under review

ஆ. வேலுப்பிள்ளை

From Tamil Wiki
ஆ. வேலுப்பிள்ளை

ஆ. வேலுப்பிள்ளை (நவம்பர் 29, 1936 - நவம்பர் 1, 2015) ஈழத்தமிழ் அறிஞர், கல்வெட்டாய்வாளர், வரலாற்று மொழியியலாய்வாளர், தமிழ்ப் பேராசிரியர், ஆய்வு வழிகாட்டி. தமிழ், தமிழக வரலாறு, புத்த, சமண சமயத்துறைகளில் ஆய்வாளர். கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மொழியமைப்பைப் பற்றிய ஆய்வுக்கு இவரது நூல்கள் பல முன்னோடியாக அமைகின்றன.

பிறப்பு, கல்வி

பேராசிரியர் ஆஷருடன் ஆ.வேலுப்பிள்ளை

ஆ. வேலுப்பிள்ளை இலங்கை, தென்புலோலியில் உபயகதிர்காமத்தில் ஆழ்வாப்பிள்ளை, உமையாத்தைப்பிள்ளை இணையருக்குப் பிறந்தார். பள்ளிக்கல்வியைப் புலோலி தமிழ்ப் பாடசாலை, புலோலி ஆங்கிலப்பாடசாலையில் பயின்றார். உயர்கல்வியை ஹாட்லிக் கல்லூரியில் கற்றார். 1955-1959-ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்று முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேறினார். ஆறுமுக நாவலர் பரிசும், கீழ்த்திசைக் கல்வி உதவித்தொகையும் பெற்றார். க. கணபதிப்பிள்ளையின் நெறிப்படுத்தலில் தமிழில் கலாநிதிப் பட்டம் பெற்றார். கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன், வி. செல்வநாயகம் ஆகியோர் இவரின் ஆசிரியர்கள்.

தனிவாழ்க்கை

ஆ. வேலுப்பிள்ளை மீனாட்சியைத் திருமணம் செய்து கொண்டார். மகள் சிவப்பிரியை, மகன் அருளாளன். 1961-ல் இலங்கை ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். கல்வித்துறையில் உள்ள ஈடுபாட்டால் அப்பணியை ஏற்கவில்லை.

அமைப்புப் பணிகள்

ஆ. வேலுப்பிள்ளை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல பல்கலைக்கழகத்திலும் தேர்வாளராக இருந்தார். இந்திய மொழியியல் கழகம், திராவிட மொழியியல் கழகம், இந்திய கல்வெட்டியியல் கழகம், இலங்கைத் தொல் பொருட்கழகம் போன்றவற்றில் உறுப்பினராக இருந்தார். உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் செயலாளர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

ஆசிரிய வாழ்க்கை

ஆ. வேலுப்பிள்ளை, தாமஸ்பரோ, பூலோகசிங்கம் (நன்றி மு. இளங்கோவன்)

ஆ. வேலுப்பிள்ளை இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1964 முதல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதே பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 1984-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

ஆ. வேலுப்பிள்ளை அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் சமயவியல் துறையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். 1973-1974-ல் திருவனந்தபுரத்தில் உள்ள திராவிடமொழியியற் பள்ளியில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்தார். அப்பொழுது கேரளப்பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்தார். 1980-ல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1981-1982 ஆண்டுகளில் காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு கழகத்தில் நிதியுதவி பெற்று இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆஷருடன் (Ronald E. Asher) இணைந்து பணிசெய்தார். 1990-2000 காலகட்டத்தில் சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தில் (Uppsala University ) வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.

ஆ. வேலுப்பிள்ளை பல்கலைக்கழகங்கள் பலவற்றின் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் அயல்நாட்டுத் தேர்வாளராகப் பணிபுரிந்தார். இவர் மேற்பார்வையில் பலர் முனைவர் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழகங்களின் இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு வழங்கப்பெற்று பணிபுரிந்தார். சமய நூல்கள், அகநானாறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களையும் திருமுருகாற்றுப்படை, பெரியபுராணம் உள்ளிட்ட சமய நூல்களையும் அயலகத்து மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டார். பல்வேறு ஆய்வரங்குகளில் கலந்துகொண்டு தனது ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டார்.

