under review

ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து

From Tamil Wiki
ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து

ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து (1898) நூல், ஹைகோர்ட் எனப்படும் சென்னை உயர்நீதிமன்றக் கட்டிடம் கட்டப்பட்டது குறித்தும், அதன் கட்டட அமைப்பு, உள அலங்காரங்கள், அலுவலக அறைகள் போன்றவை எப்படி இருந்தன என்பது குறித்தும் தலைவிக்குத் தலைவன் கூறுவது போல் எழுதப்பட்ட சிந்து இலக்கிய நூல். இதனை இயற்றியவர் செஞ்சி ஏகாம்பர முதலியார்.

பிரசுரம், வெளியீடு

ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து நூலை இயற்றியவர், செஞ்சி ஏகாம்பர முதலியார். இந்நூல், 1898-ல், சென்னை, பெத்துநாய்க்கன்பேட்டை, ஆ. இரத்தினவேலு முதலியாரது வாணீ விலாஸ அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 1903, 1906 என பல்வேறு பதிப்புகள் வெளிவந்தன.

நூல் அமைப்பு

ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து நூலில் நேரிசை வெண்பா, கீர்த்தனை, சிந்து, லாவணி, நொண்டிச் சிந்து, கும்மி, விருத்தம், ஆனந்தக் களிப்பு போன்ற பல்வேறு பா வகைகள் இடம் பெற்றுள்ளன. விநாகயர் மீதான கடவுள் வாழ்த்துடன் நூல் தொடங்குகிறது. இந்த நூல் இயற்றப்படும் காலத்தில் உயர்நீதிமன்றக் கட்டடம் முழுமையாகக் கட்டிப் பூர்த்தி செய்யப்படாததால், இரண்டாம் பாகத்தில் மீதி செய்திகளைச் சொல்வேன் என்று ஆசிரியர் கூற்றாக நூல் நிறைவடைகிறது.

நூல் கூறும் செய்திகள்

ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து நூல், விக்டோரியா மகாராணியின் உத்தரவு பெற்று, 'சிஸாலன் துரை' அமைத்துத் தந்த வடிவமைப்பின் படி, பிரிட்டிஷார், ஐகோர்ட்டைக் கட்டுவதற்குக் கோட்டைக்கருகில் இடம் தேர்ந்தெடுத்தது, 1887-ல், கடற்கரையோரமாகக் கட்டிடம் கட்டத் தொடங்கியது போன்ற செய்திகளைக் கூறுகிறது. தலைவியைத் தலைவன் அழைத்துக் கொண்டு ஐகோர்ட்டின் அலங்காரத்தைக் காட்டி விளக்க முற்படுவதாக இந்நூல் தொடங்குகிறது.

தலைவன், தலைவியிடம், வாசனை நீராடிப் பல அணிகலன்கள் பூண்டு, உயர்ந்த சேலையுடன், மத்தாப்பு ரவிக்கையும் அணிந்துகொண்டு, அலங்காரம் செய்துகொண்டு, அத்தரும் பூசிக்கொண்டு, 'ஐகோர்ட்டு காணப் புறப்பட்டு வா’ என்கிறான். பின் ஐகோர்ட்டின் பெருமையை, 'ஐகோர்ட்', மூன்றடுக்கு மாடிக் கட்டிடமாக மூலையில் சுழற்படிகளுடன் திகழும் அழகை லாவணியாய்ச் சொல்லத் தொடங்குகிறான். ‘இப்படியாகச் செப்பினால் உனக்கு ஒப்பாதடி' என்று கூறி, 'நொண்டிச் சிந்தாலே வழங்கிடுவேன்' என்று நொண்டிச் சிந்தில் பாடுகிறான்.

ஐகோர்ட் கட்டிடத்தில் உள்ள கிராதிகள், சித்திரவேலைகள், 'ரைட்டர்' அமர்ந்து எழுதும் சிங்கார அறைகள், சுவரில் சலவைக் கல்லால் செய்த சித்திரப்பூ வேலைகள், தரையில் பதித்துள்ள கற்களின் அழகு, அலங்காரக் கதவுகள், ஜன்னல் வேலைப்பாடுகள், அலுவலர்களுக்குரிய விடுதிகள், 'ஜூரிகள்′ அமர்ந்து பேசும் அறை, 'ஜட்ஜு'களுக்குரிய மேஜையலங்காரம், 'குறிச்சி' அலங்காரம் ஆகியவற்றின் சிறப்பை வியந்து கூறும் தலைவன், மந்திரச் சிற்பிகளின் மாளிகை என்றும், சித்திர மண்டபம் என்றும், பதுமை அலங்காரப் பளிங்குமேடை, அந்தரலோக இந்திரகொலு, சுந்தர கைலாசம், சோதிப்பிரம்மலோகம், அளகாபுரி, அமராவதி, வைகுந்தம் என்றெல்லாம் முன்னோர்களின் நூல்களில் படித்தோம்; ஆனால் பார்த்ததில்லை. இங்குள்ள 'ஐகோர்ட்டில்' அந்த ஈரேழு பதினான்கு உலகமும் தெரியும்' என்கிறான்.

