காந்தி நான்மணி மாலை
- காந்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காந்தி (பெயர் பட்டியல்)
- நான்மணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நான்மணி (பெயர் பட்டியல்)
காந்தி நான்மணி மாலை (1932), ராய. சொக்கலிங்கன் அவர்களால் இயற்றப்பட்ட நூல். காந்தியைப் புகழ்ந்தும், அவரது பணிகளைப் போற்றியும் 43 பாடல்களில் பாடப்பட்டது.
தோற்றம், வெளியீடு
ராய. சொக்கலிங்கன், 1932-ல், ஆறு மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலக்கட்டத்தில் காந்தி பற்றிப் பல பாடல்களை எழுதினார். அவற்றுள் ஒன்று 'காந்தி நான்மணி மாலை'. இப்பாடல் நூலை ராய. சொக்கலிங்கன், செப்டம்பர் 23, 1932-ல் இயற்றினார்.
காந்தி மீது ராய. சொ. பாடிய காந்தி நான்மணி மாலையும், அவரது மற்றொரு நூலான காந்தி கலித்துறை அந்தாதியும் இணைக்கப்பட்டு, 'காந்தி இருபா' என்ற தலைப்பில், ஒரே நூலாக சென்னை ஊழியன் பிரஸ்ஸால் 1935-ல் வெளியிடப்பட்டது.
பிற்காலத்தில் காந்தி நான்மணி மாலையுடன், காந்தி பிள்ளைத்தமிழ், காந்தி கலித்துறை அந்தாதி மற்றும் காந்தி மீது ராய. சொக்கலிங்கன் பாடிய பிற பாடல்களும் முழுமையாகத் தொகுக்கப்பட்டு, காந்திக் கவிதை என்ற தலைப்பில் ஒரே நூலாக வெளிவந்தது. இதனை 1969-ல், அழகப்பா கல்லூரி வெளியிட்டது.
நூல் அமைப்பு
நூலின் முகவுரையில் ராய. சொ., "இவன் காந்திக் கிறுக்கன் என்று நினைப்போர் நினைக்க. இந்த உலகத்தில் பாமாலை சூட்டத் தகுதியுள்ளோர் ஒருவராவது உண்டு என்றால் அவர் காந்தியடிகளே என்பது என் கருத்து" என்று குறிப்பிட்டார். காந்தி நான்மணி மாலையில் வெண்பா, கலித்துறை, விருத்தம், ஆசிரியப்பாவில் அமைந்த 43 பாடல்கள் இடம் பெற்றன. நூலின் தொடக்கத்தில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்த பாயிரம் இடம்பெற்றது. தொடர்ந்த காப்புச்செய்யுள் வெண்பாவால் அமைந்தது. இவற்றைத் தொடர்ந்து நூல் இடம் பெற்றது.
உள்ளடக்கம்
காந்தி நான்மணி மாலை நூலில் விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகள், நாட்டில் நிலவிய தீண்டாமைக் கொடுமைகள், அதனைப் போக்க காந்தி எடுத்த முயற்சிகள் ஆகியன இடம்பெற்றன. தவப்புதல்வர்; கருணைக் கடல்; உலகிற்குக் கண்; தன்னேர் இல்லாத தலைவன்; சபர்மதி வாழ் தவம் என்றெல்லாம் பலவாறாகக் காந்தி, நான்மணிமாலையில் புகழப்பட்டார்.
பாடல் நடை
காந்தி வாழ்த்து
நான் எனது என்னும் செருக்கறுத்த நல்தவனே
ஏனையர்க்கே வாழுகின்ற எம்மானே - வானவனே
தீண்டாமை போக்கச் செகங்கலங்க ஆவிவிட
மூண்டபுகழ் மோகன வாழ் க!
முடிக நினதருள் முற்றிய
எண்ணம் முறைஅறியா
மடியர் பிறப்பினில் கீழோர்
எனச்சொலும் மாண்பில்செயல்
இடிய இந்நாட்டைப் பிரித்துப்
பிரித்தே இடும்பைசெயும்
கொடுமை யொழிந்திட காந்தி நின்
கொள்கை கைகூடுக வே
எங்கட் காகவே இப்புவி வந்தோன்
எங்கட் காகவே இதுவரை வாழ்ந்தோன்
எங்கட் காகவே இன்னும் பன்னாள்
தங்கக் காந்தியின் தூய நல்லுயிர்
மங்கள மாக வாழ்க வாழியவே
தங்குபுகழ்ச் சத்தியமே தண்ணளிய
சபர்மதிவாழ் தவமே தாவில்
எங்கள் அரும் இன்னுயிரே ஏர்வாடா
எழில்வாழ்வே எந்தாய் எண்ணில்
புங்கவனே புண்ணியனே பொருவரிய
போர்த்தலைமை பூண்டோய் பூ நீர்
திங்கள் அரி செங்கதிர் விண் தீஉளநாள்
திருக்காந்தி திகழ்க சீரோய்
மதிப்பீடு
காந்தி நான்மணி மாலை, காந்தியின் பணிகளின் சிறப்பையும் பெருமையையும், காந்தியின் புகழையும் விதந்தோதும் நூல். காந்தி உயிரோடு இருக்கும்போதே வெளியான நூல்களுள் ஒன்று. காந்தியின் புகழ்பாடும் நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அறியப்படுகிறது.
உசாத்துணை
- காந்தி இருபா, ராய. சொக்கலிங்கன், ஊழியன் பிரஸ், சென்னை, முதல் பதிப்பு: 1935
- காந்திக் கவிதை, ராய. சொக்கலிங்கன், அழகப்பா கல்லூரி வெளியீடு, முதல் பதிப்பு: 1969
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2024, 17:54:18 IST