under review

அமிர்தம் சூர்யா

From Tamil Wiki
அமிர்தம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அமிர்தம் (பெயர் பட்டியல்)
சூர்யா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சூர்யா (பெயர் பட்டியல்)

To read the article in English: Amirtham Surya. ‎

அமிர்தம் சூர்யா

அமிர்தம் சூர்யா (டிசம்பர் 16,1966) தமிழ் எழுத்தாளர், இலக்கிய மேடைப்பேச்சாளர், கவிஞர், இதழாளர்.

பிறப்பு, கல்வி

அமிர்தம் சூர்யாவின் இயற்பெயர் இரா.ந.கதிரவன். கதிரவன் என்ற பெயரில் இருக்கும் –ன் – விகுதி பிடிக்காததால் சூர்யா என மாற்றிக்கொண்டார். நூறாண்டு வாழ்ந்த தன் பாட்டி அமிர்தம்மாள் பெயரில் உள்ள அமிர்தம் என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தியதால் அதை இணைத்துக்கொண்டு அமிர்தம் சூர்யாவாக ஆனார்.

காஞ்சிபுரம் மூதாதையரின் ஊரானாலும் பெற்றோர் சென்னையில் குடியேறியவர்கள். டிசம்பர் 16, 1966-ல் நடராஜன் – சரோஜா இணையருக்குப் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை சென்னை தங்கசாலை சாரதா வித்யாலயாவிலும் எட்டு முதல் பத்து வரை தங்கசாலை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் மேல்நிலைக்கல்வியை சென்னை கன்னிகா புரத்தில் ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியிலும் முடித்தார். சென்னை தியாகராஜா கல்லூரி வேதியியல் பிரிவில் பாதியில் படிப்பை நிறுத்திக்கொண்டார். சென்னை தங்கசாலையில் (மிண்ட்) மெஷினிஸ்ட் என்று சொல்லப்படும் இயந்திரபணியாளர் என்ற பிரிவில் தொழிற்கல்வி முடித்தார்.

தனிவாழ்க்கை

அமிர்தம் சூர்யா லதாவை அக்டோபர் 29, 1990- அன்று வடபழனி கோவிலில் திருமணம் செய்துகொண்டார். L. K. காவ்ய ப்ரிய தர்ஷன், L. K. ஆகாஷ் அக்னி மித்ரன் என இரு மகன்கள்.

அமிர்தம் சூர்யா அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயந்திரப்பணியாளராகவும், அண்ணா நகரில் வங்கி ஒன்றில் தற்காலிக பணியாளராகவும் , கூடுவாஞ்சேரியில் ஒரு நிறுவன மேலாளராகவும், வியாசர்பாடி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மேலாளராகவும் பல்வேறு பணிகளுக்கு பின் கல்கி வார இதழில் 13- ஆண்டுகள் தலைமை துணை ஆசிரியராக பணியாற்றி பணிநிறைவு பெற்றார். முழுநேர எழுத்து பணியுடன் கருமாண்டி ஜங்ஷன் என்னும் யூ டியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

அமிர்தம் சூர்யாவின் முதல் படைப்பு கவிதை. தொடர்ந்து கவிதாசரண், நவீன விருட்சம், சுந்தர சுகன், கணையாழி,கோடு, கோடாங்கி என சிற்றிதழ்களில் எழுதினார். 2000-ல் ஜெயமோகன் முன்னுரையோடு உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை என்ற கவிதை தொகுப்பு வெளிவந்தது. கவிதைகளில் தேவ தேவன், தேவதச்சன், ரமேஷ் பிரேம், புனைகதையில் ஜெயமோகன், கட்டுரைகளில் சாரு நிவேதிதா , எஸ் ராமகிருஷ்ணன் என தன் முன்னோடிகளை கூறும் அமிர்தம் சூர்யா ஓவியங்களில் சந்துரு மாஸ்டரையும் நாடகங்களில் முருகபூபதியையும் பெரிதும் விரும்புபவர்.

தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்ட அமிர்தம் சூர்யா சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர். சென்னையில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை தேடி கண்டுபிடித்து அது குறித்து ஆசி பெறலாம் வாங்க என்ற தொடரை தீபம் இதழில் எழுதினார். பெண் சித்தர்கள் பற்றிய தொடரையும் கல்கியில் எழுதினார்.

விருதுகள்

  • திருப்பூர் தமிழ் சங்க விருது
  • தினகரன் பரிசு
  • ஸ்டேட் பாங்க் அவார்ட் விருது
  • எழுச்சி அறக்கட்டளை விருது (சிறந்த நாடக ப்ரதிக்காக)
  • சி.கனகசபாபதி விருது
  • அன்னம் விருது
  • செளமா விருது

நூல்கள்

  • உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை (2000) கவிதை - ஜெயமோகன் முன்னுரையுடன்
  • பகுதி நேர கடவுளின் நாட்குறிப்பேடு (2006) கவிதை - சந்துரு முன்னுரையுடன்
  • வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் (2012) கவிதை
  • ஓவிய ஃபிரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் - கவிதை - மனுஷ்ய புத்ரன் முன்னுரை
  • முக்கோணத்தின் நாலாவது பக்கம் (2001) கட்டுரை வெங்கட்சாமிநாதன் முன்னுரை
  • கடவுளை கண்டுபிடிப்பவன் 14-சிறுகதைகளின் தொகுப்பு - இந்திரா பார்த்த சாரதி முன்னுரை
  • மிளகு கொடியில் படரும் கவிதை – கவிதைகள் குறித்து முக்கிய கவிஞர்களின் கட்டுரைகளை தொகுத்தது
  • எறவானம் (நாவல்)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:01 IST