under review

க. கணபதிப்பிள்ளை

From Tamil Wiki
க. கணபதிப்பிள்ளை

க. கணபதிப்பிள்ளை (ஜூலை 2, 1903 - மே 21, 1968) ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர், வரலாற்றாசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கல்வெட்டாய்வாளர். மொழியியல், ஒலிப்பியல், கல்வெட்டியல், நாடகம், இலங்கை வரலாறு என விரிவான பங்களிப்பு செய்துள்ளார்.

பிறப்பு, கல்வி

க. கணபதிப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறை, தும்பளை கிராமத்தில் ஜூலை 2, 1903-ல் பிறந்தார். தந்தை கந்தசாமிப்பிள்ளை . தனது ஆரம்பக் கல்வியை வேலாயுதம் மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். பருத்தித்துறை ஆரிய முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் மரபு வழித் தமிழும், இசையும் கற்றார். 1927-ல் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சமஸ்கிருதம், பாலி ஆகிய இரு மொழிகளையும் கற்றார். இங்கு இவரின் தமிழாசிரியர் கிங்ஸ்பரித் தேசிகர். பி.ஏ. பட்டப்படிப்பில் 1930-ம் ஆண்டு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

இதன் காரணமாக அவருக்கு நான்கு ஆண்டுகள் வெளிநாடுகளில் படிப்பதற்கான ஊக்கத் தொகை கிடைத்தது. இந்த ஊக்கத் தொகையினை பயன்படுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும், லண்டன் பல்கலைக்கழக கீழைத்தேய ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளியிலும்(School of Oriental and African Studies) உயர்கல்வி கற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொன்னோதுவார் மூர்த்திகள், சர்க்கரை இராமசாமிப் புலவர், ரா.பி. சேதுப்பிள்ளை, சோழவந்தான் கந்தசாமியார் ஆகியோரிடம் தமிழிலக்கண, இலக்கியங்களை கற்றார். 1932-ல் ‘வித்துவான்’ பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலத்தைத் தவிர, சிங்களம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளையும் அறிந்தவர்.

ஆய்வு

க. கணபதிப்பிள்ளை

லண்டன் பல்கலைக் கழக கீழைத்தேய ஆய்வுப் பள்ளியில் சேர்ந்து கல்வெட்டு இயல்(Epigraphy) ஆய்வில் ஈடுபட்டார். ‘பொ.யு. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ்க் கல்வெட்டுகளின்; மொழிநடை’ (A study of the Language of the Tamil Inscriptions of 7th and 8th Centuries AD) என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார்.

லண்டன் பேராசிரியர் ஆர்.எல் டர்னரின் (R.L. Turner) வழிகாட்டலில் பாரம்பரியத்தையும், நவீனத்துவத்தையும் இணைக்கின்ற, இந்திய ஆய்வு மரபையும், மேல்நாட்டு ஆய்வு முறையையும் பிணைக்கின்ற ஒரு தனிக் கண்ணோட்டத்தில் ஆய்வு முறையை மேற்கொண்டார். 1935-ல் முனைவர் பட்டம் பெற்றார். தமிழ் கட்டுவெட்டுகள் குறித்து முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வாளராவார்.

மொழி ஆய்வுத் துறையில் ஒலிப்பியலிலேயே(Phonology) எழுத்துக்கள் எவ்வாறு உச்சரிக்கப்படுகின்றன, ஒலி வடிவங்களில் காணப்படும் வேறுபாடுகள் யாவை என்பன பற்றி நுண்ணிய முறையில் ஆய்வுகள் செய்தார். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கை ஆராய்ந்தார்.

