under review

சட்டநாதன்

From Tamil Wiki
சட்டநாதன்

சட்டநாதன் (பிறப்பு: ஏப்ரல் 22, 1940) ஈழத்து எழுத்தாளர். ஈழத்தின் முதன்மைச் சிறுகதையாளர்களில் ஒருவர்.

பிறப்பு - கல்வி

இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை என்ற கிராமத்தில் கனகரத்தினம் - பாக்கியலட்சுமி இணையருக்கு ஏப்ரல் 22 ,1940 அன்று சட்டநாதன் பிறந்தார். தமிழகத்தில் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

1972-ம் ஆண்டு ஜெயலட்சுமியை சட்டநாதன் திருமணம் செய்துகொண்டார்.

சட்டநாதன் 27 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

இதழியல்

சட்டநாதன் 1967 முதல் 1971 வரை, இலங்கையின் தேசிய தமிழ் பத்திரிகையான வீரகேசரியில் பணிபுரிந்தார். 1972-74 காலப்பகுதியில் ஈழத்தில் வெளிவந்த 'பூரணி' என்ற இலக்கிய இதழின் இணையாசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில் ஈழத்தில் வெளிவந்த 'பூரணி' என்ற இலக்கிய இதழின் இணையாசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றினார். சட்டநாதன் படைப்புத்துறையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிய 1970-களின் ஆரம்ப ஆண்டுகளில் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத்துறை ஒரு முக்கிய வரலாற்றுக் கட்டத்தை சந்திந்திருந்தது. 1930-களின் பின்பகுதியில் 'முதல்மூவர்' எனப்படும் இலங்கையர்கோன், சம்பந்தன், சி. வைத்திலிங்கம் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட வடிவச் செம்மையுடன் பயிலத்தொடங்கிய ஈழத்துச் சிறுகதை, 1950-60 காலகட்டத்தில் ஈழமண்ணின் சமூக-பண்பாட்டுப் பிரச்சினைகளில் ஆழமாகக் காலூன்றிய போது 'உருவமா? உள்ளடக்கமா? எதற்கு முதன்மை?’ என்ற வாதம் உருவானது. இந்த வாதப் பிரதிவாத அலை ஓரளவு ஓய்ந்து, கலைத்தன்மை - சமூக அக்கறை ஆகிய இரண்டுமே ஒரு படைப்பின் சமநிலைக்கூறுகள் என்ற உணர்வோட்டம் தலையெடுத்த 1970-களின் முதல் தலைமுறைப் படைப்பாளிகளில் சட்டநாதன் ஒருவர்.

விருதுகள்/பரிசுகள்

  • தமிழியல் விருது
  • வட மாகாண சாகித்திய விருது
  • தேசிய சாகித்திய விருது
  • வட மாகாண இலக்கிய விருது
  • கனக செந்திநாதன் விருது
பவள விழா சிறப்பிதழ்

2015-ம் ஆண்டு, யாழப்பாணத்திலிருந்து வெளிவரும் 'ஜீவநதி' இலக்கிய இதழ், சட்டநாதனுக்கு பவளவிழா சிறப்பிதழை வெளியிட்டது.

இலக்கிய இடம்

"சட்டநாதனின் கதைகள் மொத்தமும் மனித உறவுகளைக் கூர்ந்து நோக்க முனைபவைதான். அதிலும் குறிப்பாக ஆண்-பெண் உறவு குறித்த விசாரணகளை நோக்கி நகர்பவை. சட்டநாதனின் பெண்கள் தன்னொழுக்கம் மற்றும் கற்பை பெரிதும் பூஜிப்பவர்கள். இங்கு தவம் அவனுடன் தற்செயலாக சபலத்தால் உறவுகொண்டு வருந்துவதும் அவனை மனமுவந்து கணவனாக ஏற்றுக்கொள்வதும் தமிழர் பண்பாட்டின் வேர்கள் அவளில் ஊடுறுவியுள்ளதைக் காட்டுகிறார். சட்டநாதனின் அநேக பெண்கள் இப்படித் தமிழர் பண்பாட்டுக்கு மிகவும் விசுவாசமானவர்களாக இருக்கின்றனர்" - என்கிறார் எழுத்தாளரும் விமர்சகருமான ஜிப்ரி ஹாசன்.

"அனுபவம் என்பது வாழ்வின் தன்மையை உணர்த்துகின்ற தீவிர குணம்கொண்ட நுண்தளம். இத்தளத்தின் விரிவு உச்சமாக வெளிப்படும்போதுதான் கலைத்துவம் சிறக்கும். வாழ்வைச் செழுமைப்படுத்தும் கலைத்தூண்டலே, சமூகப் பிரக்ஞையாக மேற்கிளம்பும். சட்டநாதனிடம் இந்தப் பிரக்ஞை வெகு இயல்பாக உள்ளது. புதுமைப்பித்தனின் மரபில் வரும் இந்தக்கலைத்தூண்டல், சட்டநாதனிடம் செறிவாக உள்ளது. இது கலை அனுபவமாக - கலைத்தூண்டலாக - புதிய சாளரங்களைத் திறந்துவிடுகிறது" என்று ஈழத்தின் இதழாளரும் விமர்சகருமான மதுசூதனன் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

மாற்றம்
சிறுகதைத் தொகுப்புகள்
  • மாற்றம் (1980)
  • உலா (1992)
  • சட்டநாதன் கதைகள் (1996)
  • புதியவர்கள்- (2006)
  • முக்கூடல் - (2010)
  • பொழிவு - (2016)
  • தஞ்சம் (2018)
கவிதை
  • நீரின் நிறம் (2017)
  • துயரம் தரும் அழகு (2019)
குறுநாவல்
  • நீளும் பாலை
  • தாவடிக்காரர்கள்
நாவல்

உயிரில் கலந்த வாசம் (2019)

சட்டநாதனின் சிறுகதைகள் வெளியான ஆங்கில நூல்கள்
  • Journal of south asian literature Vol 22 - Asian Studies centre - Michigan Sate university - USA
  • The Penguin New Writing in Sri Lanka - Edited by Prof DCRA Goonatileke
  • Lutesong and Lament in Sri Lanka - Edited by Chelva Kanaganayagam
  • A Lankan Mosaic - Translations of Sinhala and Tamil Short Stories - Edited Ashley Halpe, M.A. Nuhman, Ranjini Obeyesekere - Three Wheeler Press
  • Bridging Connections - An anthology of Sri Lankan Short Stories - Rajiva Wijesinha

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Nov-2023, 11:55:44 IST