under review

சாத்தூர் பிச்சைக்குட்டி

From Tamil Wiki
Sattur-pichaikutti.jpg

எஸ்.பி. பிச்சைக்குட்டி (1922 - 1971) வில்லிசைக் கலைஞர். மருத்துவர், ஹோமியோபதி மருத்துவம் பயின்றவர். அலோபதி மருத்துவத்திலும் அனுபவம் கொண்டவர். முறைப்படி கர்நாடக சங்கீதமும், தமிழ் இலக்கியமும் பயின்றவர்.

பிறப்பு, கல்வி

Sattur-pichaikutti1.jpg

எஸ்.பி. பிச்சைக்குட்டி (சங்கரலிங்கம் பார்வதிநாதன் பிச்சைக்குட்டி) கோவில்பட்டியில் 1922-ம் ஆண்டு பிறந்தார். கோவில்பட்டி அரசு பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். பின் அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்தார். சென்னை பல்கலைகழகத்தில் இண்டர்மீடியட் படித்து தேர்ச்சிப் பெற்றார்.

பள்ளிப் படிப்பு முடித்ததும் தமிழ் ஆசிரியர்களிடம் தனியாக கம்பனையும், பாரதியையும் பயின்றார். கோவில்பட்டியில் பெட்டிக்கடை வைத்திருந்த கந்தசாமி செட்டியார் தமிழ் இலக்கியங்களை பிச்சைக்குட்டிக்கு கற்பித்தார். சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் வெளியிட்ட திருக்குறள் பரிமேலழகர் உரைநூலுக்கு முகவுரை எழுதிய கந்தசாமி முதலியாரிடம் தமிழ் பயின்றார். விளாத்திகுளம் சுவாமிகளிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார்.

தனி வாழ்க்கை

பிச்சைக்குட்டி ஆசிரியர் பயிற்சி முடித்து சாத்தூர் அருகே உள்ள தியாகராஜபுரம் ஊர்ப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின் சாத்தூர் அருகே உள்ள மேலக்கரந்தை ஆயிர வைசியர் நடுநிலைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் பள்ளி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால் வேலையை ராஜினாமா செய்தார். சாத்தூரில் பணியிலிருந்ததால் இவர் பெயர் சாத்தூர் பிச்சைக்குட்டி என்றானது.

டாக்டர்

பிச்சைக்குட்டி ஹோமியோபதி மருத்துவம் முறையாக பயின்றவர். அலோபதி மருத்துவமும் சில காலம் பயின்றார். வாழ்வதற்காக மருத்துவத்தைத் தொழிலாக மேற்கொண்டார். இதனால் சாத்தூர் வட்டாரத்தில் பொது மக்கள் இவரை டாக்டர் என்றழைத்தனர்.

கலை வாழ்க்கை

1948-ம் ஆண்டு சாத்தூர் பகுதியில் காலரா நோய் பரவலாக இருந்த காலத்தில் ஊர் மக்கள் அம்மனின் குற்றம் தான் இதற்கு காரணமென நம்பினர். சாத்தூர் மாரியம்மன் கோவிலில் விழா நடத்தினர். இதில் திருநெல்வேலி வில்லிசைக் கலைஞர் ஐயன் பிள்ளை கலை நிகழ்த்தினார். அன்று கேட்ட ஐயன் பிள்ளை வில்லிசை பிச்சைக்குட்டிக்கு வில்லிசையின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

ஆரம்ப நாட்களில் தன் பள்ளி மாணவர்களுக்கு வில்லிசைக் கலையை பயிற்றுவித்தார். அவர்களுடன் இணைந்து மேடையிலும் பாடினார். 1953-ம் ஆண்டு முறைப்படி மேடையேறினார். 1953-ம் ஆண்டு நிகழ்ந்த தமிழக தேர்தல் சமயத்தில் பிச்சைக்குட்டி முத்துராமலிங்க தேவரை ஆதரித்து நிகழ்ச்சி நடத்தினார். இந்நிகழ்ச்சி கோவில்பட்டி அருகே உள்ள மேலைக்கரந்தை கிராமத்தில் நிகழ்ந்தது. பிறகு 1971-ல் இறக்கும் வரை முழுநேரக் வில்லிசைக் கலைஞராக வாழ்ந்தார். பிச்சைக்குட்டி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

வில்லிசை வெகு ஜனங்கள் மத்தியில் பிரபலமாகியதில் பிச்சைக்குட்டிக்கு முக்கிய பங்குண்டு. தமிழகம் மட்டுமின்ற மலேசியா, சிங்கப்பூர், இலங்கை நாடுகளில் வில்லிசை நிகழ்ச்சி நடத்தினார். இந்தியாவில் மும்பை, கல்கத்தா, டில்லி, ரிஷிகேஷ் போன்ற இடங்களில் நிகழ்ச்சி நடத்தினார்.

பிச்சைக்குட்டி தன் சிறுவயதில் நாட்டார் பாடல்களைச் சேகரித்தார். விளாத்திகுளம் சுவாமிகளிடம் பயின்ற கர்நாடக சங்கீதமும், பிறரிடம் பயின்ற தமிழ் இலக்கியமும் பிச்சைக்குட்டி வில்லுப்பாட்டில் பல மாற்றங்கள் கொண்டு வர முக்கிய காரணமாக அமைந்தன.

