under review

கருணையானந்த பூபதி

From Tamil Wiki
Karunaiyananda Popathi
பூபதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பூபதி (பெயர் பட்டியல்)
கருணையானந்த பூபதி (தன் சீடர்களுடன்)
கருணையானந்தர் இளமையில்

கருணையானந்த பூபதி (முஹம்மது இபுறாஹீம்: ஏப்ரல் 18, 1887-1939) ஆன்மீக ஞானி. ஞான, யோக விளக்கமாகப் பல நூல்களை எழுதியவர். ஞானசூரியன் என்னும் இதழை நடத்தியவர். திருவாரூரில் தனது கருணாநிதி அச்சகம் மூலம் பல நூல்களை வெளியிட்டவர்.

பிறப்பு, கல்வி

கருணையானந்த பூபதி என்னும் புனை பெயர் கொண்ட முஹம்மது இபுறாஹீம் , ஏப்ரல் 18, 1887-ல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த பெருநாழி என்ற ஊரில் பிறந்தார். தந்தை அப்துர் ரகுமான் சாஹிப் மார்க்க அறிஞராகவும், தமிழாய்ந்த புலவராகவும் இருந்தார். மாணவர்களுக்கும், தமிழார்வம் உள்ளவர்களுக்கும் தமிழ் இலக்கியங்களைப் போதித்து வந்தார்.

கருணையானந்த பூபதி பள்ளிக்குச் சென்று பயிலவில்லை. தமது தந்தையிடமிருந்தே தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

இளம் வயதில், தந்தையுடன் கருணையானந்த பூபதி, ரங்கூனுக்குச் சென்று வசித்தார். அக்காலத்தில் இவர் வாசித்த தாயுமானவர் பாடல்களும், குணங்குடி மஸ்தான் சாஹிப்பின் பாடல்களும் ஞான வேட்கையை இவருள் தோற்றுவித்தன. அவற்றை எப்போதும் பாடிக் கொண்டிருப்பதும், அது குறித்துச் சித்தித்திருப்பதும் வழக்கமானது.

இவரது முழுப்பெயர் ஆலீ ஜனாப் ஷெய்குல் முரீதீன் முர்ஷிதுல் முஉதக்கீன் முறப்பியுல் முஸ்லீமின் ஹாதியுல்முதக்கல்லிமீன் முஹிப்பில்லா ஷைகு முஹம்மது இபிறாஹீம் என அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனி வாழ்க்கை

ரங்கூனில் இருந்து தமிழகம் திரும்பிய கருணையானந்த பூபதி, தனது தந்தையிடமிருந்தே, கோட்டாறு ஞானியார் சாஹிப் வழிமுறைப்படி குரு உபதேசம் பெற்றார்.

கருணையானந்த பூபதியின் புகழ் பரவி, இந்து மற்றும் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த பலர் சீடர்களாயினர். அவர்களில் சிலரது வேண்டுகோளுக்கிணங்க திருவாரூருக்குப் புலம் பெயர்ந்தார். ஆசிரமம் போன்ற அமைப்பைத் தோற்றுவித்து தம்மை நாடி வந்த சீடர்களுக்கு யோக, ஞான மார்க்கப் பயிற்சிகளை அளித்து வந்தார்.

நீண்ட காலம் துறவியாகவே இருந்த கருணையானந்த பூபதி, பின்னர் தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலினால் திருமணம் செய்து கொண்டார். கருணை எம்.ஜமால் இவரது மகன்.

ஞானமரபு

மன்சூர் ஹல்லாஜு ரஹ்மத்துல்லாஹி அலைஹி மரபில் வந்த கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா அவர்களிடம் தீக்கை பெற்ற தன் தந்தையிடமிருந்து தீக்கை பெற்று சூஃபி ஞானமரபில் இணைந்தார்.

பாவலர் திலகம் பெருநாழி செ.மு. அஹமதாஸ் மணி, ராமநாதபுரம் ஆவுடையாள்புரம் வித்வரத்தினம் சோமசுந்தரம் பிள்ளை, செவ்வல்மாநகரம் எம்.ஏ.நெயினான்முகமது பாவலர் போன்றவர்கள் அவருடைய முதன்மை மாணவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

ஞானம்

கருணையானந்தர் இஸ்லாமிய சூஃபி மரபுக்கும் தமிழ்ச் சித்தர் மரபுக்கும் பொதுவான தமிழ் சூஃபி மரபை முன்னெடுத்தவர். அவருடைய சூஃபி மெய்ஞானத்தை அவர் வேதாந்தம் என்றே சொல்கிறார். (குர்ஆன் வேதம் என்பதனால் சூஃபி மெய்ஞானம் வேதாந்தம் எனப்பட்டது) குண்டலினி யோகம் மற்றும் த்தர் மரபில் சரியை ,கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றையே அவரும் முன்வைத்தார். அவை தமிழ்ச் சூஃபி மரபில் அவை ஷரீகத், தரீகத், ஹக்கீகத்,மஹ்ரியத் என கூறப்படுகின்றன. இந்துமதத்தில் உள்ள தூயவேதாந்தம் மற்றும் சித்தர் யோகம் ஆகியவற்றை இஸ்லாமிய ஓரிறைக் கொள்கை மற்றும் சூஃபி மரபின் துறவு, பிரார்த்தனை ஆகியவற்றுடன் இணைத்து தனக்கான மெய்ஞானப்பார்வையை முன்வைத்தார்.

