under review

சந்திரகாந்தன்

From Tamil Wiki
சந்திரகாந்தன் (படம் நன்றி: கீற்று தளம்)

சந்திரகாந்தன் (அ. குப்புசாமி: அருணாசலம் குப்புசாமி; சந்திரன்) (செப்டம்பர் 22, 1957 – மே 09, 2021) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர். வங்கி ஊழியராகப் பணியாற்றினார். பொதுவாசிப்புக்குரிய நூல்களையும், சிறார் நூல்களையும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

குப்புசாமி என்னும் இயற்பெயர் கொண்ட சந்திரகாந்தன், செப்டம்பர் 22, 1957 அன்று, இராமநாதபுரத்தில் உள்ள இரா. காவனூர் கிராமத்தில், சு. அருணாசலம் – சேதுபருவதம் இணையருக்குப் பிறந்தார். காவனூர் உயர்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். இராமநாதபுரம் ஸ்வாட்ஸ் பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார். புதுமுக வகுப்பை (பி.யூ.சி.) மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில், கணிதத்தில் இளம் அறிவியல் (பி.எஸ்ஸி.) பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சந்திரகாந்தன்

தனி வாழ்க்கை

சந்திரகாந்தன் இந்தியன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். இவரது திருமணம் ஜெயகாந்தனின் தலைமையில் நடைபெற்றது. மனைவி: உமா மகேஸ்வரி; மகன் அரவிந்தன்.

சந்திரகாந்தன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

சந்திரகாந்தன், நூலகங்கள் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். ஜெயகாந்தன் படைப்புகள் மீது கொண்ட ஈர்ப்பால், அவரது பெயரிலுள்ள 'காந்தன்' என்பதுடன் ‘சந்திரன்’ எனும் தனது அழைப்புப் பெயரை இணைத்து 'சந்திரகாந்தன்' என்ற புனை பெயரில் எழுதினார். ’அவர்கள் குருதிகளில் ஒரு வரலாறு எழுதப்படுகிறது’ என்ற தலைப்பிலான சந்திரகாந்தனின் முதல் சிறுகதை, 1975-ல், தாமரை இதழில் வெளியானது. தொடர்ந்து கல்பனா, ‘தாமரை’, ‘தொடரும்’, ‘புதிய பாா்வை’ எனப் பல இதழ்களில் சிறுகதைகளை எழுதினார். முதல் சிறுகதைத் தொகுதி 'புல்லைப் புசியாத புலிகள்'. முதல் நாவல், 'வைகையில் வெள்ளம் வரும்', கல்பனா இதழில் வெளியானது.

சந்திரகாந்தன் ‘அரவிந்தப்பன்’ என்ற பெயரில் மொழியாக்கப்பணிகளில் ஈடுபட்டார். சாகித்திய அகாதெமிக் கருத்தரங்குகளில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். சந்திரகாந்தனின் படைப்புகள் சில கல்லூரிகளில் பாடநூல்களாக வைக்கப்ட்டன. சந்திரகாந்தன் தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடத்திட்டக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.

இதழியல்

சந்திரகாந்தன், ‘தொடரும்’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார். அவ்விதழில் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார். கவிஞர் மீரா, ஜெயகாந்தன், பொன்னீலன், நா.தர்மராஜன், குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரை நேர்காணல் செய்து வெளியிட்டார்.

பொறுப்புகள்

விருதுகள்

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது

சந்திரகாந்தன் அஞ்சலி

மறைவு

சந்திரகாந்தன், உடல்நலக்குறைவால் மே 09, 2021 அன்று தனது 64-ம் வயதில் காலமானார்.

நினைவு

சந்திரகாந்தனின் வாழ்க்கையை, க. அமுதா எழுதினார். அந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து 2015-ல் வெளியிட்டது.

மதிப்பீடு

சந்திரகாந்தன் பொது வாசிப்புக்குரிய படைப்புகளை எழுதினார். பொதுவுடைமைக் கட்சி சார்ந்து செயல்பட்டார். விளிம்புநிலை சமூகத்தினரின் பிரச்சனைகளையும், பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் தனது படைப்புகளில் முன்வைத்தார். சந்திரகாந்தன், பொதுவுடைமை இயக்க எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

சிறார் நூல்கள்
  • மாணவர்களுக்குப் பாரதி
  • உயர்வுக்கு வழிகாட்டும் ஈசாப் கதைகள்
  • உயர்வுக்கு வழிகாட்டும் ஈசாப் கதைகள் 100
  • அறிவூட்டும் ஈசாப் கதைகள் 100
  • அனைவரும் படிக்க ஈசாப் கதைகள் 100
சிறுகதைத் தொகுப்பு
  • புல்லைப் புசியாத புலிகள்
  • சப்தக்குழல்
  • ஆளுக்கொரு கனவு
  • குதிரை வீரன் கதை
நாவல்
  • வைகையில் வெள்ளம் வரும்
  • தழல்
  • அண்டரண்டபட்சி
மொழிபெயர்ப்பு
  • எா்னஸ்டோ சே குவேரா
தொகுப்பு நூல்கள்
  • பாரதியாா் கவிதைகள்
  • இருபதாம் நூற்றாண்டின் சில சிறுகதைகள்
பதிப்பாசிரியர்
  • ‘தொடரும்’ சிறப்பு மலர் (1993)
  • தொடரும்’ ஒளித்திரள் (2002)
  • ஜெயகாந்தம் (2020)

உசாத்துணை


✅Finalised Page