under review

சி. இலட்சுமணன்

From Tamil Wiki
சி. இலட்சுமணன்

சி. இலட்சுமணன் (பிறப்பு: 1953) தமிழ் ஆய்வறிஞர், எழுத்தாளர், பேராசிரியர், இதழாசிரியர், பதிப்பாசிரியர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடித் துறை, அரிய கையெழுத்துச் சுவடித்துறை முதலியவற்றில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர்.

பிறப்பு, கல்வி

சி. இலட்சுமணன் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள மதுசூதனபுரம் என்னும் ஊரில் தி. சின்ன நாடார், இல. சுப்பம்மை இணையருக்கு 1953-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் நான்கு பேர். குளத்துவிளை என்னும் ஊரில் ஆரம்பக்கல்வி பயின்றார். புத்தளம் என்னும் ஊரில் அமைந்துள்ள இலண்டன் மிசனரிகளால் தோற்றுவிக்கப்பட்ட LMPCH உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி நிறைவு செய்தார்.

நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் 1970-71 காலகட்டத்தில் புகுமுக வகுப்பு பயின்றார். பொருளாதாரத்தில் ஆங்கில வழியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதுகலைத் தமிழ்ப் பாடத்தினை இந்துக் கல்லூரியில் பயிலும்பொழுது பேராசிரியர் சி. சுப்பிரமணியன் இவருக்குத் தொல்காப்பியம் கற்பித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக அஞ்சல் வழியில் இளங்கலைக் கல்வியியல் பயின்றார்.

தனிவாழ்க்கை

சி. இலட்சுமணன் டிசம்பர் 11, 1981-ல் சரசுவதியைத் திருமணம் செய்துகொண்டார். மகன் அமுத சுவாமிநாதன். மகள் அபிரேகா.

ஆசிரியப்பணி

சி. இலட்சுமணன் முதுகலைக் கல்வியை முடித்தவுடன் மதுரையில் உள்ள இறையியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். இக்கல்லூரியின் சார்பில் இயங்கிய அச்சகத்தில் பதிப்புப் பணிகளைக் கவனித்து வந்தார். 1983-ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் வ.ஐ. சுப்பிரமணியம் பணியாற்றியபோது சி. இலட்சுமணன் தொகுப்பூதியத்தில் அங்குப் பணியில் இணைந்தார். 1994 முதல் தொழில் நுட்ப உதவியாளராகப் பணிபுரிந்தார்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய பல்வேறு சான்றிதழ் வகுப்புகளுக்குப் பாடம் நடத்தி, தமிழகத்தின் பல ஊர்களில், பல பொருண்மைகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்தும் கொண்டார். ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினார்.

இதழியல்

தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து அவ்விதழை நடத்தி வருகிறார்.

அமைப்புப் பணிகள்

சி. இலட்சுமணன் மதுசூதனபுரத்தில் 'தமிழியல் ஆய்வுகள் பதிவு மையம்' என்னும் பெயரில் ஆய்வு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தமிழ் ஆய்வுலகுக்குப் பங்களிப்பு வழங்கிய அறிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் வெளியிடுவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமைப்பாக உள்ளது.

ஆய்வு வாழ்க்கை

சுவடிப் பதிப்பாசிரியர்கள் (2003)

சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடித் துறை, அரிய கையெழுத்துச் சுவடித்துறை முதலியவற்றில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். களப்பணியில் பல ஓலைச்சுவடிகளைத் தொகுத்து, தமிழ்ப் பல்கைக்கழகத்தின் நூலகத்துக்கு வழங்கியவர்.

மு. சண்முகம் பிள்ளை, அடிகளாசிரியர், த.கோ.பரமசிவம் உள்ளிட்ட அறிஞர்களுடன் சி. இலட்சுமணன் பணியாற்றி, ஆய்வு நுட்பங்களை அறிந்துகொண்டார். அவ்வகையில் மு. சண்முகம் பிள்ளையின் குறுந்தொகைப் பதிப்புக்குச் சொல்லடைவு தயாரித்தமை, 'கலியுகப் பெருங்காவியம்' என்னும் மூவாயிரம் பாடல்கள் கொண்ட நூலுக்குப் பாடவேறுபாடுகளை எழுதினார். சித்த மருத்துவ வாகட நிகண்டு பணியினையும் செய்தார். அறிஞர் த.கோ.பரமசிவத்தின் பணிக்காலத்தில் உருவான சுவடி விளக்க அட்டவணை ஐந்தாம் தொகுதியையும் எழுதி முடித்தார்.

ஆய்வுப்பட்டம்

சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது திரு புட்பம் கல்லூரியில் இணைந்து பகுதி நேரமாக ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினைப் "பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளையின் பதிப்புப் பணி" என்னும் தலைப்பில் செய்து, ஆய்வறிஞரும் பேராசிரியருமான மு. சண்முகம் பிள்ளையின் பன்முகத் தமிழ்ப்பணியினை கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

தஞ்சையில் வாழ்ந்த இலக்கண அறிஞரும் கரந்தைக் கல்லூரிப் பேராசிரியருமான ச.பாலசுந்தரத்தின் உரைச்சிறப்பினை ஆராயும் முகமாக 'தொல்காப்பிய எழுத்ததிகாரப் பதிப்பும் உரைகளும்' (பாவலரேறு ச. பாலசுந்தரம் உரை) என்னும் தலைப்பில் தம் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவுசெய்து பட்டம் பெற்றார். இவ்வாய்வில் தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளிலிருந்து பாவலரேறு ச. பாலசுந்தரம் உரை வேறுபடும் திறத்தினை மதிப்பிடுவது ஆய்வாளரின் நோக்கமாக இருந்தது.

சுவடியியல்

சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது ஓலைச்சுவடித் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை வழியாக ஆய்வுப்புலத்தில் பயிற்சிபெற்றார். ஓலைச்சுவடிகளைத் தொகுத்தல், பாதுகாத்தல், பதிப்பித்தல் முதலிய பணிகளில் செயல்பட்டார். எட்டாண்டுகள் இப்பணியில் இருந்து, பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து அரிய ஓலைச்சுவடிகள் பலவற்றைத் தொகுத்து பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்கு வழங்கினார்.

நூல் பட்டியல்

  • சுவடி விளக்க அட்டவணை, ஐந்தாம் தொகுதி(தொகுப்பாசிரியர்) (1989)
  • வாழ்வியல் சிந்தனை (1995)
  • பேரா.மு. சண்முகம் பிள்ளையின் பதிப்புப் பணி (2003)
  • தமிழக வரலாற்றறிஞர்கள் (1993)
  • காகிதச்சுவடி ஆய்வுகள் (2000)
  • பதிப்பு நிறுவனங்கள் (2002)
  • சுவடிப் பதிப்பாசிரியர்கள் (2003)
  • பதிப்பியல் நெறிமுறைகள் (2003)
  • ஆய்வுலகு போற்றும் தமிழறிஞர்கள்
  • வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை

உசாத்துணை



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 17:43:47 IST