under review

அடிகளாசிரியர்

From Tamil Wiki
நன்றி: மு.இளங்கோவன்

அடிகளாசிரியர்(குருசாமி; ஏப்ரல் 17, 1910 - ஜனவரி 8, 2012) தமிழறிஞர், தமிழ்ப் பேராசிரியர். தொல்காப்பிய ஆய்வாளர். 2011-ல் குடியரசுத் தலைவர் வழங்கும் செம்மொழி உயராய்வுக்கான தொல்காப்பியர் விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

குருசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூகையூரில் வீரசைவ மரபில் பெரியசாமி ஐயர், குங்கும அம்மாள் இணையருக்குப் பிறந்தார். இயற்பெயர் குருசாமி. ஏழு வயதில் தந்தையை இழந்து பெரம்பலூருக்கு அருலிலுள்ள உள்ள நெடுவாசலில் கு.சுப்பிரமணியதேவர், கு.சிவப்பிரகாச தேவர் ஆகியோரின் ஆதரவில் வளர்ந்தார். அவர்கள் வீட்டில் தங்கித் தமிழும் வடமொழியும் பயின்றார்.

மருத நாடாரிடம் சோதிடக் கலையை முறையாகக் கற்றார். உ. வே. சாமிநாதையரிடம் தமிழ் இலக்கியம் கற்றார். 1937-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

அடிகளாசிரியர் 1938-ல் மயிலம் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். 1950 முதல் 1970 வரை கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்த பொழுது அருகில் உள்ள சிவன் கோயிலில் சைவ சித்தாந்த வகுப்புகள் நடத்தினார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தஞ்சைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழறிஞர்கள் மறைமலையடிகள், திரு.வி.க., நா.மு. வேங்கடசாமி நாட்டார் போன்றோரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மறைமலையடிகளின் பாதிப்பால் தன் பெயரை அடிகளாசிரியர் என மாற்றிக் கொண்டார். சமஸ்கிருதம், யோகம், சோதிடம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றார். கல்வெட்டு , ஓலைச்சுவடி ஆய்வுகளில் ஆர்வமிக்கவராக விளங்கினார்.

அடிகளாசிரியர் சம்பத்து அம்மையாரை மணந்து கொண்டார். எட்டு குழந்தைகள். மகன்கள் பேராசிரியர், இளங்கோவன், நச்சினார்க்கினியன், சிவபெருமான். மகள்கள் திருநாவுக்கரசி, குமுத வல்லி, செந்தாமரை, சிவா.

இலக்கிய வாழ்க்கை

அடிகளாசிரியர் தமிழ் கல்வெட்டுகள் பற்றிய ஆய்விலும் அரிய சுவடிகளைப் பாதுகாப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். பல பண்டை இலக்கியங்களுக்கு உரை எழுதினார். தன் உரைகளில் பாடவேறுபாடுகளை நுட்பமாகக் கண்டு எழுதினார். தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்துக்காகப் பல நூல்களைப் பதிப்பித்தார். இவர் வெளியிட்ட அறுபது நூல்களில் தொல்காப்பியப் பதிப்புகளும் சமயநூல் பதிப்புகளும் குறிப்பிடத்தகுந்தவை.

1977 -ல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் ஆராய்ச்சியாளராகப்பணிபுரிந்தார். 1982 முதல் 1985 வரை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுவடிப்புலத்தில் சிறப்புநிலை இணைப்பேராசிரியராக தொல்காப்பிய ஆராய்ச்சிகளைச் செய்து வந்தார்.

தொல்காப்பிய உரைகள்

அடிகளாசிரியரின் உரைகளில் தொல்காப்பிய உரைகள் குறிப்பிடத்தக்கவை. பதிப்பிற்கு ஆதாரமாக அவர், திருப்பாதிரிபுலியூர் ஞானியார் மடத்து ஓலைச் சுவடி, திருவாடுதுறை ஆதீனத்து ஓலைச் சுவடிகளோடு இளம்பூரணாரின் உரையை அடிப்படையாகக் கொண்டு, சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையார் ஆகியோரின் உரைகளையும் இலக்கண நூல் உரையாசிரியர்களின் உரைகளையும் நிகண்டுகளையும் பயன்படுத்தி உரைக்கே உரைவிளக்கம் எழுதிப் பதிப்பிக்கும் முறையைக் கையாண்டார்.

