under review

சகஜானந்தர்

From Tamil Wiki
சகஜானந்தர்

சகஜானந்தர் (சுவாமி சகஜானந்தர்; சுவாமி சகஜானந்தா; சஹஜானந்தர்; முனுசாமி; சிகாமணி) (ஜனவரி 27, 1890 - மே 01, 1969), ஆன்மிகத் துறவி. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை உயர்வுக்காகப் போராடினார். சட்டமன்ற உறுப்பினராகி பல்வேறு சமூக நற்பணிகளை மேற்கொண்டார். ஆன்மிக, இலக்கிய நூல்களை எழுதினார். இதழாளராகச் செயல்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

முனுசாமி என்னும் இயற்பெயர் கொண்ட சகஜானந்தர், ஜனவரி 27, 1890-ல், ஆரணி அருகிலுள்ள மேல் புதுப்பாக்கம் கிராமத்தில், ஆதிதிராவிடர் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை – அலமேலு தம்பதியருக்குப் பிறந்தார். மாசிலாமணி என்ற மூத்த சகோதரரும், எட்டியம்மாள், பாக்கியம் அம்மாள், கமலம் அம்மாள் என மூன்று சகோதரிகளும் இவர் உடன் பிறந்தவர்கள்.

புதுப்பாக்கத்தில் உள்ள பிராட்டஸ்டண்டு கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த அமெரிக்கன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். திண்டிவனம் நகரில் உள்ள அமெரிக்கன் ஆர்க்காடு சமயப்பரப்பு ஊழியர்கள் நடத்திய உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் கல்வி பயின்றார். பள்ளியில் இவரது பெயர் முனுசாமி என்பதிலிருந்து ‘சிகாமணி’ என்பதாக மாற்றம் செய்யப்பட்டது.

கிறித்தவப் பாதிரிமார்கள் சிகாமணியைக் கிறித்தவச் சமயத்திற்கு மதம் மாற்ற முற்பட்டனர். மத மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டால் எதிர்காலத்தில் அவர் விரும்பும் மேல்படிப்பைப் படிக்க உதவுவதாக வாக்களித்தனர். ஆனால், மதம் மாறித்தான் அவற்றைப் பெற வேண்டும் என்றால், அந்த வகைக் கல்வியே தனக்குத் தேவையில்லை என்று உறுதியாக மறுத்தார் சிகாமணி. அதனால் எட்டாம் வகுப்போடு சிகாமணியின் கல்வி முற்றுப்பெற்றது.

ஆன்மிக வாழ்க்கை

சமய ஆர்வம்

சிகாமணி தன் பெற்றோர்கள் வேலை பார்த்த கோலார் தங்கவயலுக்குச் சென்றார். ஆனால், அங்கு அவர் மேற்கல்வி கற்க வழியில்லாமல் இருந்தது. அந்நாட்களில் கோலாரில் முதலியார் ஒருவர் தினந்தோறும் புராணச் சொற்பொழிவு செய்து வந்தார். சிகாமணி நாள் தவறாது அப்புராணச் சொற்பொழிவில் கலந்துகொண்டார். இந்து சமயத்தின் பெருமை, புகழ், தொன்மை, அதன் தத்துவங்கள் எனப் பலவற்றை அறிந்துகொண்டார். இந்து சமய, ஆன்மிகத் தத்துவ நூல்கள் பலவற்றை வாங்கி, அவற்றின் மூலம் சமயப் புரிதல் பெற்றார்.