இதழியல் பணிகள்

கருணையானந்த பூபதியின் இரு புத்தகங்கள்

கருணையானந்த பூபதி , 1922-ல், திருவாரூர் விஜயபுரத்தில் ஞானசூரியன் என்ற இதழைத் தொடங்கினார். இந்து சமயத்தின் யோக, ஞான, சமயக் கருத்துக்கள், தத்துவ விளக்கங்கள் அவ்விதழில் இடம்பெற்றன. இஸ்லாமியக் கருத்து விளக்கங்களுக்கும் அவ்விதழ் இடமளித்தது. முகமது நபியின் சரித்திரத்தை அவ்விதழில் தொடராக எழுதினார்.

கருணையானந்த பூபதி யோக, ஞான அனுபவக் கருத்துக்களை பல்வேறு நூல்களாக எழுதி வெளியிட்டார். அவற்றுள் 'வேதாந்த பாஸ்கரன்', 'ஞானக் களஞ்சியம்', 'யோக ரகசியம்' போன்ற நூல்கள் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. நூல்களைத் தனது 'கருணாநிதி வர்த்தக சாலை' என்ற அமைப்பின் மூலமும், 'எம்.ஏ. நாவலர் அண்ட் சன்ஸ்' மூலமும் விற்பனை செய்து வந்தார்.தி

மு.கருணாநிதியுடன் தொடர்பு

கருணாநிதி - பெயர்க்காரணம்

இந்து மற்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பலர் கருணையானந்த பூபதியின் சீடர்களாக இருந்தனர். அவர்களுள் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் தந்தை முத்துவேலரும் ஒருவர். தனது குரு கருணையானந்த பூபதியின் மீது கொண்ட அன்பால் தனது மகனுக்குக் கருணாநிதி என்று முத்துவேலர் பெயர் சூட்டினார். இது பற்றிய செய்தியை இனிய உதயம் இதழுக்கு (ஜனவரி- 2013 இதழ்) அளித்த பேட்டியில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். அது கீழே:

கே: திருவாரூரில் கருணையானந்த பூபதி என்ற சித்தர் இருந்ததாகவும், அவருடைய நினைவாக உங்கள் பெற்றோர் கருணாநிதி என்று பெயரிட்டதாகவும் கேள்விப்பட்டோம். இது உண்மையா?

ப: உண்மைதான். என்னுடைய தந்தை, கருணையானந்த பூபதி என்ற சித்தரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் நினைவாகத் தான் எனக்குப் பெயர் சூட்டினார். அந்த சித்தரின் மகன் கருணை எம். ஜமால் தான் முதன் முதலில் முரசொலியை அச்சடித்துக் கொடுத்தவர்.

கருணை எம்.ஜமால், மு.கருணாநிதிக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தார்.

புனை பெயர்கள்

கருணையானந்த பூபதி என்ற பெயரில் மட்டுமல்லாது, கருணையானந்தர், கருணையானந்த ஞான பூபதி, கருணையானந்த யோகீஸ்வரர், கருணையானந்த மஸ்தான் சுவாமிகள், கருணையானந்த சித்தர், மணிமுத்து நாயகம் போன்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். இந்தப் பெயர்களிலும் கட்டுரைகள், நூல்களை எழுதியிருக்கிறார்.

கருணையானந்தர் நினைவிடம் - கமுதி, கோட்டை மேடு

மறைவு

கருணையானந்த பூபதி 1939-ல் காலமானார். அவரது மறைவிற்குப் பின் அவரது உடல் கமுதி கோட்டைமேட்டில் நல்லடக்கம் செய்யப் பெற்று நினைவிடம் எழுப்பப்பட்டது. இந்து - இஸ்லாம் முறைப்படி இங்கு வழிபாடுகள் நடக்கின்றன. இரு மதத்தைச் சேர்ந்தவர்களும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

வரலாற்று இடம்

கருணையானந்த பூபதி தமிழ் சூஃபி மரபைச் சேர்ந்த ஞானியாக மதிப்பிடப்படுகிறார். இஸ்லாமிய சூஃபி மரபில் உள்ள எளிமை, துறவு, தியானம், இறைச்சரணாகதி ஆகியவற்றுடன் தமிழ்ச் சித்தர் மரபிலுள்ள குண்டலினி யோகம் , வாசியோகம் போன்றவற்றையும் இணைத்து தனக்கான வழியை உருவாக்கினார். வேதாந்த மரபிலுள்ள தூய அறிவுப்பார்வையை இஸ்லாமிய ஓரிறைப்பார்வையுடன் இணைத்து முன்வைத்தார். தமிழ்ச்சூஃபி மெய்யியல் என வகுக்கப்படும் ஞானமரபின் ஞானிகளில் ஒருவர்.

நூல்கள்

  • ஷம்சுல் ஹகாயிக் என்னும் வேதாந்த பாஸ்கரன் (இரண்டு பாகங்கள்)
  • ஞானக் களஞ்சியம்
  • யோக ரகசியம்
  • சர்வ மதஜீவகாருண்யம்
  • அன்பே கடவுள்
  • ஞான யோக ரகசியம்
  • சமரச ஞானம்
  • முஹம்மது நபி சரித்திரம்
  • இஸ்லாம் மார்க்கம்
  • ஆபத்சகாயம்
  • மனம்
  • அன்பு
  • பிராணாயாம யோகம்
  • திருப்பாவணி என்னும் கந்தப் புகழ்
  • முருகப்புகழ்
  • காவடிக் கதம்பம்
  • முருகர் தியானம்
  • தெட்சணாமூர்த்தி பக்தி ரசக் கீர்த்தனை

மற்றும் பல.

ஆவணம்

கருணையானந்த பூபதி நடத்திய, ஏப்ரல் 1922 தொடங்கி மார்ச் 1924 வரையிலான ஞானசூரியன் இதழ்கள், தமிழ் இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவரது நூல்கள் சில தமிழ் இணைய நூலகத்திலும், ஆர்கிவ் தளத்திலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Feb-2023, 07:21:41 IST