under review

கே. ராமமூர்த்தி

From Tamil Wiki
பாரதிகாவலர் கே. ராமமூர்த்தி

கே. ராமமூர்த்தி (பாரதிகாவலர் ராமமூர்த்தி; பாரதிகாவலர் கு. ராமமூர்த்தி; பாரதிகாவலர் கே. ராமமூர்த்தி) (ஜனவரி 01, 1937 - ஏப்ரல் 07, 2026) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சொற்பொழிவாளர். பாரதி புகழ் பரப்புநர். பாரதிதாசனால், 'பாரதிகாவலர்' என்று அழைக்கப்பட்டார். தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

கே. ராமமூர்த்தி, ஜனவரி 01, 1937 அன்று, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில், கே.எஸ். குளத்து ஐயர் - விசாலாட்சி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். உயர்கல்விக்குப் பின் பட்டம் பெற்றார். ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரன், ந. சஞ்சீவி ஆகியோரிடம் தமிழ் கற்றார். சென்னை பாடியில் உள்ள டி.வி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றினார். மணமானவர். மனைவி: கங்கா ராமமூர்த்தி எழுத்தாளர்.

பாரதிகாவலர் கே. ராமமூர்த்தி பாடல்

இலக்கிய வாழ்க்கை

கே. ராமமூர்த்தி, சிறு வயது முதலே பாரதியாரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டார். 1953-ல், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையின் ஆசியுடன் சென்னையில், 'பாரதி இளைஞர் சங்கம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மூலம் பாரதி புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டார். கதை, கவிதை, கட்டுரை, என்று பல்வேறு படைப்புகளை இதழ்களில் எழுதினார். 100-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதினார். தமிழிலும், ஆங்கிலத்திலும் 300-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். பாரதி குறித்த நூல்களையும், தாகூர் உள்ளிட்ட பிற கவிஞர்கள் பற்றிய நூல்களையும் எழுதினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். மனைவி கங்கா ராமமூர்த்தியுடன் இணைந்தும் சில நூல்களை எழுதினார். அவற்றுள், 'பாரதியின் சிந்தனைச் செல்வம்' என்ற ஆய்வு நூல் குறிப்பிடத்தகுந்தது.

மேடையுரை

கே. ராமமூர்த்தி, பாரதி குறித்த பல்வேறு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். கவியரங்கங்களை நடத்தினார். தனது பாரதி இளைஞர் சங்கத்தின் மூலம் பல பேச்சாளர்களைத் உருவாக்கினார். இளம் பேச்சாளர்களை ஊக்கப்படுத்தினார். தமிழகமெங்கும் சென்று பாரதி குறித்த பல்வேறு உரைகளை நிகழ்த்தினார்.

இதழியல்

கே. ராமமூர்த்தி, 'காந்தி வட்டம்', 'அம்மன் தரிசனம்', 'பாரதி ஹெரால்ட்' இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

கே. ராமமூர்த்தி, பாரதி இளைஞர் சங்கம் மூலம், பாரதியின் உருவப்படத்தை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இல்லங்களில், 'வீட்டுக்கு வீடு பாரதி' என்ற திட்டத்தின் மூலம் கொண்டு சேர்த்தார். 1953 முதல் 1998 வரை இப்பணியை ராமமூர்த்தி மேற்கொண்டார். தகுந்தவர் இல்லங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை பாரதியின் காதலர்களாக்கி, அதன்பின் பாரதியை அவர்கள் இல்லத்தில் எழுந்தருளச் செய்வது என்று திட்டம் வகுத்துச் செயல்பட்டார். அதனால் மனம் கவரப்பட்ட பாரதிதாசன், ராமமூர்த்தியை 'பாரதிகாவலர்' என்று அழைத்துச் சிறப்பித்தார்.

சேர மன்னன் இமயவரம்பன், இமயமலையில் புலிக்கொடிச் சின்னத்தைப் பொறித்ததால் ஈர்க்கப்பட்ட ராமமூர்த்தி, தமிழக அரசின் உறுதுணையுடன் பாரதியின் பாடல்கள் சிலவற்றை இமயத்தின் அடிவாரத்தில் சலவைக் கல்லில் வடித்துச் சிறப்பித்தார். அவ்வாறே கங்கைக் கரையிலும் பாரதியின் பாடல்களை சலவைக்கல்லில் பொறித்தார். மேற்குத் தொடர்ச்சி மலைச்சிகரமான 'தொட்டபெட்டா'வில் பாரதியின் பாடல்கள் சிலவற்றைப் பொறித்து 'பாரதி கவிதைப் பதிவுக் கல்' நாட்டினார். சர்வதேசக் கவிஞர் ஃபெல்லோஷிப் பெற்றார்.

