under review

சங்கவருணர் (நாகரியர்)

From Tamil Wiki

சங்கவருணர் என்னும் நாகரியர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

சங்கவருணர் என்னும் நாகரியர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். நாகரியர் என்னும் இயற்பெயரை கொண்டவர். சங்கவருணன் என்ற சொல்லுக்கு வளைவருணன் என பொருள். நாகநாட்டில் பிறந்து தமிழகம் வந்தவர் என கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

சங்கவருணன் என்னும் நாகரியர் பாடிய பாடல் புறநானூறில் 360-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தந்துமாறன் என்னும் சிற்றரசனுக்கு நல்லாட்சிக்கான அறவுரையாக காஞ்சித் திணையில் பெருங்காஞ்சி துறையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

செல்வம் குறையாது நல்லாட்சி செய்யும் அரசனுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள்

  • மிகுதியாக உண்ணுதல் கூடாது.
  • சினத்தை கட்டுக்குள் வைத்து அளவான சிறுசினத்துடன் இருத்தல் வேண்டும்.
  • பிறரது சொற்களை திறந்த மனதுடன் கேட்கும் செவியுடையவராக இருத்தல் வேண்டும்.
  • நுண்ணுணர்வால் இரவலருக்கு உரியதை வழங்கும் பண்பினை பெற்றிருத்தல்.
  • கலங்கிய கள்ளும் தெளிந்த கள்ளும் நன்கு தாளித்த துவையலையும் பண்புடன் பேசி அன்பாக மகிழ்ந்து கொடுக்கும் பெருங்கொடையாளராக இருத்தல் வேண்டும்.
  • பரிசிலை நாடி வரும் இரவலர்க்கு நிரம்ப கொடுத்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.
  • உவமை: காண்பவருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் கள்ளிச்செடி மிகுந்த சுடுகாட்டில் பாடையில் கொண்டுபோய் இறக்கப்பட்டு, புலையன் புல்பரப்பிய தரையில் கள்ளுடன் படைக்கப்பட்ட சோற்றை உண்டு, பிணத்தின் வாயில் வாக்கரிசி இட்டாலும் மக்கள் இத்தகு நல்லறங்களை உணர்வதில்லை.

பாடல் நடை

புறநானூறு - 360

  • திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி

 பெரிதுஆராச் சிறுசினத்தர்
சிலசொல்லால் பலகேள்வியர்
நுண்ணுணர்வினாற் பெருங்கொடையர்
கலுழ்நனையால் தண்தேறலர்
கனிகுய்யாற் கொழுந்துவையர்
தாழ்உவந்து தழூஉமொழியர்
பயன்உறுப்பப் பலர்க்குஆற்றி
ஏமமாக இந்நிலம் ஆண்டோர்
சிலரே; பெரும! கேள்இனி; நாளும்
பலரே தெய்யஅஃது அறியா தோரே;
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;
இன்னும் அற்றதன் பண்பே; அதனால்,
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்
நச்சுவர நிரப்பல் ஓம்புமதி............................

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jan-2025, 17:41:56 IST