under review

கூற்றங்குமரனார்

From Tamil Wiki

கூற்றங்குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கூற்றங்குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். குமரனார் என்ற இயற்பெயரை கொண்டவர். கூற்றன் என்பது அவரது தந்தையின் பெயர் என கொள்ளப்படுகிறது. சில ஏடுகளில் கூத்தங்குமரனார் என குறிப்பிடப்படுகிறது. கூத்தன் என்ற முன்னோட்டை கொண்டு இவர் கூத்தாடும் கலையை பயின்றவர் என்றும் ஊகிக்கப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

கூற்றங்குமரனார் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் 244-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவனுடன் தன்னை சேர்த்து வைக்கும் திருமண பேச்சினை வீட்டில் எடுத்து பேசாத தோழியிடம் தலைவி தன் துயரை வெளிப்படுத்தும் குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மழைக்காலத்து வீசும் பெரும் சாரலில் கூதள மலர்கள் பூத்திருக்கும். அம்மலரை சுற்றி மொய்க்கும் வண்டின் ஒசையை யாழின் இசை என கேட்டு அசுணப் பறவை மயங்கி நிற்கும். அத்தகு மலைநாட்டினன் தலைவன்.
  • உவமை: தலைவி உடலுக்கு ஒப்புமையாக, நீலமணி போன்று அழகிய மலைமீது அசோக மரங்கள் வளர்ந்து நின்று கூடுதல் அழகு சேர்க்கும் என கூறப்பட்டது. அத்தகு அழகு கொண்ட தலைவி பசலை நோயால் வாடுகிறாள்.

பாடல் நடை

நற்றிணை - 244

திணை: குறிஞ்சி துறை: அறத்தொடு நிலைவலித்த தோழியைத் தலைவி முகம்புக்கது. .

 விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவருந் தீங்குரல்
மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர்மலை நாடற்கு உரைத்தல்ஒன்றோ
துயர்மருங்கு அறியா அன்னைக் கிந்நோய்
தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ
செய்யாய் ஆதலிற் கொடியை தோழி
மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த
செயலை அந்தளிர் அன்னஎன்
மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2024, 10:49:42 IST