கே.சச்சிதானந்தன்
கே.சச்சிதானந்தன் ( 28 மே 1946) மலையாளக் கவிஞர், இலக்கியச் சிந்தனையாளர், இடதுசாரி அரசியல் விமர்சகர், இதழாளர். கேரளத்தின் புரட்சிகர இயக்கங்கள் வழியாக அறியப்பட்ட இடதுசாரி அரசியலாளராகத் திகழ்ந்தார். கே. சச்சிதானந்தன் மத்திய அரசின் இந்தியன் லிட்டரேச்சர் இதழின் ஆசிரியராகவும், நேஷனல் புக்டிரஸ்ட், சாகித்ய அக்காதமி ஆகியவற்றின் பொறுப்புகளிலும் செயல்பட்டிருக்கிறார். கேரளத்தில் இருந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற கவிஞர்.
பிறப்பு, கல்வி
கே.சச்சிதானந்தன் 28 மே 1946-ல் கேரளத்தில் திரிச்சூர் மாவட்டத்தில் கொடுங்கல்லூர் அருகே புல்லூட்டு என்னும் சிற்றூரில் கோயம்பறம்பத்து என்னும் குடும்பத்தில் சிறுவிவசாயியாக இருந்த கே.சி.சங்கர மேனனுக்கும் கே.குஞ்ஞுகுட்டி அம்மாவுக்கும் பிறந்தார்.
சச்சிதானந்தன் புல்லூட்டிலும் கொடுங்கல்லூரிலும் பள்ளிக்கல்வியை முடித்தார். கிறிஸ்து கல்லூரி, இரிஞ்ஞாலக்குடாவில் உயிரியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மகாராஜா கல்லூரி, எர்ணாகுளத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்-அமைப்புவாத கவிதை என்னும் தலைப்பில் ஆய்வு செய்து கோழிக்கோடு பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
சச்சிதானந்தன் புல்லூற்று கே.கே.டி.எம் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக 1968-ல் ஆசிரியப்பணியை தொடங்கினார். பின்னர் 1970-ல் இரிஞ்ஞாலக்குடா கிறிஸ்து கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியிலமர்ந்தார். 1992-ல் விருப்ப ஓய்வு பெற்று மைய சாகித்ய அக்காதமி வெளியிட்டுவந்த இந்தியன் லிட்டரேச்சர் இதழின் ஆசிரியராக பணியேற்று டெல்லி சென்றார்.
கே.சச்சிதானந்தன் 1969-ல் துளசிதேவி (பிந்து)வை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள்.
இதழியல்
- கே.சச்சிதானந்தன் கேரள இடதுசாரி அமைப்புகளின் சார்பாக ஜ்வாலா, உத்தரம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
- கே.சச்சித்தானந்தன் 1992 முதல் கேந்திரிய சாகித்ய அக்காதமி வெளியிட்ட இந்தியன் லிட்டரேச்சர் ஆங்கில இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
- சார்க் அமைப்பின் இலக்கிய இதழான பியாண்ட் பார்டர்ஸ் Beyond Borders ஆசிரியராகப் பணியாற்றினார்.
- டி.சி.புக்ஸ் வெளியீட்டகத்தின் பச்சக்குதிர என்னும் மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அரசியல் செயல்பாடுகள்
கே.சச்சிதானந்தன் கல்லூரி மாணவராக இருந்தபோது இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளராகவும், செயல்பாட்டாளராகவும் இருந்தார். 1968-ல் கட்சியில் இருந்து தீவிரப்போக்கு கொண்டவர்கள் பிரிந்து நக்சலைட் இயக்கத்தை உருவாக்கியபோது அதில் ஈடுபட்டார். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (எம்.எல்) அமைப்புகள் உருவாக்கிய ஜனகீயவேதி, ஜனகீய சம்ஸ்காரவேதி போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார்.
தேசிய அளவில் மனித உரிமை இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டார்.இந்திய இடதுசாரி இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஓர் எதிர் அரசியலியக்கம் உருவாக்கப்படவேண்டும் என்னும் கொள்கை கொண்டவராக நீடிக்கிறார்.
