under review

குட்டுவன் கண்ணனார்

From Tamil Wiki

குட்டுவன் கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

குட்டுவன் கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கண்ணனார் என்னும் இயற்பெயரை கொண்டவர். சேரர்களின் நாடான குட்ட நாட்டினை சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

குட்டுவன் கண்ணனார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 179-வது பாடலாக அமைந்துள்ளது. வேட்டையாடுவதற்கத் தம் மலைநாட்டிற்கு வந்த தலைவனை இரவு தங்கிச் செல்க என தோழி கூறுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கற்கள் அமைந்திருக்கும் நிசப்தத்தையே ஒலியாக கொண்ட காட்டில் வாழும் கடமானை நாய்களின் துணையுடன் துரத்தி சென்று வேட்டையாடுவர்.
  • உயர்ந்த மலைமுகட்டில் தொங்கி நிற்கும் தேனடைகளை கிழித்து செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள மூங்கில்களை யானைகள் வளைத்து உண்ணும். அத்தகு ஊர் எங்கள் மலை ஊர்.

பாடல் நடை

குறுந்தொகை - 179

  • திணை: குறிஞ்சி துறை: பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவுகடாயது.

 கல்லென் கானத்துக் கடமா ஆட்டி
எல்லும் எல்லின்று;ஞமலியும் இளைத்தன;
செல்லல் ஐஇய உதுஎம் ஊரே
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2024, 10:46:12 IST