ஐகோர்ட் கட்டடத்தின் பெருமையை, சிறப்பைத் தலைவன் கூறுவதாக்க குறிப்பிட்டிருக்கும், செஞ்சி ஏகாம்பர முதலியார், இந்த நூலை இயற்றும் காலகட்டத்தில் ஐகோர்ட் கட்டிடடம் முழுமையாகக் கட்டிப் பூர்த்தி செய்யப்படாததால்,

“கண்டிடுவேன்ரெண்டாம் பாகம்
காட்டுவேன்யின்ன மதிகவிநோதம்”

- என்ற வரிகளுடன் நூலை நிறைவு செய்துள்ளார்.

பாடல்கள்

ஐகோர்ட்டைப் பார்க்கத் தலைவியை அழைப்பது:

இதுவே சமயமடி ஏந்திழையே பெண்மயிலே
ஸ்நானங்கள் செய்து நல்ல சம்பிரமாய்யணிபூட்டி
உம்பர் மகிழும்படி உயர்ந்த சேலையுடுத்தி
மத்தாப்பு ரவிக்கைபோட்டு மணமுள்ள அத்தர் பூசி
சித்தமுடநீ வருவாய் ஒயில்தங்கமே
சென்னை ஐகோர்ட்டைப் பார்ப்போம்
கெண்டைநிகர்விழியாளே மாதே கேளாய்
காணுது பார் ஐகோர்ட்டு கையிலை போலும்
விண்டுகுறேன் தோற்றுமொரு வினோதமெல்லாம்
வஞ்சியரே விழியதின்மேல் நோக்கிப்பாரும்
மண்டலத்தில் மதிமிகுந்த சிஸாலன் துரையும்
மங்கையரே யமைத்ததொரு வேலையெல்லாம்
கண்டுமே கலியுகத்தார் மகிழநாளும்
காட்டுகிறேன் கவியதினால் கேட்டுவாரும்

ஐகோர்ட்டின் உள் அலங்காரச் சிறப்பு

பார் புகழும் செஷன் கூறுமிடமிதுவே நேரு
ஜர்ஜ்ஜிகள் குந்தும் சேரு
கிழக்குமுகம்பாரு
பாவையரே சித்திர வேலையதனை கண்டு தேரு
வாட்டமான ரவுண்டேப்பல மேஜையலங்காரம்
குரிச்சிகள் சிங்காரம்
சித்திரவேலை பாரும்
வஞ்சியரே கொடுத்த வார்னீஸ் ஜொலிக்கின்ற நேறும்
பாருபாருஜர்ஜ்ஜி குந்தியிருக்குமொரு சீறு
சுத்திலும் வேலை பாரு
அவர் முகத்தின் நேரு
பாவையரே தென்றல் பங்காயிழுக்கும் வெகு ஜோரு
செஞ்சியேகாம்பரம் சிறுவன் புவியின் மிசை மேலே
யுரைத்தேன் கவியாலே
ஐகோர்ட் டதின்மேலே
சீறாய் போயியதை பார்த்து மகிழ்வோமிந்தவேளே

இரண்டாம் பாக அறிவிப்பு

ஆயிரத்தெண்ணூத்தி யெண்பத்தியேழினில்
ஆரம்பமாவே யெடுத்தவேலை
நேயமாயின்னமும் வேலையிருப்பதால்
நிறுத்தினேன்முடிவை யெழுதாமலே
அஞ்சாமல்யென்னுடன கூடிவாடியிதோ
வஞ்சியரேவழி தோற்று தடி
செஞ்சியேகாம்பரம் சொன்னகவிபோலே
சீறாய் வேடிக்கை பார்த்தமடி.
கண்டிடுவேன்ரெண்டாம் பாகம்
காட்டுவேன்யின்ன மதிகவிநோதம்

மதிப்பீடு

நாட்டில் நடந்த, நடக்கின்ற பல்வேறு நிகழ்ச்சிகளை சிந்தாகப் பாடுவது சிந்து நூல்களில் ஒரு வகைமை. அரசியல் நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள், இயற்கைப் பாதிப்புகள், குற்ற நிகழ்வுகள், தனி மனிதர்கள் குறித்த நிகழ்வுகள் எனப் பல்வேறு வகைகளில் இவை பாடப்பட்டன. ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து, உயர்நீதி மன்றம் கட்டப்பட்ட வரலாறையும், அதன் உள் கட்டமைப்புச் சிறப்பையும் கூறுவதாக அமைந்துள்ளது. சென்னை ஐகோர்ட் கட்டிடம் எப்படி இருந்தது என்பதை, சென்னையை அறியாதவர்கள் மற்றும் ஐகோர்ட் கட்டடத்தைக் காணாதவர்கள் அறிவதற்காக இந்நூல் இயற்றப்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page