கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளமள்ளனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கடுவன் இளமள்ளனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கடுவன் என்னும் ஊரை சார்ந்தவர். கடுவன் என்னும் ஊரின் இளம்படை தலைவர் அல்லது கடுவன் மள்ளனாருக்கு இளவலாகவோ, மகனாகவோ இருந்திருப்பார் என்று கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
கடுவன் இளமள்ளனார் பாடிய பாடல் நற்றிணையில் 150 -ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. நற்றிணை 150 ஆம் பாடல் பரத்தையானவள் தன்னை தேடிவந்த தலைவனுக்குரிய பாணனிடம் தலைவனின் செயல் குறித்த தனது மன எண்ணத்தினையும் அவன் மேல் தான் கொண்ட விருப்பத்தையும் கூறுவதாக மருதத் திணையில் அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- வழுதி என்னும் மன்னன் அரண்களை உடைய பல கோட்டைகளை யானைப்படையால் தாக்கி அழித்து சென்று போர்வெற்றி பெற்றான்.
- பரத்தையரை நாடிவரும் ஆடவர் தாம் ஊர்ந்து செல்லும் குதிரையையும் தம்மையும் பூ மாலைகள் மற்றும் நறுமணத்தால் அலங்கரித்து கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது.
- இளம் பரத்தையரை அவர் தம் தாய்மார் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் என்று அறிய முடிகிறது. தனக்கு விருப்பமில்லாத ஆண்களை தமது மகளும் விரும்ப கூடாது என எண்ணியுள்ளனர் என்று அறிய முடிகிறது.
- உவமை: வழுதி மன்னன் யானைப்படையை கொண்டு கோட்டைகளை கடந்து சென்று வெற்றி கொண்டதை போல இளம் பரத்தையின் மனதை அவளது தாயின் கட்டுபாடுகளை மீறி தலைவன் கவர்ந்து சென்றான்.
பாடல் நடை
நற்றிணை - 150
- திணை: மருதம்
- கூற்று: தலைநின்றுஒழுகப்படாநின்றபரத்தைதலைவனைநெருங்கிப்பாணற்குஉரைத்தது
நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்
மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி வாழிய பல எனத் தொழுது ஈண்டு
மன் எயில் உடையோர் போல அஃது யாம்
என்னதும் பரியலோ இலம் எனத் தண் நடைக்
கலி மா கடைஇ வந்து எம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ அஞ்ச,
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக்
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Aug-2025, 09:46:47 IST