1905-ல், சிகாமணியின் பெற்றோர் கோலாரைவிட்டுத் தங்கள் ஊராகிய மேல்புதுப்பாக்கத்தில் குடியேறினர். நிலக்கிழார் ஒருவரது பண்ணையில் அவர்களுக்கு வேலை கிடைத்து. சிகாமணிக்கும் அப்பண்ணையில் தண்ணீர் இறைக்கும் கவலை ஓட்டுகிற வேலை கிடைத்தது. ஆனால், அப்பணியில் அவர் மனம் செல்லவில்லை. ஊர் ஊராகச் சென்று தலங்களைத் தரிசிப்பதிலும், மென்மேலும் சமயம், குறித்துக் கற்பதிலுமே ஆர்வம் சென்றது. ஆனால், அக்காலச் சூழல்களால் ஆலயங்களுக்குச் சென்று தரிசிக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சிகாமணியின் ஊரான மேல்புதுப்பாக்கத்துக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள முனுகப்பட்டு என்ற ஊரில் நீலமேக சுவாமிகள் என்ற ஆன்மிகப் பெரியவர் வாழ்ந்து வந்தார். அவர் அங்குள்ள ஒரு சிறிய மடத்தின் தலைவராக இருந்தார். சிகாமணி நீலமேக சுவாமிகளைச் சந்தித்தார். சிகாமணியின் அறிவாற்றல் கண்டு வியந்த சுவாமிகள், அவரைத் தனது மடத்திற்கு அழைத்துச் சென்று தன்னுடன் சில நாட்கள் தங்க வைத்தார். அங்கு சிகாமணிக்கு எதற்குப் பிறக்கிறோம், இந்தப் பிறப்பின் மூலம் நாம் செய்ய வேண்டியது என்ன, அடைய வேண்டியது என்ன, சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் பல சமயப் பேருண்மைகளைப் போதித்தார்.

துறவற நாட்டம்

சிகாமணிக்கு சமய ஆர்வம் மேலும் தீவிரமானது. துறவற நாட்டம் அதிகமானது. அது குறித்துத் தன் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அம்முடிவைக் கடுமையாக எதிர்த்தனர். அண்ணன் மாசிலாமணியும், அண்ணி அமிர்தம்மாளும் துறவியாக வேண்டாம் என்று வலியுறுத்தினர். ஆனால், நாளடைவில் சிகாமணி அதில் உறுதியாக இருப்பதை உணர்ந்து தங்கள் வலியுறுத்தலைக் கைவிட்டனர். சிகாமணியின் விருப்பத்தின் படி வாழ்வதற்கு அவருக்கு உதவினர்.

ஆன்மிகப் பயணங்கள்

சிகாமணி ஆன்மத் தேடலால் தன் பெற்றோரின் அனுமதி பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றார். சுயம் கைலாச சுவாமிகள் உள்ளிட்ட பல ஆன்மிகவாதிகளைச் சந்தித்தார். பல சமய உண்மைகளை அவர்களிடமிருந்து கற்றறிந்தார். நரசிங்கபுரம் தட்சிணாசாமி சுவாமியிடம் தீட்சை பெற்றார். பின் சென்னைக்குச் சென்றார்.

சென்னைக்கு வந்த சிகாமணி, சமய, இலக்கிய அறிஞராகத் திகழ்ந்த கோ. வடிவேல் செட்டியாரைச் சந்தித்தார். அவரிடம் சமயமும் இலக்கியமும் கற்றார். ஆனால், தீவிர சமயத் தாக்கத்தில் இருந்த சிகாமணிக்குத் தன்னால் ஈடு கொடுக்க இயலாது என்பதை உணர்ந்த வடிவேல் செட்டியார், வியாசார்பாடி செங்கல்வராய நாயகர் தோட்டத்தில் தங்கியிருந்த கரபாத்திரம் சிவப்பிரகாசச் சுவாமிகளிடம் சிகாமணியை அனுப்பி வைத்தார்.

கரபாத்திரம் சிவப்பிரகாசச் சுவாமிகள், அக்காலத்தின் இந்து சமயப் பேரறிஞர்களுள் ஒருவர். மெய்ஞ்ஞானி. காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகள், வீரசுப்பையா சுவாமிகள், ராஜகோபால் முதலியார், ஆரணி குப்புசாமி முதலியார், அமெரிக்கரான சார்ட்டால் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கரபாத்திர சுவாமிகளின் சீடர்களாக இருந்தனர்.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் பேசா நோன்பு மேற்கொண்டிருந்த நாளில், சிகாமணி அவரைச் சென்று சந்தித்தார். குருவைத் தரிசித்த மகிழ்ச்சியில், தம் எட்டு உறுப்புக்களும் தரையில் படும்படி வீழ்ந்து வணங்கினார். கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், தன்னைச் சரணடைந்த சிகாமணியை ஆசிரமத்திலேயே இருக்கச் செய்து, அவரைத் தனது சீடர்களுள் ஒருவராக ஆக்கிக் கொண்டார்.

