under review

சித்ரா சிவன்

From Tamil Wiki
சித்ரா சிவன்
சித்ரா சிவன் - ஆதிலா நூல் வெளியீடு
சித்ரா சிவன் - ஸீரோ டிகிரி இலக்கிய விருது

சித்ரா சிவன் (பிறப்பு: ஆகஸ்ட் 13, 1983) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர், விமர்சகர்.

பிறப்பு, கல்வி

சித்ரா சிவன் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ரா.சேகர், கண்ணகிசெல்வி இணையருக்கு ஆகஸ்ட் 13, 1983-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரர், ஒரு சகோதரி.

சித்ரா சிவன் பெரியகுளத்திலுள்ள ஹமீதியா நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். தேனியிலுள்ள நாடார் சரஸ்வதி பெண்கள் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். கே.ஏ.எஸ் மாண்டிசோரி கல்லூரியில் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பை முடித்தார்.

தனி வாழ்க்கை

சித்ரா சிவன், கி.சிவனை டிசம்பர் 1, 2005-இல் திருமணம் செய்துகொண்டார். கணவர் சிவன் தலைமை சமையல் கலை வல்லுநராக அமெரிக்கா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பணி புரிந்து பின்னர் தன் சொந்த ஊரில் விவசாயத் தொழிலை செய்கிறார்.

சித்ரா சிவன் இணையருக்கு மகள் ஸ்ரீநிதி, மகன் ஸ்ரீகுகன் என இரு குழந்தைகள். மகள் ஸ்ரீநிதி கல்லூரியில் பொறியியல் படிக்கிறார். மகன் ஸ்ரீகுகன் பள்ளிக்கல்வி படிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

சித்ரா சிவன் கல்கி, விகடன், மங்கையர்மலர், தமிழ்வெளி, வாசகசாலை 'புரவி' இலக்கிய இதழ், படைப்பு தகவு இதழ், ராணி வார இதழ், தினமலர் வாரமலர், சிற்றுளி கலை இலக்கிய இதழ் ஆகியவற்றில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதியுள்ளார். இவ்விதழ்களில் தமிழ் எழுத்தாளர்களை இவர் எடுத்த நேர்காணல்கள் வெளியாகியுள்ளன.

சித்ரா சிவன் எழுதி அச்சில் வந்த முதல் கவிதை தினமலர் வாரமலரில் வெளியானது. அச்சில் வந்த முதல் சிறுகதை 'அதிரூபன்' தமிழ்வெளி கலை இலக்கிய இதழிலில் வெளியானது. அச்சில் வந்த முதல் நேர்காணல், கல்கி வார இதழுக்காக பாவைக்கூத்து கலைஞரை எடுத்தது.

சித்ரா சிவன் எழுதி நான்கு நூல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு கவிதை தொகுப்புகள், ஒரு நேர்காணல் தொகுப்பு, மற்றும் ஒரு நாவல். 'ஆதிலா' கவிதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகம் மூலமாக 2022-இல் வெளியானது. 'ஒளவையின் கள் குடுவை' கவிதைத் தொகுப்பு வாசகசாலை பதிப்பகம் மூலமாக வெளியானது. 'பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை. உண்மை முனங்கினாலே போதும்' என்ற தலைப்பில் இணைய, வார, மாத இதழ்களில் வெளியான சித்ரா சிவன் எடுத்த 12 எழுத்தாளர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பும் வெளியாகியுள்ளது. இவர் எழுதிய அத்தினி நாவல் ஸீரோடிகிரி பதிப்பகம் நடத்திய நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.

சித்ரா சிவனின் கவிதை நூல்கள் 'அம்முராகவ்' என்ற புனைப்பெயரில் வெளியாயின.

சித்ரா சிவன் தன் ஆதர்ச எழுத்தாளர்களாக தி.ஜானகிராமன், ஜெயமோகன், அ. முத்துலிங்கம், தமிழ்நதி ஆகியோரையும், கவிஞர்களில் இளம்பிறை, கலாப்ரியா ஆகியோரையும், இதழியல் துறையில் தனது ஆதர்சமாக கல்கி வார இதழின் தலைமை உதவி ஆசிரியரான எழுத்தாளர் அமிர்தம் சூர்யா மற்றும் தினமலர் செய்தி ஆசிரியர் சேதுநாகராஜன் ஆகியோரையும் சொல்கிறார்.

சித்ரா சிவன் 'சிற்றுளி' காலாண்டிதழின் உதவி ஆசிரியராக உள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பெண்கள் கிளையின் தேனி மாவட்டத் தலைவர் பொறுப்பிலும் உள்ளார்.

விருதுகள்

  • ஸீரோ டிகிரி இலக்கிய விருது
  • தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வழங்கிய 'ஜீவா நினைவு விருது'
  • தமிழ்நாடு முற்போக்கு மேடை வழங்கிய ' கருப்பு கருணா விருது'
  • வைகை அரிமா சங்கம் வழங்கிய 'இலக்கிய சுடர் விருது'
  • 'செளமா' இலக்கிய விருது

நூல்கள்

நாவல்
  • அத்தினி, 2024
கவிதைத் தொகுப்புகள்
  • ஆதிலா, யாவரும் பதிப்பகம், 2022
  • ஒளவையின் கள் குடுவை, வாசகசாலை பதிப்பகம், 2023
நேர்காணல் தொகுப்பு
  • 'பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை. உண்மை முனங்கினாலே போதும்', 2024

வெளி இணைப்புகள்

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-May-2025, 23:24:13 IST