கோண்மா நெடுங்கோட்டனார்
கோண்மா நெடுங்கோட்டனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கோண்மா நெடுங்கோட்டனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கோண்மா நெடுங்கோடு என்னும் தொடர் யானையின் நீண்ட தந்தம் என பொருள்படும். இவர் தனது பாடல் ஒன்றில் அத்தொடரை பயன்படுத்தியதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
கொல்லிக் கண்ணன் பாடிய பாடல் நற்றிணையில் 40-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவன் தனக்கு பிறந்த இளம் மகவை பிறரறியா வண்ணம் இரவில் சென்று பார்த்து வந்த நிகழ்வை, அவனுக்கு வேண்டியவர்களிடம் பரத்தை கூறுவதாக மருதத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- இளம் பிள்ளை பிறந்த வீட்டின் முன் முற்றத்தில் மணல் பரப்பி தென்னங்கீற்றால் ஓலைப் பந்தல் வேயப்பட்டிருக்கும். பந்தலின் நுனியில் ஒலியெழுப்பும் நீண்ட நாக்கு கொண்ட மணிகள் கட்டப்பட்டிருக்கும்.
- தலைவன் பரத்தையிடத்து சென்றபோது, பாணன் வெளித்திண்ணையில் அமர்ந்திருப்பான். அதுபோல வீட்டின் முன்னே அழகிய நகைகள் அணியப்பெற்ற மகளிர் நன்நிமித்தமாக காவலுக்கு நிற்கின்றனர்.
- இளம் பிள்ளை புதிதாக செய்யப்பெற்ற நறுமணம் வீசும் மெல்லிய பஞ்சணையில் செவிலியுடன் படுத்து உறங்கி கொண்டிருப்பான்.
- பிள்ளையின் தாயானவள் வெண்கடுகு எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, பசும்பாலில் இருந்து எடுக்கப்பெற்ற புது நெய்யை உடலில் பூசியபடி உறங்குகிறாள்.
- உவமை: தலைவன் தனது சிறந்த மகனை இரவின் காரிருளில் பிறரறியா வண்ணம் கள்வனைப் போல சென்று பார்த்து மகிழ்கிறான்.
பாடல் நடை
நற்றிணை - 40
- திணை: மருதம் துறை: தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.
நெடுநா வொண்மணி கடிமனை இரட்டக்
குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர்ப்
பெரும்பாண் காவல் பூண்டென ஒருசார்த்
திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறியுற விரிந்த அறுவை மெல்லணைப்
புனிறுநாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி யணிந்த நெய்யாட் டீரணிப்
பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த
நள்ளென் கங்குற் கள்வன் போல
அகன்துறை யூரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- நற்றிணை - 40:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2024, 19:34:23 IST