காந்தியும் வள்ளுவரும் (கவிதை நூல்)
- காந்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காந்தி (பெயர் பட்டியல்)
காந்தியும் வள்ளுவரும் (1948) காந்தியின் மறைவுக்குப் பின் எழுதப்பட்ட நூல். தேர்ந்தெடுத்த திருக்குறள்களைப் பின் வரிகளாகவும், அதற்குப் பொருத்தமான வினாக்களை முன்வரிகளாகவும் கொண்டு ராய. சொக்கலிங்கனால் இயற்றப்பட்டது.
வெளியீடு
காந்தி பக்தரான ராய. சொக்கலிங்கன், காந்தியின் மறைவுக்குப் பின் பிப்ரவரி 1948-ல் இயற்றிய நூல் காந்தியும் வள்ளுவரும்.
காந்தியும் வள்ளுவரும் நூலுடன், காந்தி மீது ராய. சொக்கலிங்கன் பாடிய பிற பாடல்களும் முழுமையாகத் தொகுக்கப்பட்டு, காந்திக் கவிதை என்ற தலைப்பில் ஒரே நூலாக வெளிவந்தது. இதனை அக்டோபர் 02, 1969 அன்று,, காந்தியின் நூற்றாண்டின்போது அழகப்பா கல்லூரி வெளியிட்டது.
நூல் அமைப்பு
காந்தியும் வள்ளுவரும் நூல், தேர்ந்தெடுத்த 125 திருக்குறள்களைப் பின் வரிகளாகவும், அவற்றுக்குப் பொருத்தமான வினாக்களை முன்வரிகளாகவும் கொண்டு, நடுவில் தனிச்சொல்லுடன் நேரிசை வெண்பா வடிவில் இயற்றப்பட்டது.
உள்ளடக்கம்
காந்தியும் வள்ளுவரும் நூல் காந்தியின் வாய்மை, நேர்மை, புகழ், பெருமை, பண்பு, குணம், பொறுமை மற்றும் பிற சிறப்புகளை திருக்குறள்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது.
பாடல் நடை
காந்தி பெருமை கணக்கிட்டு உரைக்க உம்மால்
வாய்ந்தால் வழுத்துவீர் வள்ளுவரே - மாந்த
துறந்தார் பெருமை துணைக்கூ.றின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
எல்லா வகையும் இயற்றினான் நலலறத்தை
வல்லான் தனிக்காந்தி வள்ளுவரே - நல்லோனே
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.
தூய்மை உடற்காந்தி சொல்போல் செயல் உடையான்
வாய்மை தவறாதான் வள்ளுவரே - ஆமாம்
புறந்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
காவி உடைஅணியான் காந்தி சடைமுடியான்
மேவு தவம் இதுவோ மெய்ப்புலவீர் - ஓ ஓ
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற,
கொன்று குவித்த கொடியோன் டயருக்கும்
நன்று புரிவன் என்றான் நற்காந்தி - என்புலவீர்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
மதிப்பீடு
'காந்தியும் வள்ளுவரும்', நூல், வள்ளுவர் குறள்களுக்கு வாழ்க்கை விளக்கமாக வாழ்ந்து காட்டியவர் காந்தி என்பதைப் பல பாடல்கள் வழிக் கூறுகிறது. காந்தியை வள்ளுவரோடு ஒப்பிட்டுக் கூறும் தமிழின் குறிப்பிடத்தகுந்த இலக்கிய நூல்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.
உசாத்துணை
- காந்திக் கவிதை, ராய. சொக்கலிங்கன், அழகப்பா கல்லூரி வெளியீடு, முதல் பதிப்பு: 1969
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2024, 17:24:41 IST