கல்வெட்டியல் ஆய்வு

ஆ. வேலுப்பிள்ளை கல்வெட்டியல் ஆய்வின்போது (நன்றி மு. இளங்கோவன்)

ஆ. வேலுப்பிள்ளை 1959-1962-ல் முனைவர் பட்ட ஆய்வை க. கணபதிப்பிள்ளையின் நெறிப்படுத்தலில் மேற்கொண்டார். தமிழில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றார். பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் (பொ.யு. 1251-1350) 'தமிழ்மொழிநிலை' என்ற பொருளில் ஆய்வு செய்தார். லண்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 1962-1964-ல் பேராசிரியர் தாமஸ் பரோவின் மேற்பார்வையில் ’கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் நிலை’ (பொ.யு 800-920) என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார்.

ஆய்வை அறிவியல் அடிப்படையில் செய்பவர். ஆ. வேலுப்பிள்ளை 1971-72-ல் இலங்கையில் காணப்படும் கல்வெட்டுகளைத் தொகுத்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். ஆ. வேலுப்பிள்ளை 1973-ல் திராவிட மொழியியல் கழகம் வழங்கிய முதுநிலை ஆய்வு நிதியை ஏற்று ‘கல்வெட்டுகளில் தமிழ்க்கிளை மொழி வழக்கு’ என்ற தலைப்பில் திருவனந்தபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆங்கிலத்தில் இவர் எழுதித் திராவிட மொழியியற் கழகம் வெளியிட்டுள்ள இந்நூல் மொழியியல் ஆய்வுக்காகப் பயன்படுகிறது. ‘கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும்’ என்னும் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் ஆங்கில நூலை வெளியிட்டார்.

சாசனமும் தமிழும்

ஆ. வேலுப்பிள்ளை ’சாசனமும் தமிழும்’ என்ற பெயரில் 1951-ல் தமிழ்க் கல்வெட்டுகளில் தமிழின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை விளக்கும் நூலாக எழுதினார். இந்நூலில் கல்வெட்டுகளில் உள்ள தமிழ்வரி வடிவம், தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ் வழக்காறுகள், இலங்கையில் கிடைக்கும் கல்வெட்டுகள் பற்றிய மதிப்பீடுகளை விளக்கினார். கல்வெட்டுகளின் துணையுடன் மொழி, இலக்கியம் பற்றி ஆராய்ந்தார். கல்வெட்டில் உள்ள சொல், சொற்றொடர், செய்திகள் அடிப்படையில் மொழியமைப்பு, இலக்கணம் பற்றிய ஆய்வு நூலாக இது உள்ளது.

கல்வெட்டுகளின் துணைகொண்டு இலங்கையில் தமிழர்கள் பெற்றிருந்த செல்வாக்கை விளக்கி எழுதினார். இலங்கையில் உள்ள கல்வெட்டுகள் சிங்களம், தமிழ், பாலி என்னும் மொழிகளில் வெட்டப்பட்டது என்ற குறிப்பைத் தந்தார். இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் சிங்களக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டார். தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் கிடைக்கும் தமிழ்க் கல்வெட்டுகளை அந்த அந்த மாநிலத்தார் முதன்மையளிக்காமல் மறைப்பதுபோல் இலங்கையில் சிங்களக் கல்வெட்டுகளுக்கு முதன்மையும் தமிழ்க் கல்வெட்டுகளுக்கு முதன்மையின்மையும் இருந்துள்ளதைப் பேராசிரியரின் சில குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது.