ராமமூர்த்தி, தமிழ்நாடெங்கும் சென்று பாரதிக்காகப் பல்வேறு விழாக்களை நடத்தினார். 1963 முதல் 1984 வரை பாரதி விழாவினை ஆண்டுதோறும் நடத்தினார். பாரதி குறித்து ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டார். 1988-ம் ஆண்டில், தாய்லாந்தில் நடைபெற்ற பத்தாம் உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்று பாரதியாரின் சிறப்பு குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். தனது பணிகளுக்காக பாரீஸ், பாங்காக், லண்டன், நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ நகர மேயர்களின் பாராட்டைப் பெற்றார்.

பொறுப்பு

  • பாரதி இளைஞர் சங்கத் தலைவர், நிறுவனர்
  • பாரதியார் சங்கத் தலைவர்
  • பாரதி கலைக்கழக உறுப்பினர்

விருது

  • பாரதி பிரசங்க ரத்னாகரம் பட்டம்
  • பாரதி பூஷணம்
  • பாரதி சாகரம்
  • பாரதி சுலாநிதி
  • சேவா ரத்னா
  • சேலம் தமிழ்ச் சங்க விருது
  • மும்பை தமிழ்ச் சங்க விருது
  • தில்லி தமிழ்ச் சங்க விருது
  • நாகபுரி தமிழ்ச் சங்க விருது
  • கொல்கத்தா தமிழ்ச் சங்க விருது
  • துபாய் தமிழ்ச் சங்க விருது மற்றும் பொற்கிழி
  • தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது
  • அமெரிக்க அமைப்பு அளித்த 'அவார்ட் ஆஃப் மெரிட்' என்னும் கௌரவ டாக்டர் பட்டம்
  • இத்தாலியின் 'ரைட்டர்ஸ் சொஸைட்டி' அளித்த 'ஸ்க்ரோல் ஆப் ஹானர்' பட்டம்

மறைவு

கே. ராமமூர்த்தி, ஏப்ரல் 07, 2026 அன்று, தனது 90-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

பாரதிகாவலர் ராமமூர்த்தி, 'வீட்டுக்கு வீடு பாரதி' என்ற திட்டத்தின் மூலம் மகாகவி பாரதியை இல்லம் தோறும் கொண்டு சேர்த்தார். பல இளைஞர்களைப் பேச்சாளர்களாக, கவிஞர்களாக உருவாக்கினார். பாரதியை பலருக்கு அறிமுகப்படுத்தினார். பாரதி குறித்த பல்வேறு கவியரங்குகளையும், பட்டிமன்றங்களையும் நடத்தினார். பாரதி இயல் ஆய்வாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சொற்பொழிவாளர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • பாரத தேச விஜய யாத்திரை காட்சிகளும் மாட்சிகளும்
  • ஸ்ரீ வைத்ய சுப்ரமண்ய அய்யர் வாழ்க்கை வரலாறு
  • சிருங்கேரி நாயகருக்கு சிந்தூர ஆரத்தி
  • குரு நமஸ்காரம்
  • உலக புகழ்பெற்ற கவிஞர் தாகூர்
  • தெய்வீகக் களஞ்சியம்
  • பாரதி பிறக்கட்டும்
  • ஸ்ரீ சாரதாம்பாள் திவ்ய சரிதம்
  • நமது தேசியக் கொடி
  • தமிழ்த் தாத்தா உ. வே. சா.
  • பாவைப் பாட்டில் கண்ணன் கதைகள்
  • 20-ம் நூற்றாண்டில் இந்தியா: 1901-2000 நிகழ்வுகள் ஒரு கண்ணோட்டம்
  • மணிக்கவிதைகள்: 61 கவிஞர்களின் கவிதைக் களஞ்சியம் (தொகுப்பாசிரியர்கள்: பாரதிகாவலர் கே. ராமமூர்த்தி, ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன்)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2026, 10:55:09 IST