under review

சிலப்பதிகாரம் கூறும் 11 வகை ஆடல்கள்

From Tamil Wiki

சிலப்பதிகாரம், ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. இளங்கோவடிகள் இயற்றிய நூல். இந்நூலில், மாதவி ஆடியதாக, மொத்தம் 11 வகை நடனங்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

சிலம்பு கூறும் 11 வகை ஆடல்கள்

  • சிவபெருமான் ஆடிய கொடுகொட்டி
  • கிருஷ்ணன் ஆடிய பாண்டரங்கம்
  • திருமால் ஆடிய அல்லியம்
  • திருமால் ஆடிய மல்லாடம்
  • முருகன் ஆடிய குடைக் கூத்து
  • முருகன் ஆடிய துடிக் கூத்து
  • காமன் ஆடிய பேடிக் கூத்து
  • உமையவள் ஆடிய மரக்கால் கூத்து
  • திருமகள் ஆடிய பாவைக் கூத்து
  • திருமால் ஆடிய குடக் கூத்து
  • இந்திராணி ஆடிய கடையக் கூத்து

- மேற்கண்ட ஆடல்களில் ஆறு வகைகள் நின்று கொண்டு ஆடுவனவாகவும் ஐந்து வகைகள் வீழ்ந்து ஆடுவதாகவும் அமைந்துள்ளன.

நின்று கொண்டு ஆடுபவை

சிலம்பு கூறும் ஆடல்களில் ஆறு வகைகள் நின்று கொண்டு ஆடுபவை. அவை,

  • அல்லியம்
  • கொடுகொட்டி
  • குடைக் கூத்து
  • குடக் கூத்து
  • பாண்டரங்கம்
  • மல்லியம்
அல்லியம்

அல்லியம், கண்ணனால் ஆடப்பட்ட ஆடல். கம்சன் என்னும் அரக்கன் குவலயாபீடம் என்னும் யானையின் உருக்கொண்டு தேவர்களுக்குத் துன்பம் செய்தபொழுது, கண்ணன் அந்த யானையின் ஆற்றலை அழிக்க ஆடிய ஆடல். இது வீரச்சுவை நிறைந்த ஆடல். மாதவி, கண்ணன் உருக்கொண்டு யானை உருவில் இருக்கும் கம்சனோடு போர் புரிவது போல் நடனமாடினாள். ஒரு விலங்கைக் கொல்லும் பொழுது அதனை எம்முறையில் ஆடிக் கொல்ல வேண்டுமோ அதற்கேற்ற தாள அமைதியும், அபிநயமும் கொண்ட தனி ஆடலாக இது அமைந்துள்ளது.

கொடுகொட்டி

கொடுகொட்டி, சிவபெருமான் ஆடிய ஆடல். தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் முப்புரங்களையும் எரித்தார், சிவபெருமான். இதன் வெற்றிகளிப்பால் கைகொட்டி ஆடிய ஆடல் கொடுகொட்டியாயிற்று. ஆடுதலில் கொடுமையுடையதால் இவ்வாட்டத்திற்கு கொடுகொட்டி என்று அடியார்க்கு நல்லார் பெயரிடுகிறார். கொடுங்கொட்டி - கொடுகொட்டி என விகாரமாயிற்று என்று நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

கலித்தொகை கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவன் கொடுகொட்டி ஆடிய குறிப்புக் காணப்படுகிறது. இதில் சிவபெருமான் ஆடியதாகவும் உமையவள் தாளம் இசைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதவி தன் உடம்பில் ஒரு பகுதி சிவனாகவும், மறு பகுதி உமையவள் ஆகவும் வேடம் பூண்டு ஆடினாள்.

குடைக் கூத்து

குடைக் கூத்து, முருகன் ஆடியது. சூரனோடு போர் செய்ய முனைந்த வானவர் படை அஞ்சிச் சோர்வுற்றபோது, முருகன் ஒருமுக எழினியாகத் தோன்றித் தம் குடையைச் சாய்த்துச் சாய்த்து ஆடிச் சூரனின் வலிமையை இழக்கச் செய்து வானவர் படையைக் காத்த பொழுது ஆடிய ஆடல். கையில் குடை ஒன்றைப் பிடித்துக் கொண்டு கட்டப்பட்ட கயிற்றில் ஏறி நின்று ஆடுவதையும் குடைக் கூத்தாகக் கருதுகின்றனர். மாதவி, முருகன் போல் ஒப்பனை செய்து கொண்டு அரக்கர்களோடு போரிட்டுவெற்றிக் களிப்பில் ஆடுவது போல் ஆடினாள்.

குடக்கூத்து

குடக்கூத்து திருமாலால் ஆடப்பட்டது. வாணன் எனும் அரக்கனின் மகள் உழை(உஷை) என்பாளைக் காமன் மகன் அநிருத்தன் கவர்ந்து சென்றான். அதனால் சினந்த வாணன், அநிருத்தனைச் சோ என்னும் நகரில் சிறை வைத்தான். திருமால் வாணனின் சோ நகருக்கு வந்து உலோகத்தையும் மண்ணையும் கலந்து செய்யப்பட்ட குடத்தின் மேல் நின்று ஆடிய ஆடல் குடக் கூத்தாடல். இது வினோதக் கூத்து ஆறினுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பாண்டரங்கம்

பாண்டரங்கம் சிவனால் ஆடப்பட்டது. சிவன் போர்கள் பலவென்ற வலிமையோடும் வெற்றிக் களிப்போடும், பாரதி வடிவாய் வெண்ணீறு அணிந்து ஆடியது. பாண்டரங்கம் என்பதனை பண்டரங்கம் என்றும் குறிப்பிடுவர். மாதவி அச்சம் தரக்கூடிய காளி உருத்தாங்கி அகோரத் தாண்டவமாடித் தன் ஆடற்புலமையை வெளிப்படுத்தினாள்.

