under review

காந்திக் கவிதை

From Tamil Wiki

காந்திக் கவிதை (1969), காந்தி மீது ராய. சொக்கலிங்கன் பாடிய அனைத்துப் பாடல்களின் முழுமையான தொகுப்பு. இந்நூலில் 901 பாடல்கள் இடம்பெற்றன.

வெளியீடு

ராய. சொக்கலிங்கன், காந்தி மீது பாடிய பாடல்களின் முழுமையான தொகுப்பு 'காந்திக் கவிதை'. இந்நூலை, அக்டோபர் 02, 1969-ல், காந்தியின் நூற்றாண்டு விழா நாளில் அழகப்பா கல்லூரி வெளியிட்டது.

நூல் அமைப்பு

காந்திக் கவிதை நூல், காந்தி பிள்ளைத்தமிழ் தொடங்கி காந்தி இரங்கற்பா, வாழ்த்து நிறைவாக 38 பிரிவுகளைக் கொண்டது. அவற்றுள் 30 பிரிவுகள் ராய. சொக்கலிங்கன் வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆறு மாதங்களில் இயற்றப்பட்டன. வெண்பா, அகவற்பா, ஆசிரியத் தாழிசை, அறுசீர்-எண்சீர்-பன்னிருசீர் சந்த விருத்தங்கள், கலிவிருத்தம், கட்டளைக் கலித்துறை, காவடிச்சிந்து, கண்ணி எனப் பலவகை யாப்புக்களால் ஆனது.

இந்நூலில் கீழ்க்காணும் பாடல்கள் இடம்பெற்றன. நூலின் இறுதியில் வாழ்த்து இடம்பெற்றது.

  • காந்தி பிள்ளைத் தமிழ்
  • காந்தியும் வள்ளுவரும்
  • காந்தி அந்தாதி
  • காந்தி நான்மணி மாலை
  • காந்தி திருப்பள்ளி எழுச்சி
  • காந்தி திருத்தசாங்கம்
  • காந்தி திருப்பொன்னூசல்
  • காந்தி திருப்பல்லாண்டு
  • காந்தி திருநாமம் கேட்டல்
  • காந்தி புகழ் பாடுமின்
  • காந்தி சொற்பெருமை
  • அங்கங்களின் பயன்
  • ஆடாமோ ஊசல்
  • தோழிப் பேச்சு
  • ஏர்வாடாக் கோயில்
  • சபர்மதி
  • கடவுளை வேண்டல்
  • உண்ணாவிரத முடிவு
  • சிறை வாழ்வு
  • காந்தித் திருப்புகழ்
  • திருப்பணி
  • தீண்டாமை
  • தாலாட்டு
  • கும்மி
  • எந்நாட் கண்ணி
  • பேரிகை
  • விடுதலை
  • இந்தியா
  • காதல் மறுமணம்
  • கிளி விடுதூது
  • கோயில் திறவு
  • வீர நாடு
  • விடுதலைப் பாடல்
  • நாம் ஆர்க்கும் குடி அல்லோம்
  • இராசேந்திரர்
  • சுபாஷ் சந்திரர்
  • அன்புச் செல்வம்
  • காந்தி இரங்கற்பா

உள்ளடக்கம்

காந்தியின் சிறப்பு, பெருமை, அவரது பணிகள், கதரின் பெருமை, தீண்டாமை ஒழிப்பு, நாட்டுப்பற்று, போன்ற காந்தியின் செயல்கள் இந்நூலில் 901 பாடல்களில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளன. காந்தி தவப் புதல்வராகவும், தெய்வ அவதாரமாகவும், அரிய பிறவியாகவும் இந்நூலில் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

பாடல் நடை

காந்தி திருப்பள்ளி எழுச்சி

கோழிகள் கூவின கொழுரநகை முல்லைக்
கொடிகள் மலர்ந்தன படிபுகழ் உழவர்
மேழிகள் ஏந்தினர் மேதினி வாழ
மேன்மை அறம்பொருள் மேலவர் விண்டார்
ஏழிசை யோடுஇன்ப யாழ்குழல் இணைத்தே
ஏரந்தெழில் மாதர் இயம்பினர் கீதம்
வாழிகள் பாடினர் வந்தியர் காந்தி
மாதவ னே பள்ளி எழுந்தரு ளாயே

