under review

கோ.முத்துப்பிள்ளை

From Tamil Wiki
கோ. முத்துப்பிள்ளை (படம் நன்றி: தமிழ்ப்பணி இதழ், டிசம்பர் 2020)
கோ. முத்துப்பிள்ளை (படம் நன்றி: இந்து தமிழ் திசை)
உலகத் தமிழ் மாநாட்டு மலரில் கோ. முத்துப்பிள்ளை கட்டுரை
கோ. முத்துப்பிள்ளை, அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனுடன்
வங்கிக் கலைச்சொல்லாக்கம் பற்றிய சிறு நூல்

கோ. முத்துப்பிள்ளை (செப்டம்பர் 15, 1919- பிப்ரவரி 9,2009) தமிழறிஞர். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் முதல் உதவிச் செயலராகப் பணியாற்றினார். தமிழில் ஆட்சி மொழிச் சொற்கள் பலவற்றை உருவாக்கினார். ‘முத்தமிழ் மன்றம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்து தமிழ்ப்பணியாற்றினார். தமிழக அரசு வழங்கிய கி.ஆ. பெ. விஸ்வநாதம் விருதினை முதன் முதலில் பெற்றார்.

பிறப்பு, கல்வி

கோ. முத்துப்பிள்ளை, தஞ்சையை அடுத்த மானாங்கோரையில் செப்டம்பர் 15, 1919 அன்று கோபால்சாமிப் பிள்ளை - கமலாம்பாள் தம்பதியினருக்குப் பிறந்தார். பள்ளிப்படிப்பை மானாங்கோரை மற்றும் தஞ்சையிலும், இளங்கலை வகுப்பை கும்பகோணம் அரசினர் கல்லூரியிலும் நிறைவு செய்தார். அரசுப் பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு எழுதி முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

கோ. முத்துப்பிள்ளை, 1942-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். தமிழ் வளர்ச்சிக்காக தமிழக அரசால் தமிழ் வளர்ச்சித் துறை அமைக்கப்பட்டபோது அத்துறையின் முதல் உதவிச் செயலாளராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து வனத்துறை நிர்வாக அலுவலர், வீட்டு வசதி வாரியச் செயலாளர் எனப் பணியாற்றி அரசு உள்துறை இணைச் செயலராகப் பணி ஓய்வு பெற்றார். மனைவி மு. யோகாம்பாள். மகள்கள் மணிக்கொடி, ஞானாம்பாள், தங்கம்.

இலக்கிய வாழ்க்கை

முத்துப்பிள்ளை, இளம் வயது முதலே தமிழார்வம் கொண்டிருந்தார். கல்லூரியில் இலக்கிய மன்றச் செயலாளராகப் பணியாற்றினார். ‘செந்தமிழ்’, ‘செந்தமிழ்ச்செல்வி’, ‘தமிழ்ப்பொழில்’ போன்ற இலக்கிய இதழ்களில் தமிழ் குறித்தும், தமிழ் இலக்கியங்கள் குறித்தும் பல கட்டுரைகளை எழுதினார்.

தமிழ்ப் பணிகள்

முத்துப்பிள்ளை, அரசுத் துறைகளில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலச் சொற்களே வழக்கில் இருந்ததைக் கண்டு, அதனை மாற்றம் செய்ய முனைந்தார். கோப்புகளில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதுவது என்ற வழக்கத்தை மாற்றி தமிழில் குறிப்புகளையும் கடிதங்களையும் எழுதினார். சக பணியாளர்களையும் அவ்வாறு தமிழில் எழுத ஊக்குவித்தார். மாலை வேளையில் தலைமைச் செயலகத்தில் அரசு அலுவலர்களுக்கு ஆட்சிமொழித் திட்டம், செயல்பாடு பற்றி வகுப்பெடுத்தார்.

தமிழ் ஆட்சிமொழிச் சொற்கள்

கோ. முத்துப்பிள்ளை, தமிழில் புதிதாக பல ஆட்சி மொழிச் சொற்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கீ. இராமலிங்கனாரைத் தனது வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டார். அரிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் பலவும் பண்டைய இலக்கியங்களில் நம்மிடையே பழக்கத்தில் இருந்ததைச் சுட்டிக் காட்டினார். பல புதிய சொற்களை உருவாக்கி, அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். வானவூர்தி, அங்காடி, வலவன் (Pilot), புறனடை (Exception), உழைச் செல்வார் (Nurse) நிலவரை (landmark) என ஆங்கிலத்துக்கு இணையான பல சொற்கள் நம் தமிழ் இலக்கியத்தில் உள்ளன என்று எடுத்துரைத்தார்.