குருவின் ஆணைப்படி, சிகாமணி மடத்திலிருந்த புலவர் முருகேச முதலியாரிடம் இலக்கண, இலக்கியங்களை முழுமையாக் கற்றார். திருவிசைநல்லூர் சின்னைய நாயகர் என்பவரிடமும் இலக்கண, இலக்கிய நுட்பங்களைக் கற்றார்.

துறவு தீட்சை

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், நல்லதொரு நாளில், தன் சீடரான சிகாமணிக்கு, தீட்சை அளித்து ‘எப்பொழுதும் ஆனந்தத்தில் திளைத்திருப்பாயாக‘ என்று வாழ்த்தி, ‘சகஜானந்தர்’ என்று பெயர் சூட்டினார். குரு சூட்டிய அப்பெயரே நிலைத்து ’சுவாமி சகஜானந்தர்’ என்றும், ’சகஜானந்த சுவாமிகள்’ என்றும் அது முதல் அவர் அழைக்கப்பட்டார்.

சுவாமி சகஜானந்தரால் பல்வேறு சமூக நற்பணிகள் நடைபெற வேண்டும் என்று விரும்பிய குருநாதர் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், சகஜானந்தரை சிதம்பரம் தலத்துக்கு அனுப்பி வைத்தார்.

கல்வி, சொற்பொழிவு

1910-ல் சிதம்பரத்திற்கு வந்தார் சகஜானந்தர். கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, ‘கல்வியும் அதன் பயனும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ‘சாது மகா சங்கம்’. ‘ஆனந்த ஆசிரமம்’ போன்ற இடங்களில் சமயச் சொற்பொழிவாற்றினார். 1916 முதல் மலேசியா, பர்மா, சிங்கப்பூர், ரங்கூன் சென்று ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார். ஸ்ரீரங்கம் சென்று பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரிடம் வடமொழியை முழுமையாகக் கற்றார். பல்வேறு குருநாதர்களைச் சந்தித்து தனது ஐயங்களைப் போக்கிக் கொண்டார். வ.உ.சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்து திருக்குறள் பாடம் கேட்டார். அதன் நுணுக்கங்களை அறிந்தார். அவரிடம் மாணவராக இருந்து சைவ சித்தாந்த சாத்திரங்களைக் கற்றார். வ.உ.சி.யின் ’அகமே புறம்’, ‘மெய்யறம்’ போன்ற நூல்களுக்குப் பாயிரம் எழுதினார். பல அறிஞர்களை நாடிச் சென்று தமிழ் மற்றும் வடமொழி இலக்கியங்களை, இலக்கண, இலக்கிய, தத்துவ, வேதாந்த நூல்களைக் கற்றார்.

சமூகம், அரசியல்

நந்தனார் கல்விக்கழகம்

சுவாமி சகஜானந்தர், பல்வேறு சமூக நற்பணிகளை மேற்கொண்டார். ஏழை மக்கள் வாழ்வில் உயர உழைத்தார். ஒடுக்கப்பட்டவர்கள் வாழ்வில் உயர அவர்கள் கல்வி அறிவு பெற வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து, சிதம்பரம் ஓமக்குளக்கரையில் ’நந்தனார் மடம்’ என்பதைத் தொடங்கினார். 1911-ல், நந்தனார் பள்ளியை நிறுவினார். இதுவே 1916-ல், ‘நந்தனார் கல்விக் கழகம்’ ஆக உயர்ந்தது.

1919-ல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, சிதம்பரம் வந்தபோது நந்தனார் கல்விக் கழகத்திற்காக 51 ஏக்கர் நிலத்தை அளித்தார். 1934-ல் சிதம்பரம் வந்த காந்தி சகஜானந்தரின் நந்தனார் மடத்தில் தங்கினார். அங்கு ஸ்ரீ சிவலோகநாதர், ஸ்ரீ நந்தனார் ஆலயத்திற்கு காந்தி அடிக்கல் நாட்டினார். காந்தி, இந்தியாவில், ஆலயத் திருப்பணிக்காக அடிக்கல் நாட்டிய ஒரே ஆலயமாக இவ்வாலயம் அறியப்படுகிறது.

நந்தனார் மடத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கப் பள்ளி, பின்னர் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. தொடர்ந்து நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்தனார் தொழிற்கல்வி நிலையம் எனப் பலவாறாகத் தனது செயல்பாடுகளைத் தொடர்ந்தது. 1939-ல் நந்தனார் கல்விக் கழகத்தை அரசிடம் ஒப்படைத்தார் சகஜானந்தர்.

