under review

கண்ணங்கொற்றனார்

From Tamil Wiki

கண்ணங்கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கண்ணங்கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கொற்றனார் என்னும் இயற்பெயர் உடையவர். கண்ணன் என்பவரின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

கண்ணங்கொற்றனார் பாடிய பாடல் நற்றிணையில் 156-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. இரவுக் காலத்தில் ஆபத்து நிறைந்த வழியில் தன்னை சந்திக்க வரும் தலைவனிடத்து, நாளை முதல் தினைப்புனம் காப்பேன், அங்கே வருக என்று தலைவி கூறுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மலையில் அமைந்த ஊர்களில் கொறுகச்சி கொடி முளைத்தடர்ந்து வேலியாக சூழப்பெற்றிருக்கும்.
  • மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மிகுதியான மழை இருக்கும்.
  • மலை மக்கள் அரிசி சோற்றில் இருந்து தயாரிக்கப்படும் அரியல் என்னும் மதுவை அருந்தி மகிழ்வர்.
  • தினை வயலை வீட்டுப் பெண்கள் பகற்பொழுதில் காவல் காப்பார். காவல் காக்கும் காலத்தில் மலை நாட்டின் பெருமையையும் அந்நாட்டு தலைவனின் பெருமையையும் பாராட்டி பாடல்களை பாடுவர்.
  • காதல் கொண்ட ஆடவர் தம் நேசத்திற்குரிய பெண்களை இரவில் இருள் நிறைந்த மலைப்பாதையைக் கடந்தும் ஊர்க்காவலை மீறியும் வந்து சந்திப்பதுண்டு.

பாடல் நடை

நற்றிணை - 156

  • திணை:குறிஞ்சி கூற்று: இரவுக்குறி மறுத்தது

நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம்
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்,
பேர் அன்பினையே-பெருங் கல் நாட!-
யாமே, நின்னும் நின் மலையும் பாடி, பல் நாள்
சிறு தினை காக்குவம் சேறும்; அதனால்,
பகல் வந்தீமோ, பல் படர் அகல!
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும், பெரியர்;
பாடு இமிழ் விடர் முகை முழங்க,
ஆடு மழை இறுத்தது, எம் கோடு உயர் குன்றே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 12:53:28 IST