under review

கோட்டம்பலவனார்

From Tamil Wiki

கோட்டம்பலவனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கோட்டம்பலவனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கோட்டம்பலம் என்கிற ஊரில் பிறந்தவர். கோட்டம்பலம் என்பது சேர நாட்டை சேர்ந்த பகுதி. கேரள மாநிலத்தின் அம்பலப்புழை முற்காலத்தில் கோட்டம்பலம் என பெயர் வழங்கப்பட்டிருந்தது. சில ஏடுகளில் கொட்டம்பலவனார் என்றும் குறிப்பிடப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கோட்டம்பலவனார் பாடிய பாடல் நற்றிணையில் 95-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவன் ஒருவன் குறத்தியர் ஆட்டத்தை கண்டு தன் காதல் கொண்டுள்ள குறப்பெண்ணின் மலைச்சிறப்பை தனது பாங்கனிடம் உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • குறத்தியர் இரு மூங்கில் கழைகளுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றின் மேல் நடந்து வித்தை காட்டுவர். அக்கயிற்றில் மென்மயிர் பரவிய தலைக்கொண்ட குரங்கு குட்டியை ஆட வைத்து நிகழ்ச்சி நடத்துவர். இதனை கண்டு குறவச் சிறுவர்கள் மூங்கில் கழைகள் மேல் ஏறி ஆடி மகிழ்ச்சி கூச்சலிடுவர்.
  • உவமை: குரங்கு குட்டியின் முகம் அத்திப் பழம் போல சிவப்பாக இருந்தது. தனது அன்னை குரங்கினை பற்றி கொள்வது போல குட்டி குரங்கு கயிற்றை பற்றியிருந்தது.

பாடல் நடை

நற்றிணை - 95

  • திணை: குறிஞ்சி
  • கூற்று:தலைமகன் பாங்கற்கு இவ்விடத்து இத்தன்மைத்தென வுரைத்தது.

கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து,
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி;
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 16:56:24 IST