under review

விளாத்திக்குளம் சுவாமிகள்

From Tamil Wiki
சுவாமிகள் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுவாமிகள் (பெயர் பட்டியல்)
விளாத்திக்குளம் சுவாமிகள்
விளாத்திக்குளம் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு
விளாத்திக்குளம் சுவாமிகள் நினைவுத்தூண்
சுவாமிகள் இளமையில்
விளாத்திக்குளம் சுவாமிகள்
விளாத்திக்குளம் சுவாமிகள் மணிவிழா
விளாத்திக்குளம் சுவாமிகள் சமாதி

விளாத்திக்குளம் சுவாமிகள் (செப்டம்பர் 24, 1889- ஏப்ரல் 25, 1965) தமிழக இசைமேதை. தானாகவே கற்றுக்கொண்டு இசைபாடும் திறன் பெற்றவர். காடல்குடி குறுநிலமன்னர் மரபில் வந்தவர். இயற்பெயர் நல்லப்பசுவாமி பாண்டியன்.

பிறப்பு, கல்வி

முன்னோர்

விளாத்திக்குளம் சுவாமிகள் ராஜகம்பளத்தார் எனப்படும் தொட்டிய நாயக்கர் மரபில், காடல்குடி குறுநிலமன்னர்களின் வழியில் பிறந்தவர். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் தாயார் ஆறுமுகத்தாய் அம்மாளின் உடன்பிறந்த சகோதரியான சண்முகத்தாய் அம்மாள் காடல்குடி சிற்றரசர் வீரகஞ்செய பாண்டியனை மணந்தார். அக்டோபர் 16, 1799-ல் வீரபாண்டிய கட்டப்பொம்மனும் வீரகஞ்செய பாண்டியனும் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தூக்கில் போடப்பட்டு இறந்தனர்.

வீரகஞ்செய பாண்டியனுக்கும் சண்முகத்தாய் அம்மாளுக்கும் லவவீரகஞ்செய பாண்டியன், குசலவீரகஞ்செய பாண்டியன் என இரு மகன்கள். குசலவீரகஞ்செய பாண்டியன் அக்டோபர் 12, 1801-ல் ஆங்கிலேய அரசால் மருது சகோதரர்களுடன் தூக்கிலிடப்பட்டார். குசலவீரகஞ்செய பாண்டியனுக்கும் அவர் மனைவி வெள்ளையம்மாளுக்கும் பிறந்தவர் வீரகஞ்செய பாண்டியன். வீரகஞ்செய பாண்டியனுக்கும் அவர் மனைவி சுப்புலட்சுமிக்கும் வீரகஞ்செய சாலை துரைபாண்டியன் என்னும் மகன்.

வீரகஞ்செய சாலை துரைப்பாண்டியனுக்கும் ஜக்கம்மாளுக்கும் மல்லம்மாள் என்னும் மகளும் சோமசுந்தர ஜெகவீரகஞ்செய பாண்டியன் என்னும் மகனும் பிறந்தனர். சோமசுந்தர ஜெகவீரகஞ்செய பாண்டியனுக்கும் கோவம்மாள் என்னும் பாக்கியலட்சுமிக்கும் ஐந்து குழந்தைகளில் ஒருவராக பிறந்தார் விளாத்திக்குளம் சுவாமிகள்.

பெற்றோர்

விளாத்திக்குளம் சுவாமிகளின் இயற்பெயர் நல்லப்பசாமி பாண்டியன். சோமசுந்தர ஜெகவீரகஞ்செய பாண்டியன் - பாக்கியலட்சுமி இணையருக்கு செப்டம்பர் 24, 1889-ல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், காடல்குடி கிராமத்தில் விளாத்திக்குளம் சுவாமிகள் பிறந்தார்.

கல்வி

ஆங்கிலேய அரசை எதிர்த்து போரிட்டமையால் காடல்குடியில் இருந்த அவர்களின் அரண்மனை அரசால் தகர்க்கப்பட்டது. ஆகவே அவர்கள் தங்கள் பாளையத்துக்கு உட்பட்ட விளாத்திக்குளத்தில் குடியேறினர். வீட்டிலேயே கவிராயர்கள் வந்து தமிழ் கற்பித்தனர். ஆனால் முறைப்படி இசை கற்றுக்கொள்ளவில்லை.

