அப்துர் ரகுமான்
அப்துர் ரகுமான் (இறப்பு: ஜூலை 20, 1920) தமிழ்ப் புலவர்.
வாழ்க்கை குறிப்பு
அப்துர் ரகுமான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி என்னும் ஊரில் வசதி படைத்த நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தார். விவசாய மைய தொழிலாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். தந்தையின் இறப்பு காரணமாக பள்ளிக்கு செல்லவில்லை. வயல்வேலைகளில் ஈடுபட்டார். இரவு நேரத்தில் ஊர் பொதுவிடத்தில் நடத்தப்படும் இராமாயணம், சீறாப்புராணம், பாரதம், திருவிளையாடற் புராணம் முதலிய நூல்கள் குறித்த சொற்பொழிவுகளை கேட்டு தமது கல்வியறிவை வளர்த்து கொண்டார். கல்வி கற்பதன் ஈடுபாட்டால் வயல் வேலைகளை சரிவர கவனிக்காததால் மூத்த அண்ணனால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அப்துர் ரகுமான் வீட்டை வெளியேறி பிறகு நாடோடியாக அலைந்து பர்மா தேசம் சென்று சேர்ந்தார். பர்மாவில் தனது கல்வியறிவைக் கொண்டு மதம் மற்றும் நன்னெறிச் சொற்பொழிவுகள் நடத்தும் மௌலானா தகுதியை அடைந்தார். மௌலானாவாக பெரும் பொருளீட்டிக் கொண்டு 19 வயதில் பெருநாழி கிராமத்தில் சொந்த வீட்டிற்கு திரும்பினார். தம் ஊரில் குர்ஆன் மற்றும் கித்தாப்புகள் ஓதினார். காதர் ராவுத்தரின் மகள் சாறாபீவியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பிறந்த மகன் கருணையானந்த பூபதி புலவராகவும் ஆன்மீக ஞானியாகவும் புகழ்பெற்றார்.
அப்துர் ரகுமான் தன்னுடைய பெருநாழி கிராமத்தில் மழை பொய்த்து வறட்சி நிலவிய காலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வேளூருக்கடுத்த பட்டமங்கலத்தில் சிறிது காலம் தங்கினார். அவ்வூரில் ஆசிரியர் தொழில் செய்தார். வறட்சி நீங்கிய பின்னர் தமது சொந்த ஊருக்கு திரும்பினார். இதன் பின்னர் தம்முடைய மகனுடன் பர்மாவிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கே சில காலம் மௌலானாவாகப் பணியாற்றினார். தம் இறுதிக்காலத்தில் தமிழகம் திரும்பி பெருநாழி கிராமத்தில் இருந்த பூர்வீக சொத்தை விற்றுவிட்டு நாகை மாவட்டம் அகரகடம்பனூரில் குடியேறினார். அங்கே ஜூலை 20, 1920-ம் ஆண்டு மறைந்தார்.
தொன்மங்கள்
அப்துர் ரகுமான் வாக்குப்பலிதம் கொண்டவர் என்று நம்பப்பட்டது. பெருநாழி கிராமத்தில் அடிக்கடி மழைக்காலத்தில் உடைப்பெடுக்கும் கண்மாய் கரை ஒன்றை இவர் செய்யுள் இயற்றி நிறுத்தினார் என்று கூறப்படுகிறது.
அப்துர் ரகுமான் பிராணாயாமம் முதலிய யோகப்பயிற்சிகளை செய்து வந்துள்ளார். எக்கஞ்சான் புலவருக்கும் இவருக்கும் ஏற்பட்ட புலமை காய்ச்சலால் 48 நாட்கள் தீவிர யோகப்பயிற்சியில் ஈடுபட்டு தசநாடிகள் முதலிய சித்திகளை அடைந்தார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மனைவியின் இறப்பை முன்னுணர்ந்து தந்தி செய்தி வருவதற்கு முன் சொந்த ஊரை அடைந்தார் என்றும், தஞ்சை செல்லும் இரயிலை தவறவிட்ட போது சூட்சூம சக்தி வாயிலாக காற்று மார்க்கமாக ரயிலை விட வேகமாக மதுரையில் இருந்து தஞ்சையை அடைந்தார் என்றும் கதைகள் கூறப்படுகின்றன.
இலக்கிய வாழ்க்கை
அப்துர் ரகுமான் ஏராளமான தனிப்பாடல்களை பாடியுள்ளார். இரங்கூனுக்கு சென்ற போது வழிநடைச்சிந்தும் கும்மியும் பாடியுள்ளார். கமுதியில் நவாபினால் கட்டப்பட்ட பெரும்பள்ளியின் முன்மண்டபத்தின் கட்டுமான அழகைப் போற்றி பிரபந்தம் ஒன்று பாடினார். இவரது பாடல்கள் எவையும் நூல்களாக அச்சாகவில்லை.
பாடல் நடை
விற்பன விவேகியர்க ளூடனே பேசும்
வேளையிலும் வித்வசன துடனே கல்வி
- கற்பதுடன் தொழில்கள்பல வியற்றும் போதும்
கனகரத்ன சோதிமய மாயென்கண் முன்
அற்பகலாய் நனவினிலும் கனவிலுங்கண்
டானக்தித் திருப்பதுமற் றியாதோ வென்னில்
தற்பரமாய் விளங்கியமெய்ஞ் ஞானிஈம்மு
சாபரொலி பாததரி சனங்கள்தானே
நூல்கள்
- இரங்கூன் வழிநடைச்சிந்து
- இரங்கூன் கும்மி
- வாழ்த்து பிரபந்தம்
உசாத்துணை
- தமிழ்ப் புலவர் வரிசை இருபத்து மூன்றாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1960.
-
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Apr-2026, 17:39:03 IST