காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் மூன்று. நற்றிணையில் ஒன்றும் அகநானூறில் இரண்டு பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் பாடிய பாடல்கள் நற்றிணையில் 389 வது பாடலாகவும், அகநானூறில் 103 மற்றும் 271 வது பாடல்களாகவும் இடம்பெற்றுள்ளன. நற்றிணை 389-ம் பாடல் பகல் நேரத்தில் சந்திக்க வரும் தலைவனிடத்து தலைவியை விரைந்து திருமணம் செய்து கொள்க என்று தோழி கூறுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது. அகநானூறு 103 மற்றும் 271 இருபாடல்களும் பாலைத் திணையில் அமைந்து, பொருளீட்டுவதற்காக செல்லும் ஆடவர் எதிர்கொள்ளும் பாலையின் கடும் சித்திரம் காட்டப்பட்டுள்ளது. 103-ம் பாடலில் பொருள்வயின் பிரிந்த தலைவனை நினைத்து அழும் தலைவியின் துயரும் 271-ம் பாடலில் தலைவியை பிரிந்தால் வரும் துயரை தோழி தலைவனுக்கு உரைப்பதாகவும் அமைந்துள்ளன. 271 ஆம் பாடலில் 'களி மலி கள்ளின் நல் தேர் அவியன் ' என்ற வரியில் அவியன் என்னும் வளம் மிக்க சிற்றரசன் ஒருவனை பற்றிய குறிப்பு உள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
நற்றிணை - 389
- வேங்கை மரங்கள் பூக்கத் தொடங்கும் முன்கோடை காலத்தில் அருவி நீர் நன்கு பாய்ந்து ஆறாக ஓடும். ஆற்று நீரின் சுவை தேனை போல் இனிமையானதாக இருக்கும். வேங்கை மரங்கள் பூத்திருப்பது புலி தோன்றியது போல் காணப்படும்.
- முன்கோடை காலத்தில் மலைப்பகுதி ஆண்கள் காட்டுக்குள் சென்று யானை வேட்டையில் ஈடுபடுவர். அவர்கள் காட்டுக்குச் சென்று விடும்போது தினைப்புனத்தைக் காவல் காக்க அன்னையர் தமது பருவப் பெண்களை அனுப்பி வைப்பர்.
- தினைப்புனம் ஆற்று நீரோடும் பகுதிக்கு அருகில் அமைந்திருந்திருக்கும். ஆற்றங்கரையோரத்து மணலை கிளறி சீய்த்து காட்டுக்கோழிகள் தம் உணவான பூச்சிகள், புழுக்களை பிடித்து உண்ணும். காட்டுக்கோழிகள் காலால் கிளறும்போது மலையில் இருந்து அடித்து வரப்படும் தங்கத்துகள்கள் கண்ணில் படும்.
- தினைப்புனத்தைக் காக்க வரும் இளமகளிருக்கும் மலை நாட்டு இளம் ஆடவருக்கும் இடையே காதல் பிறக்கும் செய்தி கூறப்பட்டுள்ளது.
அகநானூறு - 103, 271
அகநானூறு 103 மற்றும் 271 பாடல்களின் வழியாக பாலை நிலத்து வழிப்பாதையின் சித்திரம் கிடைக்கப்பெறுகிறது.
- நிழல் இல்லாத நிலப்பரப்பு. வல்லூறுப் பறவையின் ஆண் தன் கதிர் மயிர் கொண்ட தலையைச் சாய்த்து இறையைக் குறி பார்க்கும். நுண்ணிய சிவந்த நாக்கினையும், பல பொறிகளையும் உடைய குறும்பூழ் சேவல் பாதுகாப்பான இடத்தைத் தேடும்.
- காய்ந்திருந்த முள்ளுப் புதரில் தனிமையாக ஓடி ஒளிந்துகொள்ளும். அது பழுதடைந்து கிடந்த ஊர் மன்றம். பசுவினங்களை மேய்க்கும் சிறுகுடி மக்கள் அங்குத் தங்குவர். பின்னர் மாடுகள் மேயும் இடங்களைத் தேடிச் சென்றுவிடுவர்.
- புதரில் தங்கிய குறும்பூழ், இடையர் தங்கிப் போய்விட்ட உயர்ந்த நிலைக்கால் கொண்ட அகன்ற மனையின் கூரையில் இருக்கும் இறைவானத்துக்குப் போய் ஒடிவந்த வருத்தம் போகப் பெருமூச்சு விடும்.
- சிவந்த காலை உடைய வரிப் புறாவின் ஆண்பறவை தன் பெண்பறவையோடு வெளியிடங்களுக்குப் பறந்து சென்று, சுடும் மணலில் இரையைத் தேடி உண்டுவிட்டு நீரைத் தேடி கானல்நீரைத் தேடிப் பறந்து வாட்டமுறும் மழையில்லாத வழி அது.
- அந்த வழியில் உள்ள மலைப்பாறைகளைக் கடந்து நெடுந்தொலைவிலிருந்து வரும் புதியவர்களின் வாடும் உயிரைக் காப்பாற்றிய நெல்லி மரத்தில் அமர்ந்துகொண்டு அந்த இணைப் புறாக்கள் ஒன்றை ஒன்று அழைத்து அகவும்.
- உவமை: தலைவியின் தோள்கள் களிப்பு மிக்க கள்ளூரை ஆளும் அரசன் அவியன் நாட்டில், மழைமேகத்தைச் சூடிக்கொண்டுள்ள மலைப்பிளவில் விளைந்திருக்கும் மூங்கிலில் இரண்டு கணுக்களுக்கு இடையை உள்ள பகுதி போல் அழகு கொண்டவை என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாடல் நடை
நற்றிணை - 389
- திணை: குறிஞ்சி
- கூற்று : பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது
வேங்கையும் புலி ஈன்றன; அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்;
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்-
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென,
'சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல்
காவல் நீ' என்றோளே; சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே.
அகநானூறு - 103
- திணை: பாலை
- கூற்று: தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொற்றது
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின்,
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி,
காமர் சேவல் ஏமம் சேப்ப;
முளி அரில் புலம்பப் போகி, முனாஅது
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து,
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி,
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை,
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும்
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின்
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என,
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார்கொல்லோ, நாம் நயந்திசினோரே?
உசாத்துணை
- சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 2:தமிழ் பல்கலைகழகம்
- நற்றிணை - 389:Tamilvu
- அகநானூறு - 103:Tamilvu
- அகநானூறு - 271:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Dec-2025, 16:23:00 IST