முக்கியத்துவம்
  • க. கணபதிபிள்ளையின் ஆய்வுகள் பொ.யு. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது பற்றிய தகவல்களையும், சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்களிலுள்ள மொழியமைப்பு எவ்வாறு மாறுபாடு அடைந்துள்ளன எனும் உண்மையையும் வெளிப்படுத்தியது.
  • வரலாற்று அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளும் போது பொ.யு. ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகள் அரசு அமைப்பு, பொருளாதார அமைப்பு, சமூக அமைப்பு, பண்பாட்டு நிலைமை ஆகியனவற்றில் மிக முக்கியமான ஒரு மாறுநிலைக் காலம் (Age of Transition). அதற்கு முன்னர் நிலவிய அரசு, பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைகளிலிருந்து வேறுபட்ட காலம்.
  • தொல்காப்பியத்திலிருந்து நன்னூலுக்கு வருகின்ற தமிழ் இலக்கண வளர்ச்சிக்கான காரணிகளை அறிந்து நன்னூல், தொல்காப்பியத்திலிருந்து வேறுபடுவதற்கான பின்புலக் காரணிகளை தெளிவுபடுத்தினார். இதனால் இந்த இரண்டு இலக்கண நூல்களையும் தெளிவாக மதிப்பிடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

தனிவாழ்க்கை

க. கணபதிப்பிள்ளை மட்டக்களப்பைச் சேர்ந்த மனோன்மணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கந்தசாமிப்பிள்ளை, ஒப்பிலாமணிப்பிள்ளை என இரு மகன்கள், சௌந்தராம்பிகை, மங்களாம்பிகை, பாலாம்பிகை, அருள்மொழிநங்கை, வள்ளி என ஐந்து மகள்கள்

ஆசிரியப்பணி

கணபதிப்பிள்ளை 1936-ல் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1947-ல் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1965-ல் ஓய்வு பெற்றார். இவரது முயற்சியால் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக் கலைத் தேர்வு ஏற்படுத்தப்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைத் தேர்வையும் தொடங்கி வைத்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப் பாடமாகப் பயில்வோருக்குக் கல்வெட்டியல் கட்டாய பயில்நெறியாக அமைந்திருந்தது. பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை இப்பாடத்தை மாணவர்களுக்குக் கற்பித்தார். மேலும், தமிழ் இலக்கிய வரலாற்றையும், நவீன இலக்கியத்தையும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்காகவும் தீவிரமாக முயற்சித்து வெற்றி கண்டார்.

அமைப்புப்பணி

  • க. கணபதிப்பிள்ளை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 29 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் இளங்கதிர் என்ற இதழைத் தொடக்கி அதனைத் தொடர்ந்து நடத்த உதவி செய்தார்.
  • இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய மொழிப்பீடத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
  • கீழைத்தேய மொழியியல் மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் அளித்து உரையாற்றினார்.
  • 1964-ம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற கீழைத்தேய மாநாட்டில் இலங்கையிலிருந்து தனிநாயகம் அடிகளார், கா.பொ.ரத்தினம் ஆகியோருடன் கலந்து கொண்டார். அம்மாநாட்டின் முடிவில் தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு, பண்பாடு முதலியவற்றை ஆய்வு செய்திட உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை தோற்றுவிக்க முயற்சி மேற்கொண்டவர்களில் ஒருவராக ஆனார்.

நாடக வாழ்க்கை

க. கணபதிப்பிள்ளை தமிழ்ச்சங்கத்துக்கென பல நாடகங்களை எழுதி அரங்காற்றுகை செய்தார். 'உடையார் மிடுக்கு', 'முருகன் திருகுதாளம்', 'கண்ணன் கூத்து', 'நாட்டவன் நகர வாழ்க்கை' ஆகியவை 'நானாடகம்' என்ற தலைப்பில் 1940-ல் அச்சில் வெளிவந்தன. 'பொருளோ பொருள்', 'தவறான எண்ணம்' ஆகிய நாடகங்கள் 'இருநாடகம்' என்ற பெயரில் 1952-ல் நூலாக வெளிவந்தது. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழைக் கையாண்டு பல நாடகங்களை எழுதினார். 'சங்கி' என்ற வரலாற்று நாடக நூல் 1956-ல் பாடநூல் புத்தகமாக வெளிவந்தது. 'முருகன் திருகுதாளம்','சுந்தரம் எங்கே', 'துரோகிகள், மாணிக்கமாலை முதலிய நாடகங்களை எழுதினார்.‘மாணிக்கமாலை’ ஹர்ஷவர்த்தனின் ‘இரத்தினாவலி’ எனும் வடமொழி நாடகத்தின் தமிழாக்கம். அதன் இலக்கியச் சுவைக்காக மொழிபெயர்க்கப்பட்ட நாடகமாகும்.