அடிகளாசிரியர் 1969-ல் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தின் இளம்பூரணர் உரையை எழுதி தம் சொந்தப் பொருட்செலவில் வெளியிட்டார். அப்போதைய தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வ.ஐ. சுப்பிரமணியம் அடிகளாசிரியரைத் தமிழ் பல்கலைக் கழகச் சுவடித்துறையில் சிறப்புநிலைப் பேராசிரியராக நியமனம் செய்து தொல்காப்பியத்தை முழுவதுமாகப் பதிப்பித்துத் தரும் பணியையும் அவரிடம் ஒப்படைத்தார். சொல்லதிகாரப் பதிப்பு 19 ஆண்டுகளில் முடிவடைந்தது. தமிழ் பல்கலைக் கழகத்தின்101-ஆவது வெளியீடாக, 1988-ம் ஆண்டு ‘தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை’ வெளிவந்தது.

தமிழ் பல்கலைக் கழகம் நவம்பர் 1985-ல் அடிகளாசிரியரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இளம்பூரணாரின் தொல்காப்பியப் பொருளதிகாரம் செய்யுளியல் உரையைப் பதிப்பித்தது. ஓலைப்பிரதிகள், அச்சுப்பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள், செந்தமிழ்ச் செல்வி முதலான ஆராய்ச்சி இதழ்களில் காணப்படும் கட்டுரைகள், கருத்தரங்க வெளியீடுகள், அறிஞர்கள் எழுதிய பொருளதிகாரப் பொருள் பற்றிய தனி வெளியீடுகள், தமிழ் ஆராய்ச்சி தொடர்பான நிறுவனங்களின் வெளியீடுகள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தன் ஆய்வை மேற்கொண்டார்.

தமிழ் பல்கலைக்கழகத்திற்காக செய்யுளியல் தவிர்த்த ஏனைய எட்டு இயல்களுக்கும் உரைப்பதிப்பு வெளியிட ஆய்வுகள் மேற்கொண்டார். அவரது நீண்ட ஆய்வுரையின் கையெழுத்துப் பிரதியைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒப்படைத்தார்.

தொல்காப்பிய இலக்கண நூலை ஆய்வு செய்து, எளிமையான முறையில் கட்டுரைகள் எழுதிக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டு மத்திய செம்மொழி ஆய்வு மையம் அடிகளாசிரியருக்கு 2.5 லட்சம் ஊதியத் தொகை வழங்கியது.

இலக்கிய இடம்

"தொல்காப்பியப் பதிப்பில் இவருக்கு இணையாக ஒருவரைக் காட்டமுடியதபடி ஆழமான, விளக்கமான பதிப்பை வழங்கியவர்" என்று மு. இளங்கோவன் அடிகளாசிரியரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பல பல்கலைக்கழகங்களும் தொல்காப்பியத்தைக் கற்பிப்பதற்கு அடிகளாசிரியரின் பதிப்புகளைப் பயன்படுத்தின. தன் உரைகளில் உரையாசிரியர்களின் மொழி நடையைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் குழப்பங்களை நீக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு உரைவிளக்கம் அளித்தார். அவரது உரை நூற்பா, நுதலிய பொருள், நூற்பா பதவுரை, எடுத்துக்காட்டு, நூற்பாக் குறிப்பு, உரைக் குறிப்பு, பாட வேறுபாடு, சுவடி வேறுபாடு, பிற இலக்கண ஆசிரியர் கருத்து, பிற உரையாசிரியர் கருத்து, இவற்றில் இவர் சரியெனக் கருதும் கருத்து என்னும் பதினொன்று கூறுகளைக் கொண்டிருந்தது.

உரைக்குறிப்புக்கள் தரும்போது ஒப்பீட்டு ஆய்வுமுறையைக் கையாண்டு இளம்பூரணர் உரையோடு சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், மயிலைநாதர், யாப்பருங்கல விருத்திக்காரர், சங்கர நமச்சிவாயர் ஆகியோரின் உரைகளையும் தந்துள்ளார். தன் தொல்காப்பிய ஆராய்ச்சிக்காக மத்திய அரசின் செம்மொழி உயராய்வு மையத்தில் தொல்காப்பியர் விருதைப் பெற்றார்.

பரிசுகள், விருதுகள்

  • இவர் எழுதிய 100 பாடல்களைக் கொண்ட சிறுவர் இலக்கியத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாராட்டியுள்ளார்.
  • தொல்காப்பியச் செம்மல், செந்நாப்புலவர், தமிழ் பேரவை செம்மல் விருதுகள்
  • குடியரசுத் தலைவர் வழங்கும் செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் தொல்காப்பியர் விருது (2011)

மறைவு

அடிகளாசிரியர் நிறைவாழ்வு வாழ்ந்து தன் 102-ஆவது வயதில் ஜனவரி 8, 2012 அன்று காலமானார்.