ஆ. வேலுப்பிள்ளை இலங்கையில் உள்ள தமிழ்க்கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது 85 கல்வெட்டுகள் இருந்தன எனவும் அவையும் குறிப்புகள் எதுவும் இன்றிப் பாதுகாக்கப்படாமல் இருந்ததையும் குறித்துள்ளார். இலங்கைக் கல்வெட்டுகள் படிப்பதற்காக இந்தியா வந்துள்ள செய்தியும், பல செப்பேடுகள் இலங்கையில் கிடைத்துள்ள செய்தியும் இந்த நூலில் காணப்படுகின்றன . யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி நிலவியிருந்தாலும் குறைந்த அளவு கல்வெட்டுகளே கிடைக்கின்றன எனவும், யாழ்ப்பாணப் பகுதியில் கல்வெட்டுகள் பொறிக்கத் தகுந்த கல் -ல்லை எனவும் குறித்துள்ளார். சிங்களக் கல்வெட்டுகள், சிங்களர் ஆட்சிமுறை பற்றி இடையிடையே விளக்கியுள்ளார். கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மொழியமைப்பைப் பற்றிய ஆய்வுக்கு இவரின் நூல்கள் பல முன்னோடியாக உள்ளன.

இலக்கிய வாழ்க்கை

ஆ. வேலுப்பிள்ளை தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம், ஸ்வீடிஷ் ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மொழியியல், கல்வெட்டியல், தொல்லெழுத்தியல், சமயம், இலக்கியம், வரலாறு என்று பல்துறைகளிலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். ’தமிழ் வரலாற்றிலக்கணம்’ என்ற பெயரில் பண்டைத் தமிழ் இலக்கணத்தை இன்றைய மொழியியல் கண்கொண்டு பார்க்கும் நூலை எழுதினார். முகவுரை, தமிழிற் பிறமொழி, எழுத்தியல், வினையியல், இடையியல், சொல்லியல், பெயரியல், தொடரியல், சொற்பொருளியல் என்ற பகுப்பில் செய்திகள் உள்ளன. ’தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும்’ என்ற வேலுப் பிள்ளையின் நூல் தமிழ் இலக்கிய வரலாற்றைப் புதிய முறையில் அறிமுகப்படுத்தும் அமைப்பில் உள்ளது.

சமயம்

தமிழர் சமயம் தொடர்பாகத் தமிழில் எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பாக ஆ. வேலுப்பிள்ளையின் ‘தமிழர் சமய வரலாறு’(1980) நூல் வெளியானது. ‘தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்’ என்ற நூலிலும் இதுபற்றி விரிவாக ஆராய்ந்தார். இது தொடர்பான மேலும் 12 கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பு நூல் ‘சைவசமயம்: அன்றும் இன்றும் இங்கும்’ என்ற தலைப்பில் 2013-ல் வெளியானது. வரலாற்று முறையில் ஒவ்வொன்றையும் நோக்குவது தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும், தமிழர் சமய வரலாறு தமிழர் வரலாற்றின் ஒரு முக்கியக் கூறு என்றும், தமிழர் சமய வரலாறு தமிழர்கள் பிற சமயத்தவர்களைப் புரிந்துகொள்வதற்கும் பிற சமயத்தவர்கள் தமிழர்களைப் புரிந்துகொள்வதற்கும் உதவும் என்றும் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் வேலுப்பிள்ளை கூறினார்.

ஆ. வேலுப்பிள்ளை உப்சலாவுக்குப் போனபின்னர் பீட்டர் ஷல்குடன் இணைந்தும் தனியாகவும் சமயம்பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொண்டார். 1995-ல் உப்சலாவில் நடைபெற்ற மணிமேகலை பற்றிய கருத்தரங்கில் சி. பத்மநாதன், வேலுப்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கில் மணிமேகலையில் பௌத்தம் அல்லாத மதங்களைப் பற்றிய எதிர்மறை மதிப்பீடு பற்றி வேலுப்பிள்ளை கட்டுரை படித்தார். 2002-ல் ‘தமிழில் பௌத்தம்’ (Buddhism in Tamil in Pre Colonial Thamilakam and Ilam) என்ற தலைப்பில் பீட்டர் ஷல்கும், வேலுப்பிள்ளையும் தொகுத்து வெளியிட்டனர். சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய மதங்களுக்கிடையே தமிழ்நாட்டில் நிலவிய முரண்பாடுகளும் மோதல்களும் பற்றி ‘நீலகேசியில் பௌத்தர்களுக்கு எதிரான சமணர்களின் வாதங்கள்’ (Jain Polemics against Buddhists in Neelakesi -2000), ‘தென்னிந்திய சமணம் - தமிழில் மத விவாதங்களின் பங்கு’ (South Indian Jainism: The Role of Religious Polemics in Tamil - 2008) ஆகிய கட்டுரைகளில் ஆராய்ந்தார். இக்கட்டுரை, பொதுவாக தென்னிந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் சமணம் வளர்ந்த வரலாற்றை ஆராய்ந்தது. குறிப்பாக பொ.யு. 7-ம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தின் தொடக்கத்துடன் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய மதங்களிடையே மோதல் தொடங்கியதையும் அதன் விளைவுகளையும் இக்கட்டுரை ஆய்வு செய்தது.