Efficiency - திறப்பாடு, Instruction - அறிவுறுத்தம், Profession - செய்தொழில், Proposal - கருத்துரு, Active Service - செயற்படு பணி, Initial - சுருக்கொப்பம், ZERO - சுழியம், ARMOUR - கவசம் - என்பன இவர் உருவாக்கிய ஆட்சி மொழிச் சொற்களில் சில. ’இதர’ என்பது வடசொல் அல்ல; ‘இது தவிர’ என்னும் தமிழ்ச் சொல்லே மருவி ‘இதர’ என்று ஆகியிருக்கிறது என்பது இவரது கருத்து. செயலர், துணைச் செயலர், இணைச் செயலர், கூடுதல் செயலர், தனிநிலைச் செயலர், முதன்மைச் செயலர், தலைமைச் செயலர் போன்ற சொற்கள் உருவாகக் காரணமானார்.

பணிகளும் பொறுப்புகளும்

1973-ல், அரசுத் தலைமைச் செயலகத்தில் ’முத்தமிழ் மன்றம்’ உருவானபோது, முத்துப்பிள்ளை அதன் தலைவராகப் பொறுப்பேற்றுப் பல பணிகளை முன்னெடுத்தார். தமிழகத்தில் நடைபெற்ற மூன்று உலகத் தமிழ் மாநாடுகளிலும் பேராளராகக் கலந்துகொண்டார். இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் இவர் எழுதிய “அரியணையில் அழகு தமிழ்” என்ற கட்டுரை இடம் பெற்றது. மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு மலரில் “அன்னை மொழியும் ஆட்சித் துறையும்” என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். தஞ்சையில் நடந்த எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு ‘ஆட்சி மொழிச் சொல்லாக்கம்’ என்ற கட்டுரையைச் சமர்ப்பித்தார். நீதியரசர் எஸ். மகராசன் தலைமையில் இயங்கிய ஆட்சி மொழி ஆணையத்தில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றினார்.

தான் வசித்த தங்கசாலைப் பகுதியில் ’திருவள்ளுவர் இளைஞர் கழகம்’ என்கிற அமைப்பைஉருவாக்கி ஐந்து ஆண்டுகள் திருக்குறள் வகுப்புகள் நடத்தினார். சென்னை வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ’சான்றோர் சிந்தனை’, ‘திருக்குறள் விளக்கம்’ எனப் பல்வேறு உரைகளை நிகழ்த்தினார். வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் கோ. முத்துப்பிள்ளையை மொரீஷீயஸ் தீவுக்கு அனுப்பி, அங்கு வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்தது.

பணி ஓய்வுக்குப் பின் தமிழக அரசுடன் இணைந்து தமிழ் சார்ந்த பல பணிகளை முன்னெடுத்தார். பாரத ஸ்டேட் வங்கி அமைத்திருந்த ‘வங்கிக் கலைச் சொற்கள் ஆய்வுக் குழு’வில் இடம் பெற்று வங்கிக் கலைச் சொற்களுக்கு தமிழ்ச் சொற்களை அமைத்துக் கொடுத்தார். அந்த அனுபவத்தை ‘பிறந்து வளரும் பெரிய பணி’ என்ற தலைப்பில் ‘செந்தமிழ்ச்செல்வி’ இதழில் கட்டுரையாக எழுதினார். தஞ்சை தமிழ்ப் பல்கலையின் திட்டக்குழு உறுப்பினர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

விருதுகள்

  • முத்தமிழ் மன்றம் வழங்கிய ’தமிழ்த் தொண்டர்’ விருது.
  • ஆட்சி மொழி அறிஞர் பட்டம்
  • சொல்லாக்கச் செம்மல் பட்டம்
  • சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான தமிழக அரசின் விருது.
  • தமிழக அரசின் கி.ஆ. பெ. விஸ்வநாதம் விருது (2000)

மறைவு

கோ. முத்துப்பிள்ளை, வயது மூப்பால், பிப்ரவரி 9, 2009 அன்று காலமானார்.

வரலாற்று இடம்

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், கீ.இராமலிங்கம் ஆகியோர் வழியில் நின்று தமிழில் ஆட்சி மொழிச் சொற்களை உருவாக்கி அளித்த முன்னோடித் தமிழறிஞர் கோ. முத்துப்பிள்ளை.

நூல்கள்

  • அரியணையில் அழகு தமிழ்
  • அன்னை மொழியும் ஆட்சித்துறையும்
  • ஆட்சி மொழிச் சிந்தனைகள்
  • ஆட்சி மொழிச் செயலாக்கம்
  • ஆட்சி மொழிக் கட்டுரைகள்
  • ஆட்சி மொழி அருஞ்சொற்கள்
  • மொழி பெயர்ப்பு வேடிக்கைகள்
  • தமிழறிவோம்
  • கவினார்ந்த கலைச் சொற்கள்
  • முத்தமிழ் ஆய்வு மன்ற முழுமணிச் சொற்கள்
  • ஆர்வமூட்டும் ஆட்சி மொழி
  • வங்கிக் கலைச்சொல்லாக்கம்

உசாத்துணை


✅Finalised Page