கொற்றங்கொற்றனார்
கொற்றங்கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையில் ஒன்றும் அகநானூறில் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
கொற்றங்கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கொற்றன் என்னும் இயற்பெயர் உடையவர். மாற்றூர்கிழார் மகனார் கொற்றங்கொற்றனார் என்றும் நொச்சி நியமங்கிழார் மகனார் என்றும் ஏடுகளில் இருவேறு வகையாக இவரது பெயர் காணப்படுகிறது. மாற்றூர் அல்லது நொச்சியம் என்னும் இரண்டு ஊர் தலைவர்களில் ஒருவரின் மகனாக இருப்பார் என்று கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
கொற்றங்கொற்றனார் பாடிய பாடல்கள் நற்றிணையில் 259-வது பாடலாகவும் அகநானூறில் 54-வது பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. நற்றிணை 259 வது பாடலில் தினைவயல் கதிர் விளைந்துவிட்டதால் இனி தினைப்புனத்தை காக்க வருகையில் சந்திக்கும் தலைவனை பிரிந்திருக்க நேர்வதின் துயரை தலைவி தோழியிடம் உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைகிறது. அகநானூறு 54-வது பாடலில் மன்னனுடன் போருக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் வீரன் ஒருவன், தனது ஊர்வளத்தையும் மனைவி, மைந்தனின் நலத்தையும் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து தேரினை செலுத்துக என்று கூறுவதாக முல்லைத் திணையில் அமைகிறது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
நற்றிணை - 259
- தினைப்புனம் மலைகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. மலையில் வேங்கை மரங்கள் பூத்து நிற்கும். மலைகளில் அருவிகள் பொங்கி வழியும்.
- தினை வயலில் உள்ள பயிர்களை கிளி முதலான பறவைகள் கொய்து உண்ணும். பறவைகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க இளமகளிர் வயலுக்கு காவல் இருப்பர்.
- மலைநிலத்து ஆடவருடன் தினைவயல் காவல் காக்கும் இளமகளிர் காதல் கொள்வதுண்டு. அப்போது இணையராக சேர்ந்து பயிர்களை கொய்ய வரும் பறவைகளை விரட்டுவர். அருவிச்சாரலில் குளித்து தேனூறும் மலர்களை மாலையாக அணிவர்.
- உவமை: தினை வயலில் அறுவடை முடிந்தவுடன் விலகிச் செல்லும் தலைவனின் நட்பு அலைவந்து மோதி செல்லும் கடலுக்கு ஒப்புமை கூறப்பட்டது.
அகநானூறு - 54
- போரிட்ட மன்னர் விருந்தினர் ஆயினர். அரிய பொருள்களைத் திறையாகத் தந்தனர். அதனால் நம் வேந்தனும் கொடிய பகை உணர்வு தணிந்தான். கருமேகம் சூழ்கிறது. இடி முழக்கத்துடன் பெருமழை பொழிகின்றது.இந்திர கோபப் பூச்சிகள்செம்மண் நிலத்தில் ஓவியம் போல ஊர்கின்றன.
- மனையில் தாம்புக் கயிற்றில் கட்டப்பட்டு இளமை துள்ள நடைபோட்டுக்கொண்டிருக்கும் கன்றுக்குட்டிக்குப் பால் ஊட்டுவதற்காக ஆநிரை மந்தை மீண்டுகொண்டிருக்கும். பால் வீங்கும் மடியோடு, கன்றை எண்ணிக் கனைக்கும் குரலோடு வருகின்றன. காலைப் பரித்து விரையும் நடை போட்டுக்கொண்டு வருகிறது. கழுத்தில் இருக்கும் மணி ஒலிக்கும்படி வருகிறது. அவற்றை மேய்க்கும் கோவலர் அவற்றின் பின்னே வருகின்றனர். ஆடையை மடித்துக் கட்டிக்கொண்டு வருகின்றனர். கையில் வைத்திருக்கும் குழலை ஊதிக்கொண்டு வருகின்றனர். அந்தக்குழல் கொன்றை நெற்றால் செய்யப்பட்டது. கோவலரும் ஆநிரைகளும் மனை நோக்கி வருகின்றனர்.
- வள்ளல் பண்ணன் தனக்கென வாழாது பிறருக்கு உரிமையாளனாக வாழ்பவன். அவன் ஊர் சிறுகுடியில் சிறிய இலைகளுடன் நெல்லிக்காய் மிகுதியாக இருக்கும். அவற்றைத் தின்றபின் தண்ணீர் குடித்தால் எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு இனிக்கும் சொற்களை என் மனைவி பேசிக்கொண்டிருப்பாள்.
- என் மகனைக் கையால் தொட்டு ஒற்றிப் பேசிக்கொண்டிருப்பாள். என் மகன் பொன்னாலான தாலி அணிந்திருப்பான். அது பிறைநிலா வடிவில் இருக்கும். "என்னிடம் வந்தால் பால் தருவேன்" என்று இனிக்குமாறு அவள் பேசுவாள். வளைந்த கண்ணைக் காட்டிப் பேசிக்கொண்டிருப்பாள். என் மகன் அவளை ஏமாற்றிக்கொண்டிருப்பான். அவள் பூங்கொடி போன்றவள். திதலை அல்குல் கொண்டவள் அவள். என் புதல்வன் அவளை ஏமாற்றிக்கொண்டிருக்கும் நிலையைக் காணவேண்டும்.
பாடல் நடை
நற்றிணை - 259
- திணை: குறிஞ்சி
- கூற்று:தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி,
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப்
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
சாரல் ஆரம் வண்டு பட நீவி,
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போலக் காண்பேன்-விரி திரைக்
கடல் பெயர்ந்தனைய ஆகி,
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே?
அகநானூறு - 54
- திணை: முல்லை
- கூற்று: வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற்
காரும் ஆர்கலி தலையின்று. தேரும்
ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,
வள் வாய் ஆழி உள் உறுபு உருள,
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி,
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர்
.................................................
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Nov-2025, 09:11:17 IST