தனிவாழ்க்கை

விளாத்திக்குளம் சுவாமிகள் என அழைக்கப்பட்டாலும் அவர் துறவி அல்ல. இசைத்திறனாலும், இசையை யோகப்பயிற்சியாகச் செய்தமையாலும் சுவாமிகள் என அழைக்கப்பட்டார். விளாத்திக்குளம் சுவாமிகளுக்கு மூன்று மனைவிகள். மூத்த மனைவி சுவாமிகளின் அக்கா தங்கத்துரைச்சியின் மகள் செல்லம்மாள். அவர்களுக்கு சோமசுந்தர கண்ணுசாமி என்னும் மகன். இரண்டாவது மனைவி பூசையம்மாள். அவர்களுக்கு வாரிசுகள் இல்லை. மூன்றாவது மனைவி சென்னம்மாள். அவர்களுக்கு பாலம்மாள் என்னும் மகள் பிறந்தாள்.

விளாத்திக்குளம் சுவாமிகள் சைவ உணவுப்பழக்கம் கொண்டவர் என்றும், மஞ்சள் நிறத்துண்டும் வெள்ளைவேட்டியும் அணிபவர் என்றும், பச்சைநிறமான சால்வையை பயணங்களில் அணிவார் என்றும் அவருடைய வரலாற்றை எழுதிய என்.ஏ.எஸ்.சிவக்குமார் குறிப்பிடுகிறார். விளாத்திக்குளம் சுவாமிகள் சிவதீக்கை பெற்றவர், கழுத்தில் ஒற்றை உருத்திராக்கம் அணிந்திருப்பார். கரிய நிறமும், ஆறடிக்கு குறையாத உயரமும் கொண்டவர் என குறிப்பிடப்படுகிறது.

விளாத்திக்குளம் சுவாமிகள் அவருடைய அக்கா தங்கத்துரைச்சி அம்மாளின் மகன் பொன்னுச்சாமியின் இல்லத்தில் இறுதிக்காலத்தில் இருந்தார். அங்கேயே காலமானார்.

இசைவாழ்க்கை

விளாத்திக்குளம் சுவாமிகளின் இசைத்திறன் பற்றி வெவ்வேறு வாய்மொழிச் செய்திகளே புழக்கத்திலுள்ளன

  • விளாத்திக்குளம் சுவாமிகள் மைசூர் மகாராஜாவின் அவையில் இலட்சுமணபிள்ளை என்பவர் ஒரே ராகத்தை தொடர்ச்சியாக மூன்றுநாட்கள் பாடி பரிசு வாங்கிய பின் விட்ட அறைகூவலை ஏற்று கரகரப்ரியா ராகத்தை ஐந்துநாட்கள் தொடர்ச்சியாக பாடி பரிசு பெற்றார்.
  • விளாத்திக்குளம் சுவாமிகள் இசையை இடையறா யோகமாகப் பயின்றவர். தவளைகளின் ஓசை, மில்சங்கு ஓசை போன்றவற்றையும் நாதமாகவே அணுகி அவற்றின் சுருதியுடன் இணைந்து பாடுபவர் என கி.ராஜநாராயணன் பதிவுசெய்கிறார்
  • விளாத்திக்குளம் சுவாமிகள் பாடுவதை விடவும் ராகங்களை முனகுவது, சீழ்க்கை அடிப்பது ஆகியவற்றையே பெரிதும் விரும்பினார். மேடைக்கச்சேரியை பெரும்பாலும் தவிர்த்தார். அவருடைய பதிவுசெய்யப்பட்ட கச்சேரிகளில் அவருடைய மேதமை வெளிப்படவில்லை என்று சொல்லும் கி.ராஜநாராயணன் கருப்பட்டியின் இனிப்பு அதை பொட்டலம் கட்டிய பனையோலைப் பெட்டியில் இருக்காது என்கிறார்.
  • சுவாமிகளுக்குப் பிடித்த ராகங்கள் கரகரப் பிரியா, காம்போதி, சண்முகப் பிரியா .
இசைநண்பர்கள்
  • விளாத்திக்குளம் சுவாமிகள் சி.சுப்ரமணிய பாரதியாருக்கு அணுக்கமானவராக இருந்தார் எனப்படுகிறது
  • டி.கே.சிதம்பரநாத முதலியார் விளாத்திக்குளம் சுவாமிகளின் இசையை ரசித்து குறிப்பிட்டிருக்கிறார்.
  • மதுரகவி பாஸ்கரதாஸ் விளாத்திக்குளம் சுவாமிகளுக்கு அணுக்கமானவர். பாஸ்கரதாசின் நாள்குறிப்புகளில் அதைப்பற்றிய செய்திகள் உள்ளன
  • கி. ராஜநாராயணன் விளாத்திக்குளம் சுவாமிகளுக்கு நெருக்கமானவர். விளாத்திக்குளம் சுவாமிகள் பற்றி நிறைய பதிவுகள் எழுதியிருக்கிறார்
  • கு. அழகிரிசாமி விளாத்திக்குளம் சுவாமிகளை அறிந்திருந்தார். கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களில் அக்குறிப்புகள் உள்ளன.
  • வில்லிசை வேந்தர் என அழைக்கப்பட்ட பிச்சைக்குட்டி விளாத்திக்குளம் சுவாமிகளின் இசை நண்பர்
ஆசிரியர்கள்
  • ராஜ மன்னார்குடி நாதஸ்வர கலைஞர் சின்னப்பக்கிரி பிள்ளை
புரவலர்கள்
  • ஆற்றங்கரை ஜமீன்தார் பெத்தண்ண பூபதி,
  • திண்டுக்கல் அங்குவிலாஸ் புகையிலை விற்பனையாளர் முத்தையா பிள்ளை
  • சூரங்குடி முனியாண்டிப் பிள்ளை
  • சேலம் குலாலர் சங்கத் தலைவர் வள்ளியப்பச் செட்டியார்
  • சேலர் குலாலர் மட நிர்வாகி நடராஜன்
மாணவர்கள்
  • கட்டப்பூச்சி முதலியார்
  • வி.எம் துரைராஜ் தவுல் வித்வான்
  • சோழவந்தான் ரெங்கையா
  • மீனாட்சியமாள்
  • புதூர் சூசை(கிளாரினெட் )
  • மேல் மாந்தை பச்சையப்பசாமி
  • சூரங்குடி வெட்டூர் சாமி
  • பொன்னுப்புலவர்
  • சந்திரமதி செல்லையா கோனார்
  • வேம்பார் இராஜமணி நாடார்
  • மாப்பிள்ளைச்சாமி
  • பொன்னுசாமிக் கோனார்

