கே.ஜே. அசோக்குமார்
To read the article in English: K.J. Ashok Kumar.
கே.ஜே. அசோக்குமார் (பிறப்பு: மே 10, 1975) எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதிவருகிறார்.
பிறப்பு கல்வி
கே.ஜே. அசோக்குமார் மே 10, 1975-ல் கும்பகோணத்தில் கே.ஆர். ஜெயராமனுக்கும், சுதந்திராதேவிக்கும் பிறந்தார். திருவாரூரில் பள்ளிக்கல்வி பயின்றார். திருச்சியில் எம்.எஸ்.ஸி (வேதியியல்) முதுகலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
கே.ஜே. அசோக்குமார் புனேயில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வருகிறார். அ. ஸ்ரீதேவியை 2000-ல் திருமணம் செய்து கொண்டார். மகள் ஹரிணி மற்றும் மகன் நந்தன்.
இலக்கிய வாழ்க்கை
பள்ளிநாட்களில் கோகுலம் இதழ்களில் பங்களிப்புகள் செய்துள்ளார். கல்லூரிக்காலங்களில் கல்லூரி இதழ்களில் கவிதை, கதை, கட்டுரை வெளியாகின. முதல் சிறுகதை வார்த்தை இதழில் வெளியானது. சுஜாதா வின் எழுத்துகளை விரும்பி படித்து அதன் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று சுந்தரராமசாமியை படிக்கத் தொடங்கினார். தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி, ஜெயமோகன், சு.வேணுகோபால் ஆகியோரின் எழுத்துக்களால் கவரப்பட்டார்.
அமைப்புப்பணிகள்
தஞ்சைகூடல் இலக்கிய அமைப்பைத் தொடங்கி, மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சிஎம்.முத்து, நா.விச்வநாதன், தேவிபாரதி, யூமா.வாசுகி, ஹரணி, வியாகுலன், இதயா ஏசுராஜ், தூயன், கலைச்செல்வி, அண்டனூர் சுரா, சுனில்கிருஷ்ணன், பிரபு மயிலாடுதுறை சுரேஷ்பிரதீப், பிரசன்ன கிருஷ்ணன், பிரதீப் கென்னடி போன்ற பல இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள்.
விருதுகள்
- வாசகசாலை இலக்கிய விருது
- நெருஞ்சி இலக்கிய விருது
இலக்கிய இடம்
"கே. ஜே. அசோக்குமார் தனக்கென ஒரு கதைக்களனை வடிவமைத்துக் கொள்வதில் திறமை மிகுந்தவராக இருக்கிறார். மானுடரின் வாழ்க்கை நோக்கை பரிசீலனை செய்யக்கூடிய களனாக அதை உருமாற்றிக்கொள்ளும் திறமையும் அவரிடம் வெளிப்படுகிறது. சமநிலையான பார்வையும் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் கூடிய கூறுமுறையும் கே. ஜே அசோக்குமாரின் பலங்களாக இத்தொகுப்பில் வெளிப்பட்டிருக்கின்றன." என எழுத்தாளர் பாவண்ணன் குறிப்பிடுகிறார். ரமணிகுளம் இவருடைய முதன்மையான படைப்பாகக் கருதப்படுகிறது
நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
- சாமத்தில் முனகும் கதவு (2016)
- குதிரைமரம் & பிறகதைகள் (2021)
நாவல்கள்
- ரமணிகுளம் (நாவல்) (2023)
உசாத்துணை
- கே.ஜே. அசோக்குமார் தளம்
- கே ஜே அசோக்குமார் படைப்புகள்
- வாசலில் நின்ற உருவம்-சிறுகதை'
- கே.ஜே.அசோக்குமார் பதாகை
- கே.ஜே.அசோக்குமார் தமிழினி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:50 IST