கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கண்ணன் என்னும் இயற்பெயர் கொண்டவர். கிடங்கில் என்னும் ஊரினை சேர்ந்தவர். கீரன் என்பாரின் மகன். காவிதி என்பது தந்தை கீரனார் பெற்றிருந்த சிறப்புப்பட்டமாகும். மதுரைக் காஞ்சியின் வழி 'காவிதி' என்னும் பட்டம் வழக்கியல் துறையில் நிபுணத்துவம் கொண்ட அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது என்றும் நச்சினார்கினியர் உரை வழியாக முடியுடை வேந்தர்க்கு மகட்கொடை வழங்கியோரும் காவிதி என்னும் பட்டம் பெற்றிருந்தனர் என அறிய முடிகிறது.
இலக்கிய வாழ்க்கை
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் பாடிய பாடல் நற்றிணையில் 218-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டச் சென்ற தலைவனை எண்ணி வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறிய தோழியிடம் தனது துன்பத்தினை தலைவி உரைப்பதாக நெய்தல் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பின்னர் இரவானது பூக்கள் விழுந்த கொடி போல உள்ளது.
- இரவுப் பொழுது வந்தவுடன் வௌவால்கள் பறக்கும். குதிரைகள் கனைக்கும். பெரிய வேப்பமரங்களில் வாழும் கோட்டான்கள் கூவும். பனைமரத்தில் வாழும் அன்றில் பறவை தனது இணையை கூவி அழைக்கும்.
- இரவின் காட்சிகள் ஆடவரை பிரிந்து தனிமையில் இருக்கும் மகளிரின் துயரத்தை அதிகரிக்க செய்யும் என நம்பப்பட்டது.
பாடல் நடை
நற்றிணை - 218
- திணை: நெய்தல்
- கூற்று: வரைவிடைமெலிந்ததலைமகள்வன்புறைஎதிர்மொழிந்தது
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர்
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்;
ஆனா நோய் அட வருந்தி, இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ,
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Aug-2025, 09:51:42 IST