under review

கைலாய மாலை

From Tamil Wiki
கைலாய மாலை

கைலாய மாலை (பொ.யு. பதினாறாம் நூற்றாண்டு) யாழ்ப்பாணம் முத்துராசர் எழுதிய குறுங்காப்பியம். யாழ்ப்பாணக் குடியேற்ற வரலாற்றினைக் கூறுவது. இந்நூல் கலிவெண்பாக்களால் இயற்றப்பட்டது. இலங்கைத் தமிழரின் வரலாற்றை ஆய்வுசெய்வதற்கான மூலநூல்களில் ஒன்றாக இந்நூல் கருதப்படுகிறது.

வெளியீடு

கைலாய மாலை யாழ்ப்பாணம் முத்துராசர் எழுதிய குறுங்காப்பியம். ஈழத் தமிழரின் வரலாற்றைக் கூறும் நூல்களில் 'கைலாயமாலை', 'வையாபாடல்', 'யாழ்ப்பாண வைபவமாலை' ஆகியவை மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன.

முத்துராசர் இயற்றிய கைலாயமாலையை ஏட்டில் இருந்து 1906-ம் ஆண்டு ஆறுமுக நாவலரின் தமையனின் மகன் த. கைலாசபிள்ளை யாழ்ப்பாணம் வித்தியாநுபாலன யந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டார். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் இயற்றிய கைலாசப் பிள்ளையார் ஊஞ்சலும் இதனுடன் இணைத்து வெளி யிடப்பட்டது.

பின்னர் தெல்லிப்பழை, வழக்கறிஞர் வ. குமாரசுவாமி இந்நூலை வெளிவிட எண்ணி ஆராய்ச்சிக் குறிப்புக்களை எழுதுவதில் ஈடுபட்டிருந்தபோது மறைந்தார். குமாரசுவாமியின் மகன் கு வன்னிய சிங்கம் கைலாயமாலைக்குக் குறிப்புரையும் ஆராய்ச்சியுரையும் எழுதுவித்தார். குறிப்புரையைக் குமாரசுவாமியின் மகள் இராஜராஜேசுவரி கணேசலிங்கம் எழுதினார். வரலாற்று அறிஞரான செ. இராசநாயக முதலியார் ஆராய்ச்சியுரையை எழுதினார். இவற்றோடு கோட்டம், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் 1917-ல் வெளியிட்ட பதிப்பிற்கு எழுதிய ஆங்கிலப் பொழிப்புரையையும் சேர்த்து திருமயிலை கே. வே. ஜம்புலிங்கபிள்ளை கைலாயமாலையை 1939-ம் ஆண்டு சென்னை, சாந்தி அச்சுக் கூடத்தில் அச்சிட்டு வெளியிட்டார்.

முத்துராச கவிராசரின் கைலாயமாலை இராஜராஜேசுவரி கணேசலிங்கம் உரையுடன் மயிலங்கூடலூர் பி. நடராசனை பதிப்பாசிரியராகக் கொண்டு செட்டியார் அச்சகம், காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணத்தில் இருந்து பிப்ரவரி 26,1983-ல் மறுபதிப்பாகியது.

அமைப்பு

கைலாயமாலை கலிவெண்பாவில் இயற்றப்பட்ட காப்பு நீங்கலாக 310 இரண்டுவரிக் கண்ணிகளைக் கொண்டது. மெய்க்கீர்த்தி மாலை, உலா என்ற சிற்றிலக்கிய வகைகளின் கலவையாக அமைந்துள்ளது.

காலம்

முத்துராசக் கவிராசரின் காலத்தை உறுதியாகக் கூறும் சான்று எதுவுமில்லை.'யாழ்ப்பாண வைபவ மாலை' யின் ஆசிரியர் மயில்வாகனப் புலவர் கைலாயமாலையை முதல் நூலாகக் கொண்டார் என வைபவ மாலையின் சிறப்புப் பாயிரம் கூறுவதால் இது பொ.யு. 1736-க்கு முன்னர் எழுதப்பட்டது என அறிஞர்கள் கருதுகிறனர்.

ஆய்வாளர் இராசநாயக முதலியார் தன் கைலாயமாலை, ஆராய்ச்சி முன்னுரையில் ’1604 க்கும் 1619 க்கும் இடைப்பட்ட காலத்தில் (நல்லூர்க் கைலாசநாதர்) கோவிலுங் கட்டி நூலம் எழுதப்பட்டதெனக் கொள்ள வேண்டும்" என்கிறார். நல்லூர் கைலாசநாதர் கோயில் பொ.யு. 1604-க்குப் பின் கட்டப்பட்டது என்பதற்கு காசி நகரத்துக் கங்காதரரை அனுப்பும்படி சேதுபதிக்குச் செய்தி அனுப்பிய தகவல் அடங்கிய ‘சேதுபதிக்குச் செழும்பா சுரமனுப்பி’ (கைலாய மாலை கண்ணி 234) என்ற சொற்றொடரை ஆதாரம் காட்டுகிறார். ‘இதில் வரும் சேதுபதி இராமநாதபுரத்து மன்னராகிய சேதுபதி என்றே கருதப்படுகிறது. உடையான் சேதுபதியெனப் பெயர் பூண்ட சடையக்கதேவரே முதல் இராமநாத புரத்துக்குத் தலைவராக மதுரை நாயக்கரசனாகிய முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் பொ.யு. 1604-ல் நியமிக்கப்பட்டனர். அச் சேதுபதியென்னும் பெயர் இந்நூலகத்துக் குறிக்கப்பட்டதென்பது தெளிவு" என்கிறார் (கைலாய மாலை முன்னுரை).

