under review

கொலைச் சிந்து

From Tamil Wiki
அம்மாக்கண்ணு கொலைச் சிந்து (நன்றி: ரோஜா முத்தையா நூலகம், சென்னை)

சிந்து இலக்கியங்களில், பக்தியை மட்டும் பாடு பொருளாகக் கொள்ளாமல், சமூக நிகழ்வுகளையும் பேசுபொருளாகக் கொண்டு சிலர் நூல்களை இயற்றினர். நாட்டுப்புறங்களில் கொலை செய்யப்பட்டு இறந்து போனவர்களைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த அவை இயற்றப்பட்டன. ‘கொலைச் சிந்து’ என அவை அழைக்கப்பட்டன. கொலைச்சிந்து இலக்கியம் பற்றிய மிக விரிவான ஆய்வை நா. வானமாமலை, அ.கா. பெருமாள் ஆகியோர் நிகழ்த்தினர்.

தோற்றமும் நோக்கமும்

ஆங்கிலேயர் ஆதிக்கப்பிடியில் வாழ்ந்த அன்றைய மக்கள் கல்வியறிவில் மிகவும் பின்தங்கியிருந்தனர். உலகியலறிவும், அரசியல் அறிவும் போதுமானதாக இல்லாதவர்களாக இருந்தனர். வானொலி, செய்தித்தாள்கள் கூட முழுமையாகப் பலரைச் சென்றடையாத நிலையில், தகவல் தொடர்புகள் கூத்துக் கலைஞர்கள், சிந்துக் கவிஞர்கள் வாயிலாக நிகழ்ந்தன. நாட்டுப்பாடல்களையும் தெம்மாங்குப் பாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு அவர்கள் சிந்து நூல்களை இயற்றினர்

நாட்டின் ஒரு பகுதியில் நிகழ்ந்த கொலை நிகழ்வை அனைத்துப் பகுதி மக்களும் தெரிந்துகொள்ளும் பொருட்டு கொலைச் சிந்து நூல்கள் இயற்றப்பட்டன. கொலை செய்யப்பட்டு இறந்து போன நல்லவர்கள், கொள்ளைக்காரர்கள், கொடியவர்கள் போன்றோரைப் பற்றி, அச்சம்பவங்கள் பற்றி அறியாத பிற மக்களும் அறிந்துகொள்ளும் நோக்கத்தில் கொலைச் சிந்து நூல்கள் இயற்றப்பட்டன.

பாடுபொருள்

பல்வேறு சூழல்கள் காரணமாக நிகழும், கொலையும் தற்கொலையுமே, கொலைச் சிந்து நூல்களின் பாடுபொருள்களாக அமைந்தன.

உள்ளடக்கம்

மக்கள் வாழும் சுற்றுப்புறத்தில் நிகழ்ந்த கொலை நிகழ்ச்சிகளும், செவி வழிச் செய்திகளும், செய்தித்தாள்களில் இடம்பெற்ற சில கொலை நிகழ்ச்சிகளும் கொலைச் சிந்து இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டன. கொலை செய்யப்பட்டவரது பெயர், ஊர், கொலை செய்யப்பட்டதற்கான காரணம், அவரது குணநலன்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட விதம் போன்ற செய்திகள் கொலைச் சிந்து நூல்களின் உள்ளடக்கமாக அமைந்தன. வெளியூர்களுக்கு ஆண்கள் சம்பாதிக்கச் செல்தையும், அதனால் தனித்து வாழும் அவர்களது மனைவிகளில் சிலரது பாலியல் சிக்கல்களையும் அதன் காரணமாக எழும் பிரச்சினைகளையும் சில கொலைச் சிந்து நூல்கள் பதிவுசெய்தன. பெண்களைப் பலவந்தப்படுத்துவதும், அதனால் நிகழ்ந்த கொலைகளும், தற்கொலைகளும் சிந்து நூல்களில் இடம் பெற்றன. நல்ல வழியிலோ அல்லது தீய வழியிலோ வாழ்ந்து கொலை செய்யப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கையை, அவன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை, கொலைச் சிந்து நூல்கள் மக்களுக்கு அறியத் தந்தன.