நாட்டுடைமை

தமிழக அரசு 2019-ல் அடிகளாசிரியரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

படைப்புகள்

  • அருணகிரி அந்தாதி (1967) சரசுவதி மகால் வெளியீடு.
  • மருதூரந்தாதி உரை (1968)
  • காலச்சக்கரம் 1969,79 (சோதிடம்)
  • வராகர் ஓரா சாத்திரம் 1970, 78, 90
  • சிவஞானதீபம் உரை 1970
  • சிவப்பிரகாச விகாசம் 1977
  • முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் உரை 1938
  • சேக்கிழார் பிள்ளைத்தமிழ் உரை 1967
  • தமிழகக் கல்வெட்டு விளக்கவுரை 1967(மு.கோவிந்தராசனாருடன்)
  • திருவலஞ்சுழி தேவாரப்பாடல்கள் உரை 1958
  • திருவாசகக்கோயில் திருப்பதிகம் உரை 1956
  • சிவபுராணச் சிற்றுரை 1986,99
  • சதமணிமாலை மூலமும் உரையும் 1990
  • சித்தாந்த சிகாமணி அங்கத் தலத்திரட்டு உரை 1991
  • சிவஞானபால தேசிகர் திருப்பள்ளி எழுச்சி உரை 1991
  • குதம்பைச்சித்தர் பாடலும் உரையும் 1999
  • இட்டலிங்க அபிடேகமாலை மூலமும் உரையும் 2001
  • சசிவன்ன போதம் மூலமும் உரையும் 2002
  • பஞ்சதிகார விளக்கம் மூலமும் உரையும் 2003
பதிப்பு நூல்கள்
  • வீரசைவப் பிரமாணம் 1936
  • சதமணிமாலை 1938
  • சிவப்பிரகாச விகாசம் 1939
  • காமநாதர் கோவை 1957
  • மேன்மைப் பதிகம் 1957
  • சதுர்லிங்க தசகோத்திர சதகம் 1958
ஆராய்ச்சி நூல்கள்
  • தொல்காப்பியம்- எழுத்தத்திகாரம்-இளம்பூரணம் அரிய ஆராய்ச்சிப்பதிப்பு 1966
  • ஐவகையடியும் என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கம்(செ.ப.)
  • தமிழ் இலக்கண இலக்கியங்களில் சைவசித்தாந்தம்,1978
  • தொல்காப்பியம்-சொல்-இளம்பூரணம் த.ப. 1990
  • தொல்காப்பியம்-பொருள்-செய்யுளியல் த.ப.1985
  • தொல்காப்பியம்-பொருள்-எட்டு இயல்கள் (அச்சில்)
இலக்கியம்
  • திரு அரசிலிக்காதை 1948
  • குழந்தை இலக்கியம் 1963
  • சான்றாண்மை 1964-1975
  • சென்னிமலை முருகன் தோத்திரம் 1980
  • அரசியல் இயக்கம் 1981
  • பல்சுவைப் பண்ணத்திப் பாடல்கள் 1983
  • அருள்மிகு மாரியம்மன் திருப்பதிகம் 1982
  • உளத்தூய்மை,1984,1994
  • தண்ணிழல் 1990
  • மறவர் நத்தக் குன்றமரும் திருமுருகன் 1991
  • தொழிலியல் 1993
  • மெய்பொருட்காதை
  • தமிழ் மாண்பும் தமிழ்த்தொண்டும் 1996
  • ஒண்பான்கோள் வணக்கப்பாடல்கள் 1993
  • சிறுவர் இலக்கியம்
  • எங்களூர்தொடக்கப்பள்ளி - நாடகம்
  • வீரசைவ சிவபூசாவிதி 1949
  • விலையேற்றமும் வாழும் வழியும் 1984
  • திருமூலரும் பேருரையும் 1998
  • காயத்துள் நின்ற கடவுள்,1999
  • திருவாசக அநுபூதி 2000
  • கீதையின் அறிவுப்பொருள் 2000
  • திருமந்திர உணர்வு 2001
  • தொல்காப்பியச் செய்யுளியல்-உரைநடை (அச்சில்)
  • திருமந்திரத்தில் எட்டாம் திருமுறை,2005

உசாத்துணை

இணைப்புகள்

தொல்காப்பியப் பதிப்புகள் (அடைவு, ஆவணம், வரலாறு),கீற்று இதழ்


✅Finalised Page