under review

கோழிக் கொற்றனார்

From Tamil Wiki

கோழிக் கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கோழிக் கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கொற்றனார் என்னும் இயற்பெயரை கொண்டவர். கோழி என்பது உறையூரின் பெயர்களில் ஒன்று. எனவே உறையூரில் வாழ்ந்ததை குறிக்கும் பொருட்டு கோழிக் கொற்றனார் என அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

கோழிக் கொற்றனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 276-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவியை சந்திக்க அனுமதிக்க மறுக்கும் தோழியிடம் தலைவன் மன்றில் தலைவிக்கும் தனக்குமான உறவை அறியப்படுத்துவேன் என உரைப்பதாக குறிஞ்சி திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • நீர் நிலைகளின் அருகே முளைத்து நிற்கும் கோரைப்புற்களை பறித்து மகளிர் விளையாடும் களிப்பாவையை செய்வர்.
  • இளமகளிர் தங்களது அழகிய முலைகளின் மீது தொய்யிலை எழுதி கொள்வர்.
  • இணையருக்கு இடையிலான காதல் ஒப்பப்படவில்லை என்றால் தலைவன், ஊர் மன்றில் தனக்கும் தலைவிக்குமான காதல் உறவை வெளிப்படுத்தி நீதி கேட்பான்.
  • உவமை: தலைவியின் தோள்கள், மூங்கிலுக்கு உவமிக்கப்பட்டன.

பாடல் நடை

குறுந்தொகை - 276

  • திணை: குறிஞ்சி துறை: தோழிக்குக் குறைமறாமல்தலைவன் கூறியது.

 பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும்
பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள்
உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்
முறையுடை யரசன் செங்கோல் அவையத்
தியான்றற் கடவின் யாங்கா வதுகொல்
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானேயிவ் வழுங்கல் ஊரே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2024, 19:35:15 IST