கணபதிப்பிள்ளையின்‘சங்கிலி’ என்ற வரலாற்று நாடகம் 1951-ல் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரால் நடிக்கப்பட்டது. 1931-ல் இலண்டனிலிருந்து திரும்பிய பின்னர் 1953 வரை, இவர் எழுதிய நாடகங்கள் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்து ஆண்டு விழாக்களில் பல்கலைக்கழக அரங்குகளில் அரங்காற்றுகை செய்யப்பட்டன. 1954-ல் முதல் பல்கலைக்கழகத்துக்கு அப்பால், கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் நடத்தப்பட்டன. ‘உடையார் மிடுக்கு’ என்ற நாடகம் புகழ் பெற்றது. கலையரசு சொர்ணலிங்கத்தின் குழுவினர் ‘உடையார் மிடுக்கு’ நாடகத்தை நடத்தினர்.

கல்வெட்டியல் ஆய்வு

இலங்கையின் பண்டைய பல தமிழ்க் கல்வெட்டுகளை ஆராய்ந்து, திருத்தி வெளியிட்டார். மகனை, மொரகாவலை, பாண்டுவஸ்னுவர போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் குறித்து University of Ceylon Review 1960, 1962 இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். இரண்டாம் கஜபாகுக் காலத்து மாங்கனாய்த் தமிழகக் கல்வெட்டு நிசங்கமல்லனின் பண்டுவஸ் நுவரத் தமிழ் கல்வெட்டு, மொறஹகவெல தூண் கல்வெட்டு ஆகிய மூன்று தமிழ்க் கல்வெட்டுக்களைப் படித்து விளக்கினார். கல்வெட்டு இயல் துறையில் ஆ. வேலுப்பிள்ளை, கா. இந்திராபாலா ஆகிய இருவரை பயிற்றுவித்தார். ஆ. வேலுப்பிள்ளை இடைக்காலக் கல்வெட்டுகளை ஆராய்ந்தார். கா. இந்திரபாலா இலங்கை வரலாறு பற்றிய சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

செய்யுள், நாவல், சிறுவர் இலக்கியம், ‘காதலியாற்றுப்படை’, ’தூவுதும் மலரே’ முதலிய இலக்கியப் படைப்புகளை அளித்துள்ளார். பூஞ்சோலை(1953), வாழ்க்கையின் விநோதங்கள்(1954) ஆகிய தழுவல் நாவல்களை எழுதினார். ஜெர்மன் நாட்டு நாவலாசிரியர் டோர் கதாம் என்பவர் எழுதிய ‘இம்மென்சே’ என்னும் நாவலைத் தழுவி அமைந்ததே ‘பூஞ்சோலை’ நாவல். பிரெஞ்சு நாவலாசிரியர் அபூ என்பவர் எழுதிய ‘இரட்டையர்’ என்னும் நாவலைத் தழுவி அமைந்தது ‘வாழ்க்கையின் விநோதங்கள்’ நாவல்.

‘ஈழத்து வாழ்வும் வளமும்’ என்பது இவரின் கட்டுரைத் தொகுப்பு. இதில் வரலாறு, இலக்கிய வரலாறு, உயர் பண்பாட்டில் பேசப்படும் கலைக்கூறுகள், ஈழத்து இலக்கிய வளர்ச்சி, ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காறுகள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவரது பத்து நாடகங்களை ஒன்றாக இணைத்து ஒரே தொகுதியாக, ‘கணபதிப்பிள்ளை நாடகத்திரட்டு’ என்னும் நூல் வெளியிடப்பட்டது. ‘இலங்கை வாழ் தமிழர் வரலாறு’ என்ற நூலை எழுதினார்.