இலக்கியப்பங்களிப்பு
இலக்கிய விமர்சனம்
சச்சிதானந்தனின் இலக்கியப் பயணம் 1970ல் அவர் வெளியிட்ட குருக்ஷேத்திரம் என்னும் கவிதைகுறித்த கட்டுரைகளில் இருந்து தொடங்குகிறது. சச்சிதானந்தனின் இலக்கியக் கட்டுரைகள் மூன்று தளங்களைச் சேர்ந்தவை. மார்க்ஸியக் கோட்பாட்டு நோக்கில் இலக்கியத்தையும் பண்பாட்டையும் ஆராய்பவை முதல்வகை. இவை தொடக்ககால நூல்கள். மார்க்ஸிய அழகியல் என்னும் நூல் உதாரணம். இந்நூல் நா. சுகுமாரன் மொழியாக்கத்தில் தமிழில் வெளியாகியுள்ளது. மொழியியல் சார்ந்த இலக்கிய ஆய்வுகள் இரண்டாவது வகை. பார்த், தெரிதா போன்றவர்களை ஒட்டி புதியவகையான இலக்கிய வாசிப்பு முறைகளை விவாதிக்கும் வாசிப்பின் அரசியல் உதாரணம். சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின் புதிய அரசியல்நோக்கையும் அழகியல் நோக்கையும் இலக்காக்கி எழுதப்பட்ட ஆய்வுகள் மூன்றாவது வகை. உதாரணம் இலக்கியமும் எதிர்ப்பும். சச்சிதானந்தனின் கட்டுரைகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
கவிதை
சச்சிதானந்தன் 1968 முதல் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய முதல் கவிதைத் தொகுதியான அஞ்சு சூரியன் 1971-ல் வெளிவந்தது. அடுத்த தொகுதியான ஆத்மகீத 1974-ல் வெளிவந்தது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. சச்சிதானந்தனின் கவிதைகள் இரண்டு வகையானவை. சுருக்கமான உரைநடைத்தன்மை கொண்ட கவிதைகளுக்கு இந்தியன் ஸ்கெச்சுகள் உதாரணம். தாளக்கட்டும், செய்யுளமைப்பும் கொண்ட, மரபுச்சாயல்கொண்ட கவிதைகளுக்கு இவனேக்கூடி போன்ற கவிதைகள் உதாரணம்.
மொழியாக்கம்
சச்சிதானந்தன் ஆங்கிலத்தில் இருந்தும் இந்தியில் இருந்தும் ஏராளமான கவிதைகளையும் இலக்கியக்கொள்கைகள் குறித்த கட்டுரைகளையும் மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்துள்ளார். கேரள நவீன கவிதைக்கான மொழியை உருவாக்கியதில் இந்த மொழியாக்கங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு.
நஸுரூல் இஸ்லாம், பாப்லோ நெரூதா, பெர்டோல் பிரக்ட் ஆகியோரின் கவிதைகளுடன் ஹோ சி மின், மா சே துங் போன்ற அரசியல்தலைவர்களின் கவிதைகளையும் மொழியாக்கம் செய்துள்ளார். உலகக்கவிதைகள், மூன்றாமுலகக் கவிதைகள் என்னும் தொகுப்புகளாக ஆங்கிலம் வழியாக ஏராளமான கவிதைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டார். ஆப்ரிக்கக் கவிதைகளை கரிய கவிதை என்னும் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இந்தியில் இருந்து கபீர் முதல் நிர்மல் வர்மா வரையிலான பலருடைய கவிதைகளை சச்சிதானந்தன் மொழியாக்கம் செய்துள்ளார்.
தமிழாக்கம்
கே.சச்சிதானந்தனின் 'மயகாவ்ஸ்கி தற்கொலை செய்துகொண்டது எப்படி?" என்னும் கவிதையை 1983 ல் நா. சுகுமாரன் கோவையில் இருந்து ஞானி ஆசிரியத்துவத்தில் வெளிவந்துகொண்டிருந்த பரிமாணம் இதழில் மொழியாக்கம் செய்தார். இதுவே சச்சிதானந்தன் தமிழில் முதலில் வெளிப்பட்ட கவிதை.
பின்னர் சச்சிதானந்தன் கவிதைகளை 1984ல் தமிழக இடதுசாரி வெளியீடான மன ஓசை மாத இதழின் முதல் இலக்கம் முதல் நிர்மால்யா மொழியாக்கம் செய்து தொடர்ச்சியாக வெளியிட்டார். அவை 199 ல் ரத்தசாட்சிகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்தன. சச்சிதானந்தனின் தமிழில் வெளியான முதல் நூல் இது. "இவை நாளைய விடியலைத்தேடுபவர்கள் நல்ல படைப்பிலக்கியத்தை தருவதற்கான முன்மாதிரிகள்" என்று பின்னட்டைக் குறிப்பில் சொல்லப்பட்டிருந்தது. பின்னர் நிர்மால்யா மொழியாக்கத்தில் சரீரம் ஒரு நகரம், சச்சிதானந்தன் கவிதைகள் என்னும் தொகுப்பு வெளிவந்தது. சிற்பி சச்சிதானந்தன் கவிதைகளை மொழியாக்கம் செய்து நூலாக்கினார்.
