கூகைக் கோழியார்
கூகைக் கோழியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் புறநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கூகைக் கோழியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'கூகைக் கோழி' என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அதையே புலவரின் பெயராக கொண்டனர்.
இலக்கிய வாழ்க்கை
கூகைக் கோழியார் பாடிய ஒரு பாடல் புறநானூறில் 364-வது பாடலாக அமைந்துள்ளது. வாழ்க்கையின் நிலையாமை கூறி அறம் செய்து மகிழ்ந்து இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பெருங்காஞ்சி துறையில் அமைந்த பொதுவியல் திணை பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
வாழ்க்கை நிலையற்றது. எனவே வாழுங்காலத்தில் அறம் செய்து மகிழ்ச்சியுடன் இருப்போம் என்பதை சொல்லும் பாடல்.
- வாழ்க்கை அரியது. இறந்தபின் இன்பங்களைத் துய்க்க முடியாது. ஈமத்தாழிகள் புதைந்துள்ள சுடுகாட்டு நிலத்தில் வேர் பரப்பி நின்றுள்ள மரங்களின் பொந்துகளில் வாழும் ஆந்தைகளின் குழறல்களே கேட்கும்.
- வாழும் போது செந்நிறத் தீயில் வாட்டியெடுத்த ஆட்டிறைச்சியையும் நறவு வகை மதுவையும் உண்டு மகிழ்வோம். இரந்தவர்களுக்கு உணவிடுவோம்.
- பாணன் தன் தலையில் சூடிக்கொள்ளும்படி குளத்தில் பூக்காத பொன்னாலான மலரையும் பாடினிக்கு வாடாத பொன்மாலையையும் அணியத் தருவோம்.
பாடல் நடை
புறநானூறு - 364
- திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி
வாடா மாலை பாடினி அணிய,
பாணன் சென்னிக் கேணி பூவா
எரி மருள் தாமரைப் பெரு மலர் தயங்க,
மை விடை இரும் போத்துச் செந் தீச் சேர்த்தி,
காயம் கனிந்த கண் அகன் கொழுங் குறை
நறவு உண் செவ் வாய் நாத் திறம் பெயர்ப்ப,
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும்,
மகிழ்கம் வம்மோ, மறப் போரோயே!
அரியஆகலும் உரிய, பெரும!
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர்
முது மரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங் காடு எய்திய ஞான்றே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - உவமையாற் பெயர்பெற்றோர்: புலவர் க,கோவிந்தன்
- புறநானூறு - 364 - Tamil surangam
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Nov-2024, 13:01:48 IST