பிச்சைக்குட்டி வில்லிசை நீண்ட நேரம் நிகழ்ந்து வந்த மரபை தளர்த்தி மூன்று மணி நேர நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினார். வில்லிசையில் முக்கிய பாடகர்கள் பாடும் போது இசைக்கருவிகள் மெல்ல ஒலிக்க வேண்டும் எனவும், பாடல், விளக்கம் இரண்டையும் சொல்லும்போது தெளிவாக சொல்ல வேண்டும் எனவும் மாற்றினார். உடுக்கு, குடம், டோலக்கு, ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகள் வில்லுப்பாட்டில் இசைக்கும் போது அதற்கான நெறிமுறைகளைக் கொண்டுவந்தார்.

தலைப்புகள்

பிச்சைக்குட்டி வில்லிசையில்,

  • கண்ணகி கதை
  • பாரதியின் பாஞ்சாலி சபதம்
  • இந்திய சுதந்திர வரலாறு
  • கட்டபொம்மன் கதை
  • காந்தி மகான் கதை

முக்கியமானவை.

பிச்சைக்குட்டி தீவிர நவீன தமிழிலக்கிய வாசகர். புதுமைப்பித்தன் முழுதும் படித்தவர். இதனை மலேசிய பத்திரிக்கை பேட்டியிலும், கி. ராஜநாராயணன் தாமரை இதழுக்காக கண்ட பேட்டியிலும் குறிப்பிடுகிறார். 1952-ம் ஆண்டு திருநெல்வேலியில் புதுமைப்பித்தன் நினைவு நிகழ்வில் புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டாகப் பாடினார்.

பிச்சைக்குட்டி என்றதும் இவர் நடத்திய கண்ணகி கதை, பாரதியின் பாஞ்சாலி சபதம், இந்திய சுதந்திர வரலாறு, கட்டபொம்மனின் கதை, காந்தி மகான் கதை போன்றவை முக்கியமானவை.

மற்ற கலைஞரிடம் இருந்து இவர் வித்தியாசமானவர். குறிப்பாக நாட்டார் கலைஞர்களிடம் இருந்து முழுக்கவும் வேறுபட்டவர். இதில் அகலிகை, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சாப விமோசனம் போன்ற புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றியும் பாடினார்.

கலை இடம்

Sattur-pichaikutti2.jpg

பிச்சைக்குட்டியை பற்றி விரிவாக செய்தி சேகரித்த பேராசிரியர் வி.கே. அரசு, ”இவர். தன் நிகழ்ச்சிக்குரிய பாடல்களை இவரே எழுதுவார். பண்களை இவரை அமைப்பார். ஒரு முறை முக்கூடல் தபிச் சொக்கலால் பீடி விளம்பரத்திற்காக வீதியில் பாடிச் சென்றவர்களின் பாட்டைக் கேட்டு அதே மெட்டில் ஒரு பாட்டை உருவாக்கி இருக்கிறார். இந்தப் பண்ணுக்கு தபிச் சொக்கலால் என்ற பெயரை இட்டியிருக்கிறார். ஒயில் கும்மி பாடல்களை தன் நிகழ்ச்சியில் முழுதும் பயன்படுத்தி இருக்கிறார்” என்கிறார்.டி.கே. சிதம்பரநாத முதலியார் இல்லஸ்டட் வீக்கிலி இதழில் 1953-ம் ஆண்டு சாத்தூர் இசைக்கலைஞர் என்னும் தலைப்பில் விரிவான கட்டுரை எழுதினார். இதில், 'வில்லுப்பாட்டு' என்னும் நாட்டுப்புறக் கலையை சாதாரண பாமர மக்களிடம் கொண்டு சென்றவர்” என பிச்சைக்குட்டியை பற்றிக் குறிப்பிடுகிறார். கல்கி கிருஷ்ணமூர்த்தி, பி.டி. ராஜன், என்.எஸ். கிருஷ்ணன், குன்றக்குடி அடிகளார், சாமிநாத சர்மா, ம.பொ.சி, தி.க. சண்முகம், பி. ஸ்ரீ, கொத்தமங்கலம் சுப்பு என பலர் பிச்சைக்குட்டியை பாராட்டியுள்ளனர். ’நாயகன்’ என பிச்சைக்குட்டியை எழுத்தாளர் சங்கம் பாராட்டி இருக்கிறது. (ஜனசக்தி அக் 19, 1959 தினமலர் அக் 24,1959).

விருதுகள்

  • பிச்சைக்குட்டியை குன்றக்குடி அடிகளார் 'வில்லிசை வேந்தர்' என வாழ்த்தினார்.
  • சுவாமி சிவானந்தா வில்லிசை பிரவீண என்றழைத்தார்.
  • 1970-ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது.

மறைவு

பிச்சைக்குட்டி தன் 49-ம் வயதில் 1971-ல் இயற்கை எய்தினார்.

பிச்சைக்குட்டி பற்றிய நூல்கள்

  • எழுத்தாளர் சோ. தர்மன் சாத்தூர் பிச்சைக்குட்டியை பற்றி வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி என்னும் வாழ்க்கை வரலாறு நூல் எழுதியுள்ளார்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page