under review

நிர்மால்யா

From Tamil Wiki
நிர்மால்யா

நிர்மால்யா (மணி) (பிறப்பு: மார்ச் 15, 1963) மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். மலையாளக் கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். நவீன மலையாளப் படைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்துவருகிறார்.

பிறப்பு, கல்வி

நிர்மால்யாவின் இயற்பெயர் மணி. நிர்மால்யா ஊட்டியில் சாமி, லஷ்மியம்மாள் இணையருக்கு மகனாக மார்ச் 15, 1963-ல் பிறந்தார். இவரின் பூர்வீகம் கேரளாவின் பாலக்காடு. உடன்பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள், ஒரு தங்கை, ஒரு தம்பி. ஊட்டி புனித சூசையப்பர் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

நிர்மால்யா ஜூன் 24, 1994-ல் அம்பிகாவை மணந்தார். மகன்கள் சித்தார்த் யதிஷ், அம்ருத் கிரண்.

நிர்மால்யா

அமைப்புச் செயல்பாடுகள்

நிர்மால்யா நித்ய சைதன்ய யதி எழுத்தாளர் ஜெயமோகன் சந்திப்புக்குக் காரணமாக இருந்தார். நித்ய சைதன்ய யதியின் தலைமையில் தமிழ் மலையாள இலக்கிய அரங்குகள் ஊட்டி நாராயண குருகுலத்தில் நடத்தப்பட்டன. 1999-ல் நித்ய சைதன்ய யதியின் மறைவுக்குப் பின் ஜெயமோகனுடன் இணைந்து நித்யா ஆய்வரங்கம் என்ற பெயரிலும், காவிய முகாம் என்ற பெயரிலும் நடந்த இலக்கிய கூடுகைகளின் ஒருங்கிணைப்பாளர்.

இலக்கிய வாழ்க்கை

நிர்மால்யா தன் கல்லூரி காலங்களில் எழுதிய கவிதைகள் தீபம் இதழில் வெளிவந்தன. தாமரை, சுட்டி, சுபமங்களா, தீபம் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதினார். பிரம்மராஜனை இலக்கிய ஆதர்சமாகக் குறிப்பிடுகிறார். ஆரம்ப காலத்தில் இடதுசாரிப் பார்வை கொண்டவராக இருந்ததால் 'மனஓசை' இதழுக்கு சச்சிதானந்தனின் கவிதைகளை மொழிபெயர்த்தார். பிரம்மராஜனின் தூண்டுதலால் சச்சிதானந்தனின் பிற கவிதைகளை வாசித்து அவற்றையும் மொழிபெயர்த்தார். இவர் மொழிபெயர்த்த சச்சிதானந்தன் கவிதைகள் 'சரீரம் ஒரு நகரம்' என்ற தொகுப்பாக வெளியானது. சாரா ஜோசஃபின் 'ஆலாஹாவின் பெண் மக்கள்' என்ற நாவலை சாகித்ய அகாதெமிக்காக மொழிபெயர்த்தார். கமலாதாஸின் சிறுகதைகளை 'சந்தன மரங்கள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். மலையாளத்திலிருந்து தமிழில் குறிப்பிடத்தகுந்த புனைவுகள், அபுனைவுகளை மொழிபெயர்த்தார்.

ஊட்டி காவிய முகாமில் குரு நித்யா, ஜெயமோகன், நிர்மால்யா (1996)

குரு நித்ய சைதன்ய யதியை தமிழில் அறிமுகப்படுத்தினார். நிர்மால்யா மொழிபெயர்த்த நித்ய சைதன்ய யதியின் 'மானுட மைந்தன் இயேசு' என்ற புத்தகத்தை நாராயண குருகுலம் வெளியிட்டது. ‘நன்மைக்கான பாதை’ என்ற நூலிலுள்ள கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு தினமணி கதிரில் வெளிவந்தது. தீபம், கணையாழி, தினமணி கதிர், மனஓசை, தாமரை, செம்மலர், அரும்பு, காலச்சுவடு, மீட்சி, சொல்புதிது, முன்றில், விருட்சம், சுபமங்களா, மணல்வீடு, ஓலைச்சுவடி, திசை எட்டும், ஆவநாழி, கனலி, நீலம் ஆகிய இதழ்களில் இவருடைய மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் வெளிவந்தன.

விருதுகள்

  • மொழியாக்கத்திற்கான சாகித்ய அகாதமி விருது (2010)
  • கேரள கலாச்சார விருது (2011)
  • அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது (2023)
  • திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது
  • நல்லி - திசை எட்டும் மொழியாக்க விருது

இலக்கிய இடம்

நிர்மால்யா நவீன மலையாளப் படைப்புகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருபவராக அறியப்படுகிறார்.

நூல் பட்டியல்

கட்டுரை
  • மகாத்மா அய்யன்காளி (வாழ்க்கை வரலாறு)
மொழியாக்கங்கள்
மலையாளத்திலிருந்து தமிழில்
  • மானுட மைந்தன் இயேசு (குரு நித்ய சைதன்ய யதி)
  • ஆலாஹாவின் பெண் மக்கள் (சாரா ஜோசஃப்) (நாவல்)
  • சந்தன மரங்கள் (கமலாதாஸ்) (சிறுகதை)
  • பறவையின் வாசனை (கமலாதாஸ்)
  • என்றென்றும் தாரா (கமலாதாஸ்) (சிறுகதை)
  • என் கதை (கமலாதாஸ்) (வாழ்க்கை வரலாறு)
  • சரீரம் ஒரு நகரம் (சச்சிதானந்தன்) (கவிதை)
  • இரு திரைக்காவியங்கள் (எம்.டி. வாசுதேவன் நாயர்)
  • ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறுவது எப்படி? (மதுபால்) (சிறுகதை)
  • பெருமரங்கள் விழும்போது (என்.எஸ். மாதவன்) (சிறுகதை)
  • கண்ணீரின் இனிமை (ஓர் பதிப்பாளரின் கதை)
  • கேரள பழங்குடிக் கவிதைகள்
  • தட்டகம் (கோவிலன்) (நாவல்)
  • யாழ்ப்பாணப் புகையிலை (காக்கநாடன்) (சிறுகதை)
  • மனிதனுக்கு ஒரு முன்னுரை (சுபாஷ் சந்திரன்) (நாவல்)
  • கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன்காளி (சி.அபிமன்யு)
  • சிவப்புச் சின்னங்கள் (எம். சுகுமாரன்) (சிறுகதைக)
  • செங்கோல்-ல்லாமல் கண்ணீர்-ல்லாமல் (நூரநாடு ஹனீஃப்) (நாவல்)
  • பஷீர் - தனிமையில் பயணிக்கும் துறபி (எம்.கே. ஸானு)
  • இன்றைய மலையாளக் கவிதைகள் (ஜெயமோகனுடன் இணைந்து)
  • வாழ்க்கைப்பாதை (செறுகாடு)
  • கெளரி சிறுகதைகள் (டி. பத்மநாபன்)
  • மதுபால் கதைகள் (மதுபால்)

உசாத்துணை


✅Finalised Page