சச்சிதானந்தனின் உரைநடைக் கவிதைகளின் மொழியமைப்பு தமிழில் நா. சுகுமாரன், மனுஷ்யபுத்திரன் போன்ற கவிஞர்களிடையே செல்வாக்கு செலுத்தியது.
அமைப்புப்பணிகள்
- கே.சச்சிதானந்தன் 1992-ல் கேந்திர சாகித்ய அக்காதமி வெளியீடான இந்தியன் லிட்டரேச்சர் ஆசிரியராக பதவி ஏற்றார்
- 1996-ல் கேந்திர சாகித்ய அக்காதமி செயலாளராக பதவி ஏற்றார். 2006 வரை அதில் பணியாற்றி ஓய்வுபெற்றார்
- 2006 முதல் இந்திராகாந்தி தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய மொழியாக்க இயக்கம் (National Translation Mission), தேசிய உயர்கல்வி துறை( Department of Higher Education) ஆகியவற்றில் ஆலோசகராகப் பணியாற்றினார்.
- 2009 முதல் சிம்லா உயர்கல்வி கழகத்தின் தேசிய சிறப்பு உறுப்பினராக பணியாற்றினார்.
- 2022 முதல் கேரள சாகித்ய அக்காதமி தலைவராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார்.
- ஐயப்பப் பணிக்கர் அறக்கட்டளை, ஆற்றூர் ரவிவர்மா அறக்கட்டளை ஆகியவற்றில் கௌரவத்தலைவராக இருந்தார்.
விருதுகள்
கே.சச்சிதானந்தன் தேசிய, சர்வதேசிய அளவில் 60 விருதுகளுக்குமேல் பெற்றுள்ளார். 2011-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு நெடும்பட்டியலில் அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
- கவிதைக்கான கேரள சாகித்ய அக்காதமி விருது 1989
- ஸ்ரீகாந்த் வர்மா ஃபெலோஷிப் 1990
- மகாகவி உள்ளூர் விருது 1996
- பி குஞ்ஞிராமன் நாயர் விருது 1997
- பாரதீய பாஷா பரிஷத் விருது 1998
- ஆசான் விருது 2000
- கங்காதர் மெஹர் கவிதை விருது 2002
- பாப்புரெட்டி தேசிய விருது 2005
- வயலார் விருது 2005
- போலந்து அரசின் விருது 2005
- சாகித்யஸ்ரீ- ஹிந்தி சம்மேளன் விருது 2006
- கார்டியன் ஆப் மெரிட் இத்தாலி 2006
- சுப்ரமணிய ஷேணாய் விருது 2008
- குசுமராஜ் தேசிய விருது 2011
- கேந்திர சாகித்ய அக்காதமி விருது 2012
- குவெம்பு தேசிய விருது 2012
இலக்கிய இடம்
கெ.சச்சிதானந்தன் மலையாள நவீன இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். முதன்மையாக அவர் நவீனக் கவிஞர். மலையாளக் கவிதையை மரபான பேசுபொருட்களில் இருந்து விடுவித்து அன்றாடச்சித்திரங்களுக்கும், அரசியல் கருக்களுக்கும் கொண்டுவந்தவர்களில் ஒருவர். மலையாளக் கவிதையை செறிவான நவீன உரைநடை நோக்கிச் செலுத்தியவர். அவ்வாறாக புதுக்கவிதை இயக்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். கே.சச்சிதானந்தன் இலக்கியத்தை இலக்கியச் செயல்பாடாக ஆக்கிக்கொண்டவர். இலக்கியக் கோட்பாட்டு விளக்கம், விமர்சனம், மொழியாக்கம், தொகைநூல்கள் உருவாக்கம், இதழ்களை நடத்துதல் என தொடர்ச்சியாக எல்லா தளங்களிலும் செயல்பட்டுவருபவர்.