தமிழக அறிஞரான கே. சேஷாத்திரி (இராமேஸ்வரம் மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர், 1975) கைலாயமாலையின் காலம் 15-ம் நூற்றாண்டு எனக் கருதுகிறார். சேஷாத்திரி பரராசசேகரன் பொ.யு. 1414-ல் சேதுபதி இராமேஸ்வரம் கோயிலைக் கட்டுவதற்குத் திருகோணமயிலிருந்து வெட்டிச் சீராக்கப்பட்ட கற்களை அனுப்பியதாகக்கூறி, சேதுபதிக்கும் 15-ம் நூற்றாண்டுக்குரிய யாழ்ப்பாண அரசர்களுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பை விளக்கி பதினைந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல் இது எனக் குறிப்பிடுகிறார்.

1983-ம் ஆண்டு பதிப்பின் ஆய்வுரை சேதுபதி என்னும் பெயர் மறவர்களுக்குரியது என்றும், அது தொன்றுதொட்டே வழங்கிய பெயர் என்று குறிப்பிட்டு, பொ.யு. 1434 -ல் வாழ்ந்த உடையார் சேதுபதி பற்றி ஆய்வாளர் ரெவெ.ஜேம்ஸ் டிரேஸி ((Rev. James Tracy, The Madras Journal of Literature and Science) கூறுவதை மேற்கோளாக்கி, இராசநாயகத்தின் கூற்றை மறுக்கிறது. ”நல்லூர் கைலாசநாதர் கோவில் முதலாம் சிங்கையாரியன் காலத்தில் (பொ.யு. 1260) கட்டப்பட்டது என்பதை மறுக்க எவ்வித ஆதாரமுமில்லை" என்று சி. பத்மநாதன் (The Kingdom of Jaffna; 1978) கூறுவதை ஆதாரமாக்கி இந்நூல் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முந்தையதாகவும் இருக்கலாம் என்கிறது.

உள்ளடக்கம்

செகராசன் என்னும் சிங்கையாரியன் வரலாறும் நல்லூர்க் கைலாசநாதர் ஆலயம் உருவான நிகழ்வும் இந்நூலின் பேசுபொருட்களில் முக்கியமானவை. 47-ம் கண்ணியிலிருந்து 212-ம் கண்ணி வரை சிங்கையாரியன் வரலாறும் 213- ஆம் கண்ணியிலிருந்து 310-ம் கண்ணி வரை கைலாசநாதர் கோவில் அமைப்பும் குடமுழுக்கும் கூறப்படுகின்றன.

முன்வரலாறு

முதற்பகுதி செகராசசேகர மன்னனுக்கு முற்பட்ட கால நிகழ்வுகளைக் கூறுகிறது. கதிரைமலை அரசன் சோழன் மகளொருத்தியை மணந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற நிகழ்ச்சியும் அவர்களுக்கு மணம் முடித்ததும், வாலசிங்கன், நரசிங்கராசன் ஆகிய மன்னர்கள் குறித்தும், நரசிங்கராசனின் முன் யாழ்ப்பாணன் ஒருவன் யாழ் இசைத்து நகரொன்றைப் பரிசாகப் பெற்றது குறித்தும், அதனால் அந்நகர் யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்றது குறித்தும் இப்பகுதியில் பேசப்படுகின்றன. ‘வரசிங்க ராயன் மகாராசராசன் நரசிங்க ராசனெனு நாமத் துரைசிங்கம்’ கதிரைமலையில் அரசாண்டிருந்த போது யாழ்ப்பாணன் கவிபாடி யாழ்ப்பாண நகரைப் பரிசாகப் பெற்றதும், யாழ்ப்பாடி யாழ்ப்பாணத்திலிருந்து ஆட்சி புரிந்து மறைந்ததும் கூறப்படுகின்றன (கண்ணிகள் 1 -46). பின்னர் யாழ்ப்பாணம் அரசனின்றி ஆனதும் பாண்டி மழவன் கோரிக்கையின்படி சிங்கையாரியன் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணப் பேரரசனாவதும் கூறப்படுகிறது.