'இலங்கையில் கண்ணகி வழிபாட்டு வரலாறு', 'உண்மை அமைதியின் வாஞ்சை' (செய்யுள்), 'தேவியர் பாட்டு'(பாளி மொழிபெயர்ப்பு), 'இயற்கையமைப்பும், பாரதியாரும்', 'பண்டை நாட்களில் இலங்கையும் சீனாவும்', 'செருமனிய நாட்டுச் சிறுவர் கதைகள்', 'நம்பிக்கையுள்ள நாயகன்', 'சங்குபதி' (Little Red Riding Hood), 'தீத்தட்டிக் குடுக்கை' (மொழிபெயர்ப்பு), 'துரோகிகள்'(நாடகம்), 'சுதந்திரம் எங்கே'? (நாடகம்), 'கண்ணகி வழக்குரை' ஆகிய நூல்கள் கையெழுத்துப் பிரதிகளாக உள்ளன.

ஆராய்ச்சித் துறையில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் இலங்கைப் பல்கலைக் கழக ஆய்வு இதழிலும் (University of Ceylon Review), வேறு சில ஆய்வு இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ் இதழான ‘இளங்கதிர்’ மற்றும் ‘ஈழகேசரி’, ‘தினகரன்’ முதலிய இதழ்களிலும் வெளிவந்தன. க. கணபதிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை "கலையருவி கணபதிப்பிள்ளை" என்ற பெயரில் த. சண்முகசுந்தரம் எழுதி 1974-ல் வெளியிட்டார்.

இலக்கிய இடம்

“ஈழத்தின் தமிழ் நாடக வளர்ச்சியில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஒரு மைல் கல்லாக மிளிர்கிறார். பேராசிரியரின் நாடகங்கள் இயல்பு நெறியின் பாற்பட்டவையாகும். நவீன உரையாடல் அரங்கினை நன்கு பயன்படுத்தி யாழ்ப்பாணத்தின் சமூக அரசியல் பிரச்சினைகளை அலசிய அவர், ஈழத்துத் தமிழ் மக்களின் பாரம்பரிய நாடக வடிவமான நாட்டுக்கு கூத்துப் பற்றியும் சிரத்தை கொண்டிருந்தார்” என பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

இதனால் இந்த இரண்டு இலக்கண நூல்களையும் தெளிவாக மதிப்பிடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. பொ.யு. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது பற்றிய தகவல்களையும், சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்களிலுள்ள மொழியமைப்பு எவ்வாறு மாறுபாடு அடைந்துள்ளன எனும் உண்மையையும் வெளிப்படுத்தியது

நினைவு

க. கணபதிப்பிள்ளையின் நினைவாக கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் சிறந்த புனைவு நூலுக்கான பரிசை வழங்கி வருகிறது.

மறைவு

க. கணபதிப்பிள்ளை அறுபத்தைந்தாவது வயதில் மே 12, 1968-ல் காலமானார்.

நூல்பட்டியல்

  • இலங்கை வாழ் தமிழர் வரலாறு
  • ஈழத்து வாழ்வும் வளமும்
  • கற்பின் கொழுந்து
  • முருகவழிபாடும் கதிர்காமம் பாதயாத்திரையும்
  • கணபதிப்பிள்ளை நாடகத்திரட்டு
  • பேராசிரியர் கணபதிப்பிள்ளை நாடகத்திரட்டு
கவிதை
  • காதலி ஆற்றுப்படை
  • தூவுதும் மலரே
நாவல்
  • பூஞ்சோலை
  • வாழ்க்கையின் விநோதங்கள்
  • நீரர மகளிர்
நாடகங்கள்
  • சங்கிலி
  • நானாடகம் (1940)
  • இருநாடகம் (1952)
  • மாணிக்கமாலை
  • உடையார் மிடுக்கு
  • நாட்டவன் நகர வாழ்க்கை
  • முருகன் திருகுதாளம்
  • கண்ணன் கூத்து
  • பொருளோ பொருள்
  • தவறான எண்ணம்
  • சுந்தரம் எங்கே
  • துரோகிகள்
ஆங்கிலம்
  • Creativity or Life's Postures
  • This Baffling Existence
  • Vipulananda A Literary Biography
  • A Study of the Language of the Tamil Inscriptions of the 7th and the 8th Centuries A.D
ஆய்வுக் கட்டுரைகள்
  • Jaffna dialect of Tamil - a phonological study in Indian Linguistics(1958)
  • Words in Jaffna dialect of Tamil - University of Ceylon Review(1965)

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page