காந்தி திருப்பல்லாண்டு

மிடி பிணி படிறு பொய் வெஞ்சினம் வீண் ஆசை
மெலிவு குடி கயமை காமம்
மடி கொலை மற்றோர் மண்ணாள் மடமையொடு
மாணாத அன்னயாவும்
அடியுடன் களைந்திட அவனியில் தோன்றி உயர்
அறம்வளர்த் தருளும் எங்கள்
படிதனில் உயர்ந்தசீர்க் காந்தி அடிகட்குப்
பல்லாண்டு கூறுதுமே

காந்தித் திருப்புகழ்

பூத லத்துயர் சீலா நமோநம
போகம் விட்டருள் நாதா நமோதம
போதம் மிக்கசெங் கோவே நமோநம புகழ்சேரும்
மாது புத்திரி பாலா நமோநம
மாத வத்துரு வானாய் நமோநம
மாது யர்க்குடல் ஈவாய் நமோநம மணமாரும்
தீதில் கத்துரி தேவா நமோநம
தேச மக்களின் சாமீ நமோநம
தீயர் தம்மையும் ஆள்வாய் நமோநம செகவாழ்வை
மோது வித்தக ஞானீ நமோநம
மூடு மெய்ப்புகழ் வாழ்வே நமோநம
மோக னப்பெயர்க் காந்தீ நமோநம பெருமாளே

காந்தி தாலாட்டு

கட்டிக் கரும்பே கற்கண்டே சர்க்கரையே
தொட்டில் அசையத் தோன்றால் நீ கண்வளராய்
இந்தியத் தாய்விலங்கை ஈர்ந்தெறியப் பிறந்தபெரும்
மைந்தா அருந்தவமே மாமணியே கண்வளராய்
மருமலரே வாழ்வே வனப்பே மகிழ்கனியே
அருமந்த செல்வமே ஆசையே கண்வளராய்
அண்ணலே அன்பே அருளே அறிவேஎன்
கண்ணே மணியே காதலே கண்வளராய்

காந்தி இரங்கற்பா

அடிமைஎனும் விலங்குஅகற்றி அன்னை தனை
அரசாள அமைத்த ஐயா
மிடிமை பிணி பகை அனைத்தும் வீழ்த்துதற்கு
வீறுகொண்டு நின்ற மேலோய்
கடி தினில்நீ மறைந்தனையே! நின்கருணைக்கு
இதுதகுமோ காந்தி வள்ளால்
படியில் நிகர் இல்லாநின் அருள்வடிவத்
திருமேனி பார்ப்பது எங்கே
அன்பு தவழ் முகம் எங்கே அருள்சுரக்கும்
விழி எங்கே அமுதம் ஊறி
இன்புஒழுகும் திருவாயில் இனிக்கின்ற
பேச்செல்லாம் எங்கே எங்கே
பொன்புரையும் திருமேனிப் பொலிவு எங்கே
மோகனப்புன் சிரிப்பும் எங்கே
என்புஉருக்கும் திறம் எங்கே எழில் உகுக்கும்
பெரும்காந்தி எங்கே அந்தோ!

மதிப்பீடு

'காந்திக் கவிதை', ராய. சொக்கலிங்கன் இயற்றிய காந்திக் கவிதைகளின் முழுத்தொகுப்பு. காந்தியின் பணிகளின் சிறப்பையும் பெருமையையும், காந்தியின் புகழையும் விதந்தோதும் நூலாக அறியப்படுகிறது. காந்திக் கவிதை நூல் பற்றி, "காந்திக் கவிதை என்னும் இப்படைப்புநூல் செய்யுள் வடிவில் தோன்றிய பெறலரும் வரலாற்றிலக்கியம். வருங்காலத்தார்க்கு ஓராயிரம் உண்மைக் குறிப்புக்களைக்காத்து வைத்திருக்கும் தமிழ்ப்பேழை; சால்பியம், புரட்சியம், பொதுவியம், மக்களியம் என எண்ணப்படும் பலலியங்களும் உள் அடங்கிய காந்தியத்தின் வழிகாட்டி" என்று வ.சுப. மாணிக்கம் மதிப்பிட்டார்.

உசாத்துணை

  • காந்திக் கவிதை, ராய. சொக்கலிங்கன், அழகப்பா கல்லூரி வெளியீடு, முதல் பதிப்பு: 1969


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2024, 17:48:42 IST