமணியம் ஆங்கில ஆட்சியில் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணியாற்றினார். தந்தை இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார். தமிழ்த் திரைப்பட இயக்குநர் கே.சோமு இவரது தாயாரின் தாய்மாமன்.

தந்தையின் பணி நிமித்தமாக பல்வேறு அரசுப் பள்ளிகளில் படித்தார். கோயம்புத்தூர், காரமடை, மேட்டுப்பாளையம், கும்பகோணம், காட்டுக்கோட்டை, ஆத்தூர் ஆகிய ஊர்களிலுள்ள அரசுப்பள்ளியில் கல்வி கற்றார். காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்றார். கோவை சிட்டி கார்ப்பரேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். கோவை சி.பி.எம். கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார். கல்லூரி நிறைவு செய்யவில்லை.

தனி வாழ்க்கை

சங்கர் 2012-ல் ரம்யாவைத் திருமணம் செய்து கொண்டார். மனைவி வடிவமைப்பு மென்பொறியாளராகப் பணியாற்றுகிறார். மகள் மதுமொழி. அச்சுத்துறை மற்றும் கணினிப்பணியில் ஈடுபட்டார்.

சாம்பல் சிற்றிதழ்

இதழியல்

ஆரண்யம்

சுதேசமித்திரன் 1999-ல் மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீபதி பத்மநாபாவுடன் இணைந்து 'ஆரண்யம்' என்ற சிற்றிதழை ஆரம்பித்தார். சுந்தர ராமசாமி, லா.ச.ரா., நாஞ்சில் நாடன், மா.அரங்கநாதன், சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர், சுப்பிரபாரதிமணியன், விக்கிரமாதித்யன் உள்ளிட்ட படைப்பாளர்கள் இந்த இந்தழில் பங்களிப்பாற்றினர். காலாண்டிதழாக நான்கு இதழ்கள் வெளிவந்து ஆரண்யம் நின்றது. ஒவ்வொரு இதழிலும் ஒரு முழு திரைக்கதையின் மொழிபெயர்ப்பை ஆரண்யம் வெளியிட்டது. ஆர். சிவகுமார் மொழிபெயர்த்த சத்யஜித் ரேயின் 'பதேர் பாஞ்சாலி', ஸ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்த எம்.டி வாசுதேவன் நாயரின்'பெருந்தச்சன்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சாம்பல்

சுதேசமித்திரன் 2004 முதல் 'சாம்பல்' என்னும் சிற்றிதழைத் தனியாக நடத்தினார். இந்த இதழ், 'தி ஹிந்து' இணைப்பாக அப்போது வந்து நின்று போயிருந்த 'ஃபோலியோ' இதழின் வடிவத்தை அடியொற்றி வெளிவந்தது. நிதி நெருக்கடியால் மூன்று இதழ்களோடு நின்றது.

ஆவநாழி

சுதேசமித்திரன் ஆவநாழி எனும் இருமாத கால மென்னிதழை 2020 முதல் நடத்தி வருகிறார்.

பதிப்பியல்

சுதேசமித்திரன் 'தரு வெளியீடு' மூலம் நூல்களை வெளியிட்டு வருகிறார். நூல் தயாரிப்பு மற்றும் வடிவமைப்புத் துறையிலும் இயங்கி வருகிறார்.

திரை வாழ்க்கை

சுதேசமித்திரன் இரண்டு வருடம் திரைத்துறையில், தொலைக்காட்சித் தொடர்களில் உதவி இயக்குநர் மற்றும் வசனகர்த்தாவாகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

சுதேசமித்திரன் என்பது புனைப்பெயரில் புனைவும், அனந்த ஷங்கர்' என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதினார். சுதேசமித்திரனின் முதல் சிறுகதை 'தேரோடும் வீதியிலே' 1992-ல் குங்குமத்தில் நட்சத்திரக் கதையாக வெளியானது. ஆனந்த விகடன், சாவி இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்தன. 1994-ல் 'அப்பா' என்ற கவிதைத்தொகுப்பை அவரின் தரூ பதிப்பகம் வழியாக வெளியிட்டார். இவரின் இரு கவிதைகள் ராஜமார்த்தாண்டன் தொகுத்த 'கொங்குதேர் வாழ்க்கை-2' தொகுப்பில் இடம் பெற்றன. இவர் வணிகப் பத்திரிகைகளில் எழுதிய கதைகளை கிழக்கு பதிப்பகம் 'கோபுரம் தாங்கி' என்கிற பெயரில் வெளியிட்டது. 'அசுர வைத்தியம்' அவரது முதல் நாவல். ஆனால் "காக்டெய்ல்" என்ற நாவலே 2004-ல் வெளியானது. காக்டெய்ல், ஆஸ்பத்திரி ஆகியவை நான் லீனியர் வகைமையைச் சார்ந்த நாவல்கள். பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் ஆகியோரைத் தன் ஆதர்ச எழுத்தாளராகக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • கோவை விஜயா வாசகர் வட்டம் அளித்த புதுமைப்பித்தன் விருது
  • தினமணி 'இளையதலைமுறை இலக்கியம் சிறுகதைப் போட்டி'யில் விடத்தலாமரம் எனும் சிறுகதைக்குப் பரிசு
  • ஆனந்த விகடனின் 75-ம் அகவை போட்டியொன்றில் 'அண்ணா' எனும் சிறுகதைக்கு ரூ.20,000 பரிசு

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • அப்பா (1997, தரு வெளியீடு)
  • உடற்பாசி (2023, தரு வெளியீடு)
நாவல்
  • காக்டெய்ல் (2004, யுனைடெட் ரைட்டர்ஸ் வெளியீடு)
  • ஆஸ்பத்திரி (2006, உயிர்மை வெளியீடு)
  • அசுர வைத்தியம் (2023, தரு வெளியீடு)
சிறுகதைத் தொகுப்பு
  • கோபுரம்தாங்கி (2004, கிழக்கு பதிப்பகம் வெளியீடு)
  • ஒரு சுதந்திர தேசத்தின் காதல் கதை (2018, புது எழுத்து வெளியீடு)
  • பெரிய சங்கரன் கதை (2023, தரு வெளியீடு)
கட்டுரைத் தொகுப்பு
  • சினிமாவின் மூன்று முகங்கள் (2009, உயிர்மை வெளியீடு)
  • நான் சினிமா பார்ப்பதில்லை (2013, பாதரசம் வெளியீடு)
  • திரிகூட ஞாபகம் மற்றும் சில பதிவுகள் (2018, புது எழுத்து வெளியீடு)
தொகுப்புகள்
  • ஆவநாழி சிறுகதைகள் (2023, தரு வெளியீடு)
  • ஆவநாழி குறுநாவல்கள் (2023, தரு வெளியீடு)

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jul-2024, 08:58:18 IST