நூல்கள்
தமிழில்
- ரத்தசாட்சிகள் (மொழியாக்கம் நிர்மால்யா)
- சரீரம் ஒரு நகரம். சச்சிதானந்தன் கவிதைகள் ( மொழியாக்கம் நிர்மால்யா)
- மார்க்ஸிய அழகியல் (மொழியாக்கம் நா. சுகுமாரன்)
- ஆலிலையும் நெற்கதிரும் (மொழியாக்கம் சிற்பி)
- கவிதை மீண்டும் வரும் (மொழியாக்கம், சிற்பி)
மலையாளத்தில்
கவிதைகள்
- அஞ்சு சூரியன்
- ஆத்மகீதா
- கவிதா
- இந்திய ஸ்கெட்ச்சுகள்
- எழுத்துச்சன் எழுத்துதும்போள்
- பீடன காலம்
- வேனல் மழை
- இரண்டு தீர்க கவிதைகள்
- சச்சிதண்டந்தன்றெ கவிதைகள்
- சாக்ரடீசும் கோழியும்
- இவனெக்கூடி
- வீடுமாற்றம்
- கயற்றம்
- என்றே கவிதகள்
- தேசாடனம்
- அபூர்ணம்
- மலையாளம்
- அபூர்ணம்
- விக்கு
- சாக்ஷ்யங்கள்
- கசலுகள்
- சச்சிதானந்தன் கவிதைகள் (அகம், மொழி)
- அனந்தம்
- ஒந்நாம்பாடம்
- பகுருசி
- மறந்ந்து வச்ச வாக்குகள்
- ததாகதம்
- நில்குந்ந மனுஷ்யன்
- மலயாளத்தின்றே பிரிய கவிதகள்
- சச்சிதானந்தன்றே பிரணயகவிதகள்
- சமுத்ரங்கள்க்கு மாத்ரமல்ல
- பக்ஷிகள் என்றே புறகே வருந்நு
- என்றே இந்திய என்றே ஹ்ருதயம்
- ஞான் ஒரு பாஷயாணு
- துக்கம் என்றே வீடு
- ஒரு செறிய வசந்தம்
- இல்ல வரில்ல இனி
- இருட்டிலே பாட்டுகள்
குழந்தை இலக்கியம்
- பசுவும் புலியும்
- பக்ஷிக்கவிதகள்
நாடகம்
- ஏழு லகுநாடகங்கள்
- சக்தன் தம்புரான்
- காந்தி
சிறுகதை
- அனந்தரம்
பயணக்கட்டுரைகள்
- புறம்லோகம் பலகாலம்
- மூநு யாத்ர
- கிழக்கும் படிஞாறும்
- தக்ஷிணம்
ஆய்வுகள்
- குருக்ஷேத்திரம்
- அன்வேஷணங்கள்
- பாப்லோ நெரூதா
- கத்யம்
- ஜனதயும் கவிதையும்
- மார்க்ஸிய சௌந்தர்ய சாஸ்திரம்
- தெரெஞ்ஞெடுத்த லேகனங்கள்
- சம்வாதங்கள்
- சமீபனங்கள்
- பிரெக்டின்றே கல
- படவுகள்
- காழ்ச்சகள் காழ்ச்சப்பாடுகள்
- வீண்டு விசாரங்கள்
- சௌந்தரியமும் அதிகாரமும்
- கலயும் நிஷேதவும்
- பாரதிய கலையிலே பிரதிரோத பாரம்பரியம்
- அடித்தட்டுகள்
- முகாமுகம்
- மலயாளக் கவிதா படனங்கள்
- தர்சனங்களுடே ருது பேதங்கள்
- வித்தும் விருக்ஷவும்
- சாகித்யவும் பிரதிரோதவும்
- அனுபவம் ஓர்ம யாத்ர
- ஆத்மகதங்கள்
- திரெஞ்ஞெடுத்த லேஜ்கனங்கள்
- வரூ ஈ தெருவுகளிலே ரக்தம் காணாம்
- சிந்தயுடே மானங்கள்
- இந்திய என்றே ஸ்வப்னம்
- ஒரு பிரதி சம்ஸ்காரத்தினு வேண்டி
- இடபெடலுகள்
உசாத்துணை
- நான்கு காதல் கவிதைகள்: கே.சச்சிதானந்தன்
- சச்சிதானந்தன், மேலும் ஐந்து கவிதைகள்
- கே.சச்சிதானந்தன், ஐந்து கவிதைகள்
- சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
- கே.சச்சிதானந்தன் ஐந்து கவிதைகள்
- காகங்கள் - சச்சிதானந்தன் கவிதைகள்
- சச்சிதானந்தன் இணையப்பக்கம்
- சச்சிதானந்தனை வாசிப்பது - சுயாந்தன்
- சச்சிதானந்தன் கவிதைகள்
- சச்சிதானந்தன் கவிதைகள். வாசகசாலை
- நவீனத்துவமும் அப்பாலும் சச்சிதானந்தன் பேட்டி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2024, 02:56:21 IST