under review

சிந்து இலக்கியம்

From Tamil Wiki
கதிர்காம நாதர் காவடிச் சிந்து

சிந்து: (பொ.யு. 13-ம் நூற்றாண்டு) தமிழில் பிற்காலத்தில் தோன்றிய செய்யுள் வகைகளுள் ஒன்று. நாட்டுப்புறப் பாடல் மரபில் இருந்து மரபிலக்கியத்திற்குள் நுழைந்தது. ஆகவே பொதுரசனைக்கான செய்யுள் வடிவமாகவும், இசைப்பாடலுக்கு உரியதாகவும் கருதப்படுகிறது. காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, கொலைச் சிந்து என்று பல்வேறு இலக்கிய வகைமைகளில் சிந்து நூல்கள் அமைந்துள்ளன. சிந்து நூல்கள் எளிய நடையும், வருணனை, உவமை போன்ற சிறப்புகளையும் கொண்டவை.

சிந்து - பெயர்க் காரணம்

சிந்து நூல்கள் மூன்று சீர்களைப் பெற்ற சிந்தடிகளால் அமையப் பெற்றதால் சிந்து என்று அழைக்கப்பட்டன. சிந்து இலக்கியம் பற்றி அறிவனார் இயற்றிய பஞ்சமரபு என்னும் இசைத் தமிழ் நூலில்,

செப்பரிய சிந்து திரிபதை சீர்ச்சவலை
தப்பொன்று மில்லாச் சமபாத - மெய்ப்படியுஞ்
செந்துறை வெண்டுறை தேவபாணி வண்ணமென்ப
பைந்தொடியா யின்னிசையின் பா

- என்ற குறிப்பு காணப்படுகிறது.

சிந்துப் பா குறித்து வீரசோழியம்,

எழுசீர் அடிஇரண் டால்குறள் ஆகும் இரண்டு அடிஒத்து
அழிசீர் இலாதது சிந்தாம் அடிமூன்று தம்மில் ஒக்கில்
விழுசீர் இலாத திரிபாதி நான்கடி மேவிவெண்பாத்
தொழுசீர் பதினைந்த தாய்நடு வேதனிச் சொல்வருமே

- என்கிறது.

சிந்து இலக்கியத்தின் வகைகள்

காலமாற்றத்திற்கேற்ப சிந்துப் பாடல்களில் பல்வேறு மாற்றங்கள் உண்டாயின. சிந்துப்பா அதன் அடியளவைக் கொண்டு சமநிலைச்சிந்து, வியனிலைச் சிந்து என இருவகையாக அமைந்தது.

சமநிலைச் சிந்து

முதலடியும் அடுத்த அடியும் சீரின் எண்ணிக்கையால் ஒத்து இருப்பின் அது சமநிலைச் சிந்து.

வியனிலைச் சிந்து

அடியும் சீரும் எண்ணிக்கையால் வேறுபட்டு இருப்பின் அது வியனிலைச் சிந்து.

சிந்து இலக்கியங்களின் அமைப்பு

சிந்து இலக்கியங்கள் பொதுவான ஓர் அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. அளவொத்த இரண்டடி ஒரெதுகை பெற்றதாகத் தொடக்க காலத்தில் இருந்த சிந்துப்பாடல்கள், பிற்காலத்தில் பல இயல்புகளில் மாற்றம் பெற்றன. பிற்காலச் சிந்து இலக்கிய நூல்கள் சில பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற கீர்த்தனை அமைப்பைக் கொண்டன.

சிந்து இலக்கியத்தின் தோற்றம்

பொ.யு. 13-ம் நூற்றாண்டில், ’திருவாழி பரப்பினான் கூத்தன்’ என்பார் இயற்றிய சிந்து நூலே தமிழின் முதல் சிந்து நூல் என மு. அருணாசலம் குறிப்பிடுகிறார். ஆனால், அந்த நூல் கிடைக்கவில்லை. சித்தர் ஆரூடம் என்ற நூலின் பாடல்கள் நொண்டிச் சிந்தில் அமைந்துள்ளன. இதன் காலம் 13-ம் நூற்றாண்டு என மு. அருணாசலம் தெரிவிக்கிறார். சித்தர் ஆரூடம் நூல் பழங்காலத்தது அல்ல; 18-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என முனைவர் இரா. திருமுருகன் தனது ‘சிந்து இலக்கியம்’ என்ற ஆய்வு நுலில் தெரிவித்துள்ளார்.

18-ம் நூற்றாண்டில் தோன்றிய அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து நூல் முன்னோடிச் சிந்து இலக்கிய நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வெள்ளச் சிந்து
கலியுகக் கொலைச் சிந்து (நன்றி: ரோஜா முத்தையா நூலகம், சென்னை)

சிந்து இலக்கிய வகைகள்

சிந்து இலக்கியங்கள் காவடிச் சிந்து, வழிநடைச் சிந்து, நொண்டிச் சிந்து, வரலாற்றுச்சிந்து, கொலைச் சிந்து, விபத்துச் சிந்து, நீதிச் சிந்து எனப் பல்வேறு பிரிவுகளில் அமைந்துள்ளன.

வரலாற்றுச் சிந்து

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நாட்டில் வழங்கி வந்த புராண வரலாறுகளை காவடிச் சிந்து அமைப்பில் சிலர் பாடினர். அவை வரலாற்றுச் சிந்துகள் என அழைக்கப்பட்டன. இவற்றில் கோவலன் சரித்திரத் திருப்புகழ் சிந்து குறிப்பிடத்தக்கது.

