under review

கிடங்கில் குலபதி நக்கண்ணனார்

From Tamil Wiki

கிடங்கில் குலபதி நக்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கிடங்கில் குலபதி நக்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கண்ணன் என்னும் இயற்பெயர் கொண்டவர். ந, ஆர் விகுதிகள் புலவரின் சான்றாண்மைக்கான சிறப்புப்பட்டங்கள். கிடங்கில் என்னும் ஊரினை சேர்ந்தவர். குலபதி என்னும் பட்டம் ஆசிரியர்களை குறிக்கும். எனவே இவர் நல்லாசிரியராக திகழ்ந்துள்ளார் என அறிய முடிகிறது.

இலக்கிய வாழ்க்கை

கிடங்கில் குலபதி நக்கண்ணனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 252-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. நெடுநாள் கழித்து வந்த தலைவரை இன்முகத்தோடு வரவேற்றதன் காரணத்தை தோழிக்கு தலைவி உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • சான்றோர் பிறர் தம்மை புகழும் போது நாணப்படுவர். ஆனால் இகழ்ச்சியை தாங்கி கொள்ளமாட்டார்.
  • சான்றோரை கணவராக பெற்ற மகளிர் அவர் நெடுநாள் கழித்து இல்லம் திரும்பினாலும் இன்முகம் மாறாது வரவேற்று ஏற்றுக்கொள்வர்.

பாடல் நடை

குறுந்தொகை - 252

  • திணை: குறிஞ்சி
  • கூற்று: தலைமகன் வரவு அறிந்த தோழி,அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்துநன்காற்றினாய்" என்றாட்குக் கிழத்தி உரைத்தது.

நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்த்த
கொடிய னாகிய குன்றுகெழு நாடன்
வருவதோர் காலை யின்முகந் திரியாது
கடவுட் கற்பி னவனெதிர் பேணி
மடவை மன்ற நீயெனக் கடவுபு
துனியல் வாழி தோழி சான்றோர்
புகழு முன்னர் நாணுப
பழியாங் கொல்பவோ காணுங் காலே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Aug-2025, 07:51:31 IST