மறைவு

விளாத்திக்குளம் சுவாமிகள் ஏப்ரல் 25, 1965-ல் மறைந்தார்.

பாராட்டுகள் நினைவுகூரல்கள்

மணிவிழா

1960-ல் கோயில்பட்டியில் காருக்குருறிச்சி அருணாச்சலம், புதூர் முருகையா ஆசிரியர், கே.பி.எஸ்.நாராயணன், முத்துக்கிருஷ்ணன் முயற்சியால் விளாத்திக்குளம் சுவாமிகளின் மணிவிழா கொண்டாடப்பட்டது. சிவாஜி கணேசன், ம.பொ.சிவஞான கிராமணி, ஏ.பி.நாகராஜன், டி.கே.சண்முகம். டி.கே.பகவதி ஆகியோர் கலந்துகொண்டனர்

சேலம் குலாலர் சங்க சார்பில் அதே ஆண்டில் கன்யாகுமரி மாவட்ட ஆட்சியர் வி.கே.சி.நடராஜன் முயற்சியால் சேலத்தில் மணிவிழா கொண்டாடினர்.

நூற்றாண்டு விழா

1990-ம் ஆண்டில் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.ஆறுமுகம் இ.ஆ.ப தலைமையில் விளாத்திக்குளம் சுவாமிகளின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. சுவாமிகளின் மகள் பாலம்மாள் கௌரவிக்கப்பட்டார்.

நினைவிடம்

விளாத்திக்குளம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் கலையரங்கம் நல்லசுவாமி கலையரங்கம் என அழைக்கப்படுகிறது. எஸ்.நாகராஜன் முயற்சியால் 1970-ல் இது உருவாக்கப்பட்டது

விளாத்திக்குளத்தில் விளாத்திக்குளம் சுவாமிகள் நினைவுத்தூண் ஜூன் 1, 2020-ல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்துவைக்கப்பட்டது. அங்கே அவர் நினைவாக ஓர் இசைப்பள்ளி அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை வரலாறு

2017-ல் என்.ஏ.எஸ்.சிவக்குமார் அட்சரம் பதிப்பகம் சார்பாக ‘இசை மகாசமுத்திரம் விளாத்திக்குளம் சுவாமிகள்’ என்னும் வாழ்க்கைவரலாற்றுத் தொகுப்புநூலை உருவாக்கியிருக்கிறார். ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்துள்ளார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Oct-2022, 07:52:00 IST