கொலைச் சிந்து

பக்தியை மட்டும் பாடு பொருளாகக் கொள்ளாமல் சமூக நிகழ்வுகளையும் பிற்காலத்தில் பலர் சிந்து நூல்களாக இயற்றினர். செய்தித்தாள்களில் இடம்பெற்ற கொலை நிகழ்ச்சிகளையும், தாம் வாழும் சுற்றுப்புறத்தில் நிகழ்ந்த கொலை நிகழ்ச்சிகளையும் சிந்துச் சந்த அமைப்பில் பாடினர். அவை கொலைச் சிந்து என அழைக்கப்பட்டன. கொலைச் சிந்துகளில் 'அம்மாக்கண்ணு கொலைச் சிந்து', 'கொடுக்கூர் ஆறுமுகம் கொலைச்சிந்து', 'கோபாலு நாயகர் கொலைச் சிந்து', 'கலியுக கொலைச்சிந்து' போன்றவை குறிப்பிடத்தகுந்தன.

விபத்துச் சிந்து

கொலைச் சிந்துகளைப் போல செய்தித்தாள் நிகழ்வுகளைக் கொண்டும், அறிந்த செய்திகளைக் கொண்டும் எழுதப்பெற்ற மற்றொரு வகைச் சிந்து, விபத்துச் சிந்து. ரயில் விபத்துக்கள், தீ விபத்துக்கள் போன்றவை விபத்துச் சிந்துகளாகப் பாடப்பெற்றன. 'செங்கோட்டை ரயில்வே பரிதாபச் சிந்து', 'டி.என்.தங்கவேலு பாடிய லாரி விபத்துச் சிந்து',' ரயில்வே பாலம் உடைந்த அபாய வெள்ளச் சிந்து' ஆகியன இவ்வகைச் சிந்து நூல்களுக்குச் சான்றாகும்.

நீதிச் சிந்து

சமகாலச் சமுதாயம் செம்மையுற வாழ்வதற்காகப் பல நீதிநெறிகள் அடங்கிய சிந்து இலக்கியங்கள் இயற்றப்பட்டன. அவை நீதிச் சிந்து எனப்பட்டன. 'திருக்குறள் நீதிச் சிந்து', 'கட்குடிச் சிந்து', 'ஆத்திச்சூடிச் சிந்து', 'ஆண்பிள்ளை நீதிச் சிந்து', 'பெண்புத்திச் சிந்து' போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கன.

சிந்து நூல்கள்

சிந்து நூல்கள் நூற்றுக்கணக்கில் அமைந்துள்ளன. பக்தியை மட்டும் பாடு பொருளாகக் கொள்ளாமல் சமூக நிகழ்வுகளையும் பேசுபொருளாகக் கொண்டு பல சிந்து நூல்கள் இயற்றப்பட்டன. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ இலக்கியங்களிலும் சிந்து நூல்கள் இயற்றப்பட்டன.

சிந்து நூல்களின் பட்டியல்
  • அண்ணாமலை ரெட்டியார் பாடிய கழுகுமலை சுப்பிரமணியர் காவடிச் சிந்து
  • இராமாயணக் காவடிச் சிந்து
  • பாரதக் காவடிச் சிந்து
  • பழனியாண்டவர் சிந்து
  • ஸ்ரீ மாரியம்மன் திருவருட்பதிக கும்மி சிந்து
  • கலியுக அவதார புருஷராகிய மகாத்மா காந்தியின் சரித்திரத் திருப்புகழ்ச் சிந்து
  • சிக்கந்தர்மலை துல்க்கருணை அவுலியா அவர்கள்பேரில் சந்தலலங்காரச் சிந்து
  • ஒலிநாயகர் அவதாரச் சிந்து
  • பச்சிலை புதுமைச் சிந்து
  • பாம்பன் பால சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக வழி நடைச் சிந்து
  • சதுரகிரி வழிநடை அலங்காரச் சிந்து
  • கலியுகச் சிந்து
  • கலிகால விபரீத கல்யாணச் சிந்து
  • கண்ணாட்டிச் சிந்து
  • ஐகோர்ட்டின் அலங்காரச் சிந்து
  • 1906 அக்டோபர் 20 சனிக்கிழமை மூடப்பட்ட அர்பத்நெட்டவுசின் அனியாயச் சிந்து
  • 1918 வருடம் பிப்ரவரி மாதம் 8ம் தேதி தர்மபுரி கோர்ட்டில் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் சாக்ஷிச் சிந்து
  • 1930 மே 5 திங்கட்கிழமை இரவு பார்த்தோர் மனம் நடுங்க நடந்த பக்கோ படுகளச் சிந்து
  • 1930 வருஷம் அர்ப்பசி மாதம் மழையினால் வந்த ரயில்வே பாலம் உடைந்த அபாய வெள்ளச் சிந்து
  • அருணாஜலத்தையும் அம்ஸவல்லி இருவரையும் வெட்டி ஆட்டுகறியென்று மாட்டிவைத்த கோபாலு நாயகர் கொலைச் சிந்து

உசாத்துணை

  • ரோஜா முத்தையா நூலகம்
  • தமிழ் இணைய மின்னூலகம்
  • தமிழ் இலக்கிய வரலாறு, மு. அருணாசலம்
  • சிந்து இலக்கியம், முனைவர் இரா. திருமுருகன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்


✅Finalised Page