under review

கணிகர்

From Tamil Wiki
திருவண்ணாமலையில் இந்து கணிகர் சமூக மக்கள் சாதி சான்றிதழ் கோரி நடத்திய ஆர்ப்பாட்டம் நன்றி நிழல்

கணிகர்: மராட்டியைத் தாய் மொழியாகக் கொண்ட பன்னிரெண்டு நாடோடி சாதிக் குழுக்கள். ராவ் என்ற பின்னொட்டு பெயரைக் கொண்டவர்கள். பொதுவாக நாடோடிக் கலைகளை நிகழ்த்தி வாழ்கிறார்கள்.

கணிகர் பிரிவுகள்

கணிகர் கோந்தளா, சவான், சஸான், சாஸ்தா, டொர்கர், பாங்கோத், பாங்கா, புத்ரீகர், மண்டிகர், முத்ரீகர், வாக்டுகர், வாவுடுகள் எனப் பன்னிரெண்டு சாதிகளை உள்ளடக்கியவர்கள். இவை தவிர தேளிராஜா, அம்பிளியா, கோண்டு, மெகார், அடகா ஆகிய பிரிவுகளும் உள்ளது என நாகர்கோவிலைச் சேர்ந்த தோல்பாவைக் கூத்து கலைஞர் சுப்பையாராவ் குறிப்பிடுகிறார். இதில் மண்டிகரைத் தவிர பிற அனைவரும் சோதிடம் பார்க்கும் தொழிலைச் செய்பவர்கள்.

கோந்தளா சாதியினர் கோந்தளா என்னும் இசைக்கருவியை இசைப்பதால் இப்பெயரைப் பெற்றனர். கணிகர் சமயச் சடங்குகளில் கோந்தளா இசைக்கும் வழக்கம் உள்ளது. இச்சமூகத்தில் சிலர் பொய்க்கால் குதிரை ஆட்டமும் நிகழ்த்துகின்றனர். 1940-களுக்கு முன்னர் சம்முள்மேளம் என்ற கலையை கோந்தளா பிரிவினர் நிகழ்த்தியிருக்கின்றனர். மண்டிகர்கள் தோல்பாவைக் கூத்து நிகழ்த்தும் ஊரில் பகல்வேளைகளில் சம்முள்மேளம் இசைத்தனர்.

சவான் சாதியினர் ராசி சோட்ட சவான், பினாட்டிவாலா என்னும் இரு உட்பிரிவுகளைக் கொண்டவர்கள். முந்தைய காலங்களில் கணிகரின் பஞ்சாயத்தில் சவான் பிரிவினரே நீதி வழங்கும் உரிமை பெற்றிருந்தனர். சஸான் (சாஸ்னா) ஷாஹிபர் ஷாஷா என்ற முயலைக் குறிக்கும் சொல்லில் இருந்து சஸான் என்ற பெயர் பெற்றனர். இச்சாதியினரின் மரபுச் சின்னம் முயல். வேட்டையாடினாலும் முயலை வேட்டையாடும் வழக்கம் இவர்களிடமில்லை. இவர்களின் முன்னோர் வழிபாட்டுத் தெய்வமாக முயல் உள்ளது.

சாஸ்தா பிரிவினர் திருமணச் சடங்கிலும் பிற சடங்குகளிலும் சிவப்பு அரிசியைப் பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள். டொர்கர் மண்டிகரைப் போல் தோல்பாவைக் கூத்து நடத்தும் உரிமை கொண்டவர்கள். டொர்கரில் துமலா, மண்டீப்பகர் என இரு உட்பிரிவுகள் உண்டு. வாகுடக்காப் சாதியினரின் ஹெமிக்ரி என்ற பாவையை தங்கள் மரபு சின்னமாகக் கொண்டிருந்தனர்.

கணிகரின் பன்னிரெண்டு பிரிவுகளில் அடங்காத கோண்டு சாதியினரின் சின்னமாகக் கஞ்சித்தண்ணீர் இருந்தது. இவர்களும் அம்பிலியா பிரிவினரும் ஒன்று என்ற கருத்தும் உண்டு. மெகார் பிரிவினரின் மரபு சின்னமாக மயில் இருந்தது. இவர்கள் மயிலை வேட்டையாட மாட்டார்கள். அடகா சூரியனின் வழியில் வந்தவர்கள். இவர்கள் தங்களை ரகுவம்சத்தினர் எனக் கூறுகின்றனர்.

இந்தப் பிரிவுகளில் அடக்காதவர்கள் மண்லிக்கர் சாதியினர். இவர்களை 1/4 பிரிவாக கணக்கிடுகின்றனர். கணிகரின் வெவ்வேறு பிரிவுகளில் முறை தவறி உடலுறவு கொண்டவர்கள். ஒழுக்கம் குறைந்த ஆண், பெண் உட்பிரிவுகளில் அல்லது வேறு சாதியில் உடலுறவு வைத்துக் கொண்டவர்களை மண்லிக்கர் என்றழைக்கின்றனர். மண்லிக்கருடன் பிற கணிகர் பிரிவினர் மண உறவுகள் வைத்துக் கொள்வதில்லை. மண்லிக்கருக்கு கணிகரின் மோளாதாளாவில் உரிமையும் இல்லை. இப்பிரிவு இன்று வழக்கில் இல்லை. இவர்கள் கணிகரின் மற்ற பன்னிரெண்டு பிரிவில் கலந்துவிட்டனர்.