விவாதம்

தமிழகத்தில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை கலந்து கொள்ள மத்திய மாநில அரசுகளால் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார்.

ஆ.வேலுப்பிள்ளை உப்சலாவில் சிறப்பு முனைவர் பட்டம் பெற்றபோது

விருதுகள்

  • 1972-ல் ஆ. வேலுப்பிள்ளை எழுதிய ‘சாசனமும் தமிழும்’ நூலுக்கு இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றார்.
  • மே 31, 1996-ல் ஸ்வீடனில் உள்ள உப்சாலாப் பல்கலைக்கழகம் ஆ. வேலுப்பிள்ளைக்குச் சிறப்பு முனைவர் பட்டம் வழங்கியது.
  • 1999-ல் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (பெட்னா) ஆ. வேலுப்பிள்ளையின் தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டியது.
  • தஞ்சையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்கு அரசு சார்பில் அழைக்கப்பட்டார்.

மறைவு

ஆ. வேலுப்பிள்ளை நவம்பர் 1, 2015-ல் தனது 79-ஆவது வயதில் சான்பிரான்சிஸ்கோவில் காலமானார்.

நூல் பட்டியல்

தமிழ்
  • தமிழர் சமய வரலாறு
  • ஈழத்து அறிஞர் ஆளுமைகள்
  • தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும்
  • தமிழ் வரலாற்றிலக்கிணம்
  • இலங்கைத் தமிழர்களின் கயிலாச பராம்பரியம்
  • கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும்
  • கல்வெட்டில் தமிழ்க் கிளைமொழியியல் ஆய்வு
  • சாசனமும் தமிழும்
  • சைவசமயம்: அன்றும் இன்றும் இங்கும்
  • சேர்.பொன். இராமநாதன் நினைவுப் பேருரை
  • இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை
  • பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
  • நினைவுப் பேருரை பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர்சால்புக் கோலம்
ஆங்கிலம்
  • An Inscription from the Munnisvaram Siva Temple
  • Ceylon Tamil Inscriptions: Part 1
  • Ceylon Tamil Inscriptions: Part 2
  • Pandya Inscriptions : A language Study (1972)
  • Study of the Dialects in Inscriptional Tamil (1976)
  • Epigraphical Evidences for Tamil Studies (1980)
  • “Commonness in Early Old Paleography of Tamilnadu and Sri Lanka” (1981)
  • “Tamil in Ancient Jaffna and Vallipuram Gold Plate” (1981)
ஆய்வுக் கட்டுரைகளை
  • Adjective in Tamil (1966)
  • Some observations on the negative in Tamil (1976)
  • Auxiliary verbs in SriLankan Tamil (1980)
  • Modality in Jaffna Tamil (1983)
  • Opposition and contrast in Tamil (1983)
  • Coordination in Tamil (1983)
  • Cleft sentences in Tamil (1983)
  • Hyponymy and hierarchical structure of Lexemes in Tamil (1984)
  • Locative in Tamil: a semantic and historical study (1985)
  • Colour Terms in Tamil (1985)
  • Sentence connection in Tamil (1986)

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page