கூடலூர் பல்கண்ணனார்
கூடலூர் பல்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
கூடலூர் பல்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பல்கண்ணனார் என்னும் இயற்பெயர் உடையவர். கூடலூரில் பிறந்தவர். சில ஏடுகளில் கடலூர் பல்கண்ணனார் என்றும் குறிப்பிடப்படுகிறார். எனவே கடலூரை அடுத்துள்ள கூடலூரை சேர்ந்தவராக கருதப்படுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
கூடலூர் பல்கண்ணனார் பாடிய பாடல்கள் நற்றிணையில் 200, 380-ம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன. கூடலூர் பல்கண்ணனாரின் இரு பாடல்களும் மருதத் திணையில் அமைந்தவை. 200-ம் பாடலில் பரத்தையிடம் சென்று வந்த தலைவன் பாணனை தன் இல்லத்திற்கு தலைவியின் ஊடலை தீர்க்கும் பொருட்டு தூது அனுப்புகிறான். பாணனின் வருகையை அஞ்சிய தலைவி இல்லத்தில் மறைந்து கொள்ள, தெரு வழியே ஊர் விழாவை அறிவித்து சென்ற குயவனிடம் பாணனின் பொய்மையை ஊர் பெண்களுக்கு அறிவிப்பாயாக என்று பாணனின் காதில் விழும்படி தோழி உரைப்பதாக அமைந்துள்ளது. 380-ம் பாடலில் பரத்தையர் இடம் சென்ற தலைவனுக்காக தூது வரும் பாணனிடம் பிள்ளை பெற்ற தலைவி, பரத்தையர் போல் அழகாக இல்லையாதலால் தலைவனை பரத்தையிடமே கூட்டிச் செல் என தோழி கடிந்து கூறுவதாக அமைய பெற்றுள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- குயவர்கள் தமது தெருவில் நொச்சி மாலையை சூடி ஊர் விழாவை அறிவிக்க ஒரு குயவனை நியமிப்பர்.
- மருத நிலத்து ஊர் வயல்களில் ஆம்பல் பூ நிறைந்த குளங்கள் இருக்கும்.
- பரத்தையரிடம் சென்று வந்த ஆடவர் தம் சொல்லை பாணர் வழியாக வீட்டிற்கு தெரிவிப்பார்கள். பாணர்கள் கைகளில் நரம்பு கருவியான யாழை வைத்திருப்பர்.
- இல்லற பெண்டிர் தாளித்த நெய் பட்ட பிசுக்கு துணியும் அடுப்பூதிய புகையும் முகத்தில் பதியபெற்று பொலிவற்று காணப்படுவர். குழந்தைக்கு பால் ஊட்டுவதால் அவர்களின் உடலில் ஊன் மணம் வீசும்.
- பரத்தையர் வாழுமிடம் சேரி என்றழைக்கப்பட்டிருக்கிறது. பரத்தையர் நல் ஆடை அணிந்து நறுமணத் தைலங்களை உடலில் பூசிக் கொள்வர்.
- உவமை: நொச்சி மாலையானது வயலில் விளைந்த முற்றிய கதிர்மணி போலுள்ளது. தெருக்களின் விரிவு ஆறுகளை போலப் பரந்து விரிந்து காணப்படுகிறது. யாழின் நரம்பு பொன்னை ஒத்தது எனச் சிறப்பிக்கப்பட்டது.
பாடல் நடை
நற்றிணை - 200
- திணை: மருதம்
- கூற்று:தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, குயவனைக் கூவி, 'இங்ஙனம் சொல்லாயோ?' என்று குயவற்குச் சொல்லியது
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,
'சாறு' என நுவலும் முது வாய்க் குயவ!
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ-
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,
'கை கவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று,
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன்
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்' எனவே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 17:08:03 IST