under review

கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்

From Tamil Wiki

கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் மூன்று. நற்றிணை, புறநானூறு, அகநானூறில் ஒன்று வீதம் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சில ஏடுகளில் கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்றும் குறிப்பிடப்படுகிறார். சாத்தனார் என்னும் இயற்பெயர் கொண்டவர். கதப்பிள்ளை என்பது தந்தையின் பெயர். கருவூரை சார்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடிய பாடல்கள் நற்றிணையில் 343 வது பாடலாகவும், புறநானூறில் 168-ம் பாடலாகவும் அகநானூறில் 309-ம் பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. நற்றிணை 343-ம் பாடல் தலைவனைp பிரிந்து வாடும் தலைவியின் குரலாக பாலைத் திணையில் அமைந்துள்ளது. புறநானூறு 168-ம் பாடல் பாடாண் திணையில் பரிசில் துறையில் அமைந்து, பிட்டங்கொற்றனின் நாட்டுவளத்தையும் கொடைச்சிறப்பையும் கூறுகிறது.அகநானூறு 309-ம் பாடல் பொருளீட்டச் செல்லும் தலைவனின் பயணத்தின் கடுமையை கூறி, நாமும் அரசன் வானவனை நோக்கி ஓடியே பாணர் கூட்டம் போல தலைவனை நாடி செல்வோமா என்று தோழியிடம் தலைவி வினவுவதாக பாலைத் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

நற்றிணை - 343
  • மலைச்சிற்றூர்களின் எல்லையிலும் வீட்டு முற்றங்களிலும் முல்லை கொடி வளர்ந்து காணப்படும். தெருக்களில் மலர் தாதுக்களும் மாட்டு சாணமும் எருவாக இருக்கும்.
  • ஊரில் இருக்கும் ஆலமரத்தில் தெய்வம் பதியப்பட்டு பூசை செய்யப்பட்டு பலிச்சோறு இடப்படும். பலிச்சோற்றை காக்கைகள் தம் கால் விரல்களால் அள்ளிப்பற்றி செல்லும். ஆலமரத்தின் விழுதுகள் நீண்டு வளர்ந்து நிலம் தொட தொங்குவதால் மாடுகளின் முதுகில் உரசும். பலிச்சோறு உண்ணும் காக்கைகள் மாலை வேளையில் ஆலமரத்து கிளையில் கூட்டமாக அமர்ந்து கரைந்து ஒலியெழுப்பும். இக்காட்சியானது கணவனை பிரிந்து தனித்திருக்கும் மகளிரை துன்பத்திற்கு உள்ளாக்கும்.
புறநானூறு - 168
  • அருவி பாயும் மூங்கில்-காடு. அந்த மூங்கிலில் மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கும்.
  • காட்டுப் பன்றிக் குடும்பம் அங்குள்ள காந்தள் கிழங்குகளைக் கிண்டி உண்ணும். அவை கிண்டிய புழுதியில் அங்கு வாழும் குறவர்-மக்கள் தினையை உழாமலேயே விதைப்பர்.
  • அப்படி விளைந்த தினையை மரையான் என்னும் காட்டுப்பசுக்கள் மேயும். அந்த மரையானின் பாலைக் கறந்து ஊற்றி மான்கறியை சமைப்பர்.
  • சந்தன விறகில் தீ மூட்டிச் சமைப்பர். அவர்களின் வீட்டு முற்றத்தில் கூதளம்பூ பூத்துக் கிடக்கும்.
  • வரும் விருந்தினர்களுக்கெல்லாம் வாழை இலையில் அந்த முற்றத்தில் பங்கிட்டுத் தருவர்.
  • இத்தகு நாட்டு வளம் கொண்ட பிட்டங்கொற்றன் தன் நாட்டு மக்களை போலவே குறையாது வழங்கும் வள்ளல். அவனது புகழை புலவர் தமிழ் பேசும் நாடும் முழுக்க மன்னர்கள் நாணும்படி பரப்புவர்.
அகநானூறு - 309

ஆடவர் பொருளீட்ட செல்லும் வழியின் இயல்புகள்:

  • கவண் எறிந்த கல் பட்டுக் காட்டு மூங்கில் உடைந்து தீ பற்றி வெடிக்கும். இரவில் தினைப் புனத்தில் மேயும் யானை அந்த வெடிப்பு ஒலியைக் கேட்டு அஞ்சி விலகும்.
  • மழவர் பசுக்கூட்டத்தை கவர்ந்து வருவர். வாள், வில் கொண்டு போரிட்டு எதிர்ப்போரை வென்று கவர்ந்துகொண்டு வருவர். பசுக்களை வேப்ப மரத்தடிக் கடவுள் முன் நிறுத்தி வழிபடுவர். வெற்றியைப் பாறைமீது அமர்ந்து விருந்துண்டு கொண்டாடுவர். விருந்தில் தெய்வத்துக்கு இரத்தக் காவுக் கொடுக்கப்பட்ட காளை மாட்டின் இறைச்சி இருக்கும்.
  • காட்டு வழியில் வலிமையான அடிமரம் கொண்ட இலவ-மரத்தில் யானை தன் உடம்பை உரசிக்கொள்ளும். அப்போது உடைந்திருக்கும் இலவம்பூ நெற்றுகள் மழையோடு விழும் பனிக்கட்டி போல் விழும்.
  • அரசன் வானவன் பெருங் குதிரைப்படையை நடத்தி நன்கு போரிட்டு வெற்றி கண்டவன். அவன் சிறந்த வள்ளலாகவும் விளங்கினான். யாழிசையில் வல்ல கோடியர் அவனை நாடிச் செல்வர்.

பாடல் நடை

நற்றிணை - 343

  • திணை: பாலை
  • கூற்று:தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது

முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்
தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,
படையொடு வந்த பையுள் மாலை
இல்லைகொல் வாழி-தோழி!-நத்துறந்து
அரும் பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே?

புறநானூறு - 168

  • திணை: பாடாண் திணை
  • துறை: பரிசில் துறை

அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரல் சிறுதினை;
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்;
....................................................................................

அகநானூறு - 309

  • திணை: பாலை
  • கூற்று: பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது

வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை,
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய என்னார், கோடியர்
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன்
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
...................................................................................................

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Dec-2025, 16:20:01 IST