சிங்கையாரியன்

இரண்டாம் பகுதியில் சிங்கையாரியன் என கூறப்படும் செகராசசேகரன் தனது ஆட்சியில் மேற்கொண்ட செயல்பாடுகள் விவரிக்கப்படுகின்றன. நல்லூர் (புவநேகபாகு). திருநெல்வேலி (பாண்டி மழவன், செண்பக மழவன் முதலியோர்), மயிலிட்டி (நரசிங்கதேவன்), தெல்லிப்பழை (செண்பகமாப்பாணன், சந்திரசேகர மாப்பாணன், கனகராயன்), இணுவில் (பேராயிரவன்), பச்சிலைப்பள்ளி (நீலகண்டன் முதலியோர்), புலோலி (கனகமழவன் முதலியோர்). தொல்புரம் (கூபகாரேந்திரன், நரங்குதேவன்), கோவிலாக்கண்டி (தேவராசேந்திரன்), இருபாலை (மண்ணாடு கொண்ட முதலி), தென்பற்று, நெடுந்தீவு (தனிநாயகன்), வெளிநாடு (பல்லவன், பார்த்திவர் இருவர்) ஆகிய பிரிவுகளுக்கான தலைவர்களை நியமித்தமை முதலில் கூறப்படுகின்றது.

மேற்பற்று (வல்லிய மாதாக்கன்), வடபற்று (இமையாண மாதாக்கன்), கீழ்ப்பற்று (செண்பகமாப்பாணன்), தென்பற்று (வெற்றி மாதாக்கன்) ஆகிய பெரும் பிரிவுகளுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். வீரசிங்கனென்னும் படை வீரன் சேனைத் தலைவனாக நியமிக்கப்பட்டான். பிரிவுத் தலைவர்கள், பற்றுத் தலைவர்கள், படைத் தலைவர்கள் ஆகியோரை நட்சத்திரங்களாகவும், அரசனைத் திங்களாகவும் முத்துராசர் உவமிக்கிறார்.

கைலாயநாதர் கோயில்

மூன்றாம் பகுதியில் நல்லூர்க் கைலாயநாதர் கோயிலமைப்பையும் குட முழுக்கையும் இறைவன் எழுந்தருளியதையும் கூறுகிறார். இப்பகுதியில் 266-ம் கண்ணி முதல் 287-ம் கண்ணி வரை கைலாய நாதரின் போற்றியாக அமைந்துள்ளது.

விவாதங்கள்

"யாழ்ப்பாண அரசின் வரலாற்றை ஆராய முற்பட்டவர்கள் கைலாயமாலையைத் தக்கவாறு புரிந்து திறமையுடன் பயன்படுத்தவில்லை" என சி.பத்மநாதன் ( 'ஈழத்து தமிழ் வரலாற்று நூல்கள்' 1972, பக் 1) கூறுகிறார். இதற்கு காரணமாக 1983-ம் ஆண்டு பதிப்பின் முன்னுரை கீழ்க்கண்டவற்றைச் சொல்கிறது

  • கைலாய மாலையை 'யாழ்ப்பாண வைபவ மாலை' தரும் ஒளியில் புரிந்துகொள்ளுதல்
  • மகாம்சப் புனைவுகளுடனும் அதிலுள்ள காலம் நிர்ணயிக்கப்படாத வரலாறுகளுடனும் தொடர்புறுத்திப் பொருள் கொள்ளுதல்
  • பொ.யு. 13-ம் நூற்றாண்டுக்கு முன் யாழ்ப்பாண அரசு இருந்தது என்பதை நிறுவச் சான்றுகளைப் பெறமுடியாதிருத்தல்
  • இயக்கரும் நாகரும் மனிதரல்லர் என்ற எடுகோள்
  • நல்லூர்க் கந்தசுவாமி கோவிற் கட்டியத்துக்கு அளவுக்கு மீறிய முதன்மை அளித்தல்

வரலாற்று இடம்

”கைலாயமாலையை நுணுகி ஆராய்பவர்கள் அதனை யாழ்ப்பாண அரசர்களின் தோற்றுவாயைக் கூறும் புராண மரபுப் புனைவு என்ற குறுகிய வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது. இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் யாழ்ப்பாணத்தில் வலிமிக்க 'பேரரசு' தோன்றிய காலம் வரையுமுள்ள வரலாற்றைக் குறியீட்டு முறையில் விளக்குகின்ற வரலாற்று நூலாகும். ஈழத்தில் தமிழரின் தொன்மையையும் கதிரைமலை, சிங்கைநகர், யாழ்ப்பாணம், நல்லூர் முதலிய பகுதிகளில் நிலவிய தமிழரசுகளின் சங்கமத்தையும்- ஒன்று கூடலையும்-கயிலாயமாலை குறியீட்டு முறையில் விளக்குகிறது என்றே கொள்ளவேண்டும். இங்கு எந்தத் தனி அரசனின் பெயரும் கூறப்படவில்லை. பலஇனக் குழுக்களின் வரலாறே குறியீட்டு முறையிற் கூறப்படுவது போலத் தோன்றுகிறது. இது விரிவாக ஆராயத்தக்கதாகும்” என்று இந்நூலின் இடத்தை இந்நூலின் 1983-ம் ஆண்டுப் பதிப்பின் முன்னுரை வகுக்கிறது.

உசாத்துணை


✅Finalised Page