அரசியல்

சுவாமி சகஜானந்தர், 1928 தொடங்கி சில ஆண்டுகள் சென்னை மேல்சபை (மாகாண லெஜிஸ்லேடிவ் கவுன்சில் - எம்.எல்.சி) உறுப்பினராகவும், பின்னர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1930-ல் டாக்டர் அம்பேத்கரும் இரட்டை மலை சீனிவாசனும் வட்டமேசை மாநாட்டுக்குச் சென்றபோது தனது பூரண ஆதரவை வழங்கினார். பூனா ஒப்பந்தப்படி தனித்தொகுதி முறையை ஆதரித்துப் பிரசாரம் செய்தார்.

ஆலய நுழைவுப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களுடன் சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார். 1932–ல் சிதம்பரம் தனித் தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 1936 முதல் 1959 வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் பட்டியலின மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் போராடினார்

கல்விப் பணிகள்

சுவாமி சகஜானந்தர், 1929-ல் அண்ணாமலைச் செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (மீனாட்சி கல்லூரி) தொடங்க உதவினார். 1940-41-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழறிஞர்களில் ஒருவரானார். தமிழ்ச் சொற்பொழிவாளராகவும் விரிவுரையாளராகவும் செயற்பட்டார். ஆட்சிக் குழு உறுப்பினருள் ஒருவராக இயங்கினார்.

இதழியல்

சுவாமி சகஜானந்தருக்கு சிதம்பரத்தில் ‘பரஞ்சோதி அடிகளார்’ என்பவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். அவரைப் போற்றும் வகையில், ‘பரஞ்சோதி’ என்னும் செய்தித் தாளைச் சிலகாலம் நடத்தினார். பரஞ்சோதி அச்சகம் என்பதை ஏற்படுத்தினார். அதன் மூலம் ’ஜோதி’ என்ற தமிழ், ஆங்கில இருமொழி வார இதழை 1932-ல் தொடங்கி, 1939 வரை நடத்தினார்.

சகஜானந்தர் உருவச் சிலை (படம் நன்றி: மின்னம்பலம் இணைய இதழ்)

மறைவு

சுவாமி சகஜானந்தர், மே 01, 1969-ல் காலமானார்.

நினைவு

1969-ல் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுவாமி சகஜானந்தரின் முழு உருவச் சிலையை அப்போதைய இந்தியத் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார். 1990-ல் சகஜானந்தரின் நூற்றாண்டு விழாவைத் தமிழக அரசு நடத்தியது.

சுவாமி சகஜானந்தரின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர் வாழ்ந்த சிதம்பரத்தில் உள்ள நந்தனார் ஆண்கள் பள்ளிவாயிலில், தமிழக அரசால் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அதில் சுவாமிஜியின் மார்பளவு வெண்கலச் சிலை வைக்கப்பட்டது. சுவாமி சகஜானந்தரின் பிறந்தநாள், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

மதிப்பீடு

மதம் என்பது மக்களின் சிந்தனைகளை உயர்த்துவதாகவும், அவர்களின் ஆன்மிக வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருக்க வேண்டும் என்பது சுவாமி சகஜானந்தரின் கருத்தாக இருந்தது. இந்து மதத்தின் முக்கிய கருத்துக்களை உள்வாங்கி அது பற்றி மக்களிடம் எடுத்துரைத்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை உயர்வுக்காகத் தன்னை அர்ப்பணித்து உழைத்தார். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை உயர்வுக்காக அரசியல், சமூகம், கல்வி எனப் பலவிதங்களில் உழைத்த ஆன்மிகவாதியாக சுவாமி சகஜானந்தர் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • தாழ்த்தப்பட்டோர்
  • ஹரிஜனங்கள் தோற்றம்
  • தீண்டாமை
  • நமது தொன்மை
  • பண்ணையாள் பாதுகாப்புச் சட்டமும் சர்க்காரின் கடமையும்
  • வச்சிர சூசிகை உபநிடதம்
  • ஆலயம் என்பது ஹரிஜனங்களுக்கே
  • தீண்டாமை சாஸ்திரியமன்று
  • சிதம்பர ரகசியமும் நடராசர் தாண்டவமும்

மற்றும் பல.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2025, 10:38:41 IST