under review

கோவை சுப்ரி

From Tamil Wiki
கோவை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கோவை (பெயர் பட்டியல்)
சுப்ரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுப்ரி (பெயர் பட்டியல்)
கோவை சுப்ரி, கமலா

கோவை சுப்ரி (கே. சுப்பிரமணியம், சூப்ரி) (ஏப்ரல் 20, 1898 - 1993) கவிஞர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி. காங்கிரஸிலும், பின்னர் சுதந்திர கட்சியிலும் உறுப்பினராக இருந்தார். கோயம்புத்தூர் நகராட்சித் தலைவராகவும், கோயம்புத்தூர் நகரத் தொகுதியின் பிரதிநிதித்துவப்படுத்திய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

கோவை சுப்ரியின் இயற்பெயர் சுப்பிரமணியம். கோயம்புத்தூரில் முன்னணி வழக்கறிஞரான வி.ஆர். கிருஷ்ண ஐயர், பார்வதி இணையருக்கு ஐந்தாவது மகனாக ஏப்ரல் 20, 1898-ல் பிறந்தார்.

கோவையில் 91, கருப்ப கவுண்டர் தெருவில் சுப்ரியின் வீடு இருந்தது. ராஜாஜி, எம்.பி. சிவஞானம், சி. சுப்ரமணியம், கல்கி, சதாசிவம், எஸ்.என்.ஆர்.சின்னசாமி நாயுடு, கோவை கதர் அய்யாமுத்து, சின்ன அண்ணாமலை, டாக்டர் சி. நஞ்சப்பா, டி.ஏ.ராமலிங்கம் செட்டியார், டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியார் ஆகியோருக்கு நெருக்கமானவர்.

தனி வாழ்க்கை

கோவை சுப்ரி, கமலா

சுப்ரி பொள்ளாச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் ஆசிரியர் ஏ. நடேச ஐயரின் மகளான கமலாவை நவம்பர் 14, 1926-ல் மணந்தார். மகன் கிருஷ்ணமூர்த்தி. கமலா தனது ஆறு மாத மகளுடன் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று முனிசிபல் அலுவலகம் முன் சிறை தண்டனையும் பெற்றார். 1932-ல் தோழிகளான பத்மாவதி ஆஷர் (திருப்பூர்), அம்புஜம் ராகவாச்சாரி, முத்துலட்சுமி (சத்தியமங்கலம்), கோவிந்தம்மாள் அய்யாமுத்து மற்றும் கமலா கிருஷ்ணசாமி ஆகியோருடன் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திய சுதந்திரப்போராட்டம்

காந்திஜியின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட சுப்ரி சுதந்திர இயக்கத்தில் சேருவதற்காக கல்லூரியை விட்டு வெளியேறினார். சுதந்திரப் போராட்ட வீரர் சி.பி.சுப்பையா இவரின் நண்பர். 1921-ல் டவுன் காங்கிரஸ் கமிட்டி அமைக்கப்பட்டபோது ஜவுளி முன்னோடி ஜி. குப்புசாமி நாயுடு தலைவராகவும், சுப்ரி செயலாளராகவும் பதவி வகித்தனர். 1923-ல் சர்தார் வல்லபாய் படேலின் கீழ் நாக்பூரில் கொடி சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டபோது சுப்ரி கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருந்தார். அதன்பிறகு ஐந்து சந்தர்ப்பங்களில் சிறையில் அடைக்கப்பட்டார். தன் வாழ்நாளில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார்.

காந்தி கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது சுப்ரி அவரது மொழிபெயர்ப்பாளராக இருந்தார். காந்திஜி அவரின் குரலின் தன்மையின் பொருட்டு சுப்ரியை 'My LoudSpeaker' என்று அழைத்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

சுப்ரி ஊத்துக்குளி அருகே உள்ள படியூரில் காதி மையத்தைத் தொடங்கினார்.

அரசியல் வாழ்க்கை

கோவை சுப்ரி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். 1938 முதல் 1942 வரை கோவை நகராட்சியின் சேர்மனாக இருந்தார். அவரது முயற்சியால் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் காந்தி பார்க் உருவானது. 1947 முதல் 1952 வரை கோயம்புத்தூர் நகரத் தொகுதியின் பிரதிநிதித்துவப்படுத்திய எம்.எல்.ஏ-ஆக இருந்தார். 1959-ல் சி. ராஜகோபாலாச்சாரி தொடங்கிய சுதந்திர கட்சியில் இணைந்தார்.

எழுத்து

சுப்ரி பன்னிரெண்டு தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்ட, முருகனைத் துதி செய்து பாடப்பட்ட நானூற்றி இருபத்தியாறு பாடல்களைக் கொண்ட 'முருககானம்' என்ற நூலை இயற்றினார்.

இசையமைப்பு

சிறையிலிருந்த ஆண்டுகளில் சுப்ரி இசையமைத்த பல்வேறு தேசபக்திப் பாடல்கள் பின்னர் 'தேசிய கீதங்கள்' என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டன.

விருதுகள்

  • காந்திஜி யங் இந்தியா பத்திரிக்கையில் சுதந்திர இயக்கத்தில் அவரது நட்சத்திரப் பங்களிப்பிக்காக சுப்ரியைப் பாராட்டினார்.

மறைவு

கோவை சுப்ரி 1993-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • முருககானம்

உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Jul-2024, 09:13:34 IST