இராப்பாட்டாளி

கணிகரில் மண்டிகரைத் தவிர பிற சாதியினர் ஜோதிடத்தை தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்கள் ஜோதிடம் பார்ப்பது, குடுகுடுப்பை அடித்துக் குறி சொல்லுதல், கிளி, தேவாங்கு போன்ற விலங்குகளை/பறவைகளை வைத்து எதிர்காலம் கணித்துக் கூறுவது, கைரேகை பார்ப்பது ஆகியன செய்கின்றனர். இவர்களை இராப்பாட்டாளி என்றழைப்பர். மண்டிகரின் தோல்பாவைக் கூத்திலும் இராப்பாட்டாளி பாவை உள்ளது.

கணிகர்கள் ஜோதிடத்தை தங்கள் மரபு வழிச் சொத்தாகக் கருதுகின்றனர். வெள்ளிக்கிழமை நடு இரவில் அம்மன் கோவிலில் தவம் இருந்து அருள் பெற்று சக்தியை ஆவோகித்து கொள்ளும் வழக்கம் கணிகரிடம் இருந்தது. இவர்கள் ஜக்கம்மா, பிடாரி, காளி, மாரியம்மன், பவானிதேவி ஆகிய பெண் தெய்வங்களையும், மதுரை வீரன், கருப்பசாமி ஆகிய ஆண் தெய்வங்களையும் வழிபடுகின்றனர். 1970-க்குப் பின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் வழிபாடு இவர்களிடம் பரவியுள்ளது. தசரா விழாவிற்கு தமிழ்நாட்டில் உள்ள மொத்த கணிகர்களும் குலசேகரப்பட்டினத்தில் கூடுகின்றனர்.

சட்டுவி ஆயி வழிபாடு

கணிகரில் மண்டிகர், கோந்தளா, வாகுடகர் சாதியினரைத் தவிர்த்து பிற சாதியினரிடம் சட்டுவி ஆயி வழிபாடு உள்ளது. இவர்கள் ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட மாத இறுதி வெள்ளிக்கிழமையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கூடுகின்றனர். கூடும் இடத்தில் புல் தரையை வெட்டிச் சமமாக்கி தளம் அமைப்பர். அதன் மேல் ஓலைப்பாயை விரித்து, பாயின் ஓரம் தண்ணீர் நிரம்பிய செம்புப் பானையை வைப்பர். இது சட்டுவி ஆயி அம்மன் (பல் இல்லாத அம்மன்) என வழிபடப்படுகிறது. இந்த அம்மனின் அருகில் மந்திரங்களும், ஏடுகளும் இசைக்கருவிகளும் வைக்கப்படும். எல்லோரும் ஆயி முன் நெடுசாண்கிடையாக விழுந்து வணங்கி, அதற்கு வேப்பிலையும், கருப்பட்டியையும் கலந்து படைப்பர். படையில் வழிபாடு முடிந்ததும் மூத்த கணிகர் கருப்பட்டி, வேப்பிலைக் கலந்த உருண்டையை எல்லோருக்கும் விநியோகிப்பார். மற்றவர்கள் அந்த உருண்டையை உண்டு தண்ணீர் குடித்ததும் எல்லோரும் தங்களுக்குரிய ஏடுகளையும், உடுக்கைகளையும் எடுத்துக் கொள்வர்.

கணிகர் இடம்பெயர்வு

கணிகர் குழுக்கள் மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு வந்ததற்கு பல கதைகள் வழக்கில் உள்ளன. இவர்கள் மராட்டிய அரசரின் கீழ் போர் வீரர்களாக இருந்ததாகவும், அரசர் ஷாஜி வீரர்களிடம் கண்டிப்பாக நடந்துக் கொண்டதன் காரணமாகவும், மொகலாய அரசர்கள் தங்களுக்கு கீழுள்ள வீரர்களை மதம் மாற்றம் செய்ததாலும் கணிகர்கள் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தனர். சிலர் மராட்டிய அரசரிடம் தப்பிச் சென்று காட்டில் வேட்டையாடி பின்னர் நாடோடிகளாயினர்.

இவர்கள் தங்களை சூரிய வம்சத்தினர் என்றழைத்தனர் (Atak Races = சூரிய வம்சம் Arka = சூரியன். தெலுங்கு நாயக்கர்கள் காலத்தில் ஆந்திராவிலிருந்து மராட்டியத் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தனர் என்ற கருத்தும் உண்டு).

கணிகர் தங்களை ரகுகுலம் என்றே குறிப்பிடுகின்றனர். பரதன் ராமனிடம் பாதுகையைப் பெற்று ஆட்சி செய்த போது ராமக்குளுவர் அதை எதிர்த்தனர். (பார்க்க: ராமக்குளுவன்). இஸ்லாமியர் கணிகர்களிடம் திருமண உறவு ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்ததால் அதை விரும்பாத கணிகர்கள் தமிழகத்திற்கு குடிபெயர்ந்த கதையும் வழக்கில் உள்ளது.

சமூகநிலை

கணிகர்களில் மண்டிகருக்கு மட்டுமே கூத்து நிகழ்த்தும் உரிமை உள்ளது. மற்ற சாதியினர் ஜோதிடத்தை பிரதானமான தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்கள் கூத்து, ஜோதிடத்தை தவிர அலங்கார ஒப்பனைச் சாதனங்களை வீதியில் விற்பது, திருவிழாவில் பலூன் விற்பது போன்ற தொழிலிலும் ஈடுபடுகின்றனர். மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று கூடிப் பேசும் வழக்கமும் இவர்களிடம் உள்ளது.

வாழும் இடங்கள்

கணிகர் இனத்தவர்கள் மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள் மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள கடச்சானத்தல் பகுதியில் பெருமளவு வசிக்கின்றனர். கோவில்பட்டி, தோவாளை பகுதியிலும் அதிக அளவில் உள்ளனர். நாடோடி வாழ்க்கை வாழும் இவர்கள் தமிழகத்தின் பிற பகுதிகளில் குறைந்த அளவில் வசிக்கின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page