under review

குட்டுவன் கீரனார்

From Tamil Wiki

குட்டுவன் கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

குட்டுவன் கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கீரனார் என்னும் இயற்பெயரை கொண்டவர். சேரர்களின் நாடான குட்ட நாட்டினை சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

குட்டுவன் கீரனார் பாடிய ஒரு பாடல் புறநானூறில் 240-வது பாடலாக அமைந்துள்ளது. சங்க காலத்து குறுநில அரசனான ஆய் அண்டிரனின் இறப்புக்கு வருந்திய புலவர், அவனது நற்செயல்களை பாராட்டி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும்படி பாடிய பாடல். பொதுவியல் திணையில் கையறுநிலை துறையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • ஆய் அண்டிரன் குதிரை, யானை, தேர் என மூவகை படைகளை கொண்டிருந்தான். வளம் குன்றாத அளவுக்கு மிக்க வருவாய் உடைய நாட்டையும் ஊரையும் கொண்டவன். அழகிய மகளிரை மனைவியாக பெற்றவன்.
  • ஆய் அண்டிரன் இறந்த பிறகு, ஆந்தைகள் கூவி வாழும் மரப்பொந்துகளையுடைய மரங்கள் அமைய பெற்ற சுடுகாட்டில் அவனது உடல் எரிக்கப்பட்டது.
  • தங்களை ஆதரிக்கும் புரவலனான ஆய் அண்டிரன் இறந்ததால் புலவர்கள் பசியால் வாடி உடல் மெலிந்து பிற நாட்டு அரசனை நோக்கி சென்றனர்.

பாடல் நடை

புறநானூறு - 240

  • திணை: பொதுவியல் துறை: கையறுநிலை

 ஆடுநடைப் புரவியும் களிறும் தேரும்
வாடா யாணர் நாடும் ஊரும்
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்,
கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
மேலோர் உலகம் எய்தினன்; எனாஅப்
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
'சுட்டுக் குவி'எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி
ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது;
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியர் ஆகிப்பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர் இனியே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2024, 10:46:48 IST