மல்லாடம்

மல்லாடம் என்னும் மற்கூத்தாடல், திருமாலால் ஆடப்பட்டது. வாணன் என்னும் அரக்கன் தேவர்களுக்குத் துன்பம் செய்தபொழுது, திருமால் மல்லர்களின் துணையோடு வாணனை வதம் செய்த பொழுது ஆடிய ஆடல். மல்யுத்தம் என்ற சொல்லிலிருந்து இப்பெயர் பெற்றது. மாதவி, மாயவன் வடிவு கொண்டு வாணனை வதம் செய்யும் நிலையில் ஆடல் அபிநயங்களோடு ஆடினாள்.

வீழ்ந்து ஆடும் ஆடல்கள்

சிலம்பு கூறும் ஆடல்களில் ஐந்து வகைகள், வீழ்ந்து ஆடும் ஆடல்கள் . அவை,

  • துடிக் கூத்து
  • கடையக் கூத்து
  • பேடிக் கூத்து
  • மரக்கால் கூத்து
  • பாவைக் கூத்து
துடிக் கூத்து

துடிக் கூத்து, முருகன் ஆடிய ஆடல். சூரன் கடல் நடுவில் வேற்றுருக் கொண்டு நின்றபோது, முருகன் தொண்டகம் என்னும் பறை முழக்கிச் சூரனை அழித்தபொழுது ஆடிய ஆடல். துடியைக்கொட்டி ஆடியதால் துடியாடலாயிற்று. மாதவி முருகன் உருக்கொண்டு சூரனை வென்ற பிறகு மேடையை கடல் அலையாகப் பாவித்து ஆடினாள்.

கடையக் கூத்து

இந்திரன் மனைவி இந்திராணி ஆடிய ஆடல். இந்திரன் மனைவி இந்திராணி, மண்ணுலக வளம் காண விரும்பிச் சேர நகருக்கு வந்து, அங்கு வாணன் மனையின் வடக்கு வாயிற் புறத்தே உள்ள வயலில் உழவர் பெண் வேடம் புனைந்து ஆடிய ஆடல். மாதவி நாட்டுப்புற உழத்தி போல் வேடம் புனைந்து ஆடினாள்.

பேடிக் கூத்து

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்தோடு காமன் ஆடிய ஆடல் பேடிக் கூத்து. அநிருத்தனைச் சிறைமீட்ட காமன், ஆண் தன்மை திரிந்து பெண் தன்மை மிகுந்து பேடி வடிவத்தோடு ஆடியது. எதிரிகளை மயக்கக் காமன் பெண் உருக்கொண்டது போல், மாதவி தன்னை ஒப்பனை செய்து கொண்டு அபிநயங்களைச் செய்து பிறர் மயங்கும்படி ஆடினாள்.

மணிமேகலையில், மணிமேகலையும் சுதமதியும் உவவனத்திற்கு மலர் பறிக்கச் சென்றபொழுது இக்கூத்து நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மரக்கால் கூத்து

மரக்கால் கூத்து கொற்றவையால் ஆடப்பட்டது. கோபமுடைய அவுணர்கள் வஞ்சம் கொண்டு கொடுந்தொழில்கள் பல செய்து வந்தனர். இவர்களைக் கொற்றவை அழித்து ஆடிய ஆடல். அரக்கர்கள் பாம்பும் தேளுமாக வடிவம் கொண்டு மக்களைக் கடித்துத் துன்புறுத்தினர். நஞ்சுடன் திரியும் இவர்களை அழிக்கக் கொற்றவை, மரத்தாலான கால்களைக் கட்டிக்கொண்டு அக்கால்களால் பாம்பு, தேள் வடிவ அரக்கர்களை மிதித்து அழித்து ஆடினாள். மாதவி, தன்னைக் கொற்றவைப் போல புனைந்து கொண்டு மரக்காலால் இவ்வாட்டத்தை ஆடினாள்.

பாவைக் கூத்து

பாவைக் கூத்து திருமகளால் ஆடப்பட்டது. தேவர் குலத்தை அழிக்க அரக்கர்கள் படையுடன் வந்த பொழுது அவர்களுக்கு முன் திருமகள் மக்களை மயக்கும் கொல்லிப்பாவை வடிவில் தோன்றினாள். அரக்கர் படையை மயக்கி அவர்களை வலிமையிழக்கச் செய்து ஆடிய ஆடலே பாவைக் கூத்து. மாதவி கொல்லிப் பாவை போல் அலங்கரித்துக் கொண்டு இக்கூத்தை ஆடினாள்.

மேற்கண்ட பதினொரு வகை ஆடல்களையும் மாதவி பதினோரு வகைக்கோலம் பூண்டு ஆடினாள். இதற்குப் பதினொரு வகைப் பாடல்கள் பாடப்பட்டன. பலவகையான கொட்டுக்கள் முழங்கின எனச் சிலம்பு கூறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page