கொலைச் சிந்து பற்றி எம். வேதசகாயகுமார், “கொலைச் சிந்துக்களில் கதை மாந்தர்களின் பிறப்பு, வளர்ப்பு பாடப்படுவதில்லை. கடவுள் வாழ்த்திற்குப் பின் கொலை நிகழ்விற்கான சூழலே நேரடியாகப் பாடப்பெறும். கொலை நடந்த ஊர், கொலையோடு தொடர்புடைய குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், கொலை நிகழ்வு, அதன் காரணம், இறந்தவர்களின் எண்ணிக்கை, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை, சிந்துவின் ஆசிரியர் பெயர், நூல் விலை முதலிய செய்திகள் கொலைச் சிந்துக்களில் இடம் பெற்றிருக்கும். சில சிந்துக்களில் தெய்வங்களின் இடையீடுகளும் குறிப்பிடப்படிருக்கும். ஆனால், இறந்தவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுவதாகப் பாடப்படுவதில்லை” என்றும், “தகாப்புணர்ச்சி, கள்ளக்காதல், கற்பழிப்பு, பரத்தைமை முதலியன கொலைக்கான காராணங்களாக அமையும். கொலைக்கான காரணங்களைக் குறித்து அறிய மக்களிடம் எழும் இயல்பான ஆர்வமே சிந்துப் பாடல்களின் தோற்றத்திற்குக் காரணமாக அமைகிறது [1] ” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்களாக கொலைச் சிந்து நூல்கள் பல அமைந்துள்ளன. பாடல்களோடு உரைநடையும் கலந்து வருவதாகவே பல கொலைச் சிந்து நூல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொச்சைச் சொற்கள் கொண்டதாகவும், பாமரர்களின் பேச்சு மொழியில் அமைந்ததாகவும் பல கொலைச் சிந்து நூல்கள் உள்ளன. தெலுங்கு போன்ற மொழிகளும் சில கொலைச் சிந்து நூல்களில் இடம் பெற்றன. மக்களிடையே வழக்கத்தில் இருந்த ஆங்கிலம், வட மொழி போன்ற பிற மொழிச் சொற்களும் கொலைச் சிந்துகளில் இடம் பெற்றன. சில கொலைச் சிந்து நூல்களில், நூலின் விலை, இடையிடையே சில பாடல்களில் குறிப்பிடப்பட்டன. ‘பகத்சிங் கொலைச் சிந்து' போன்ற சிந்து நூல்கள் அரசால் தடை செய்யப்பட்டன.

கொலைச் சிந்துப் பாட்டு

கொலைச் சிந்து இலக்கியங்கள் நூல்களாக இயற்றப்பட்டதுடன், பாடல்களாகவும் மக்கள் முன் பாடப்பட்டன. பொது மக்கள் கூடும் சந்தை, திருவிழா போன்ற தருணங்களில் கொலைச் சிந்துகள் பாடப்பட்டன. உயரமான மேடைகளின் மீது நின்றுகொண்டும், மாட்டு வண்டிகளின் பின் பகுதியில் ஏறி நின்றுகொண்டும் கொலைச் சிந்துகள் பாடப்பட்டன.

பாடும் முறை

கொலைச் சிந்து பாடுபவர்கள் குறைந்த பட்சம் இரண்டு பேராக இருப்பர். ஒருவர் பாடுபவர். மற்றொருவர் கையில் ‘டேப்’ என்னும் கருவியைத் தட்டிக் கொண்டு பின்பாட்டுப் பாடுவார். ‘டேப்’பின் ஒரு பகுதியில் சலங்கை கட்டப்பட்டிருக்கும். நாட்டுப்புற மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடை யில், வட்டார வழக்கில், மக்களின் இயல்பான பேச்சு மொழியில் இவற்றைப் பாடினர்.

திரைப்படமான கொலைச் சிந்து நூல்கள்

மம்மட்டியான் கொலைச் சிந்து, கரிமேடு கருவாயன் கொலைச் சிந்து போன்றவை பிற்காலத்தில் மலையூர் மம்மட்டியான், கரிமேடு கருவாயன்போன்ற தலைப்புகளில் திரைப்படங்களாக வெளியாகின.

  • கொலைச் சிந்து நூல்கள்
  • ஆளவந்தார் கொலைச் சிந்து
  • கொடுக்கூர் ஆறுமுகம் கொலைச் சிந்து
  • உடன் கட்டையேறிய உத்தமிச் சிந்து
  • அம்மாக்கண்ணு கொலைச் சிந்து
  • கோபாலு நாயகர் கொலைச் சிந்து
  • கலியுக கொலைச்சிந்து
  • சிந்தையன் கொலைச் சிந்து
  • செம்புலிங்கம் கொலைச்சிந்து
  • ரெங்கோன் படுகொலைச் சிந்து
  • பர்மா தெலுங்கரின் படுகொலைச் சிந்து

வரலாற்று இடம்

செய்திப் பரிமாற்றமே கொலைச் சிந்தின் அடிப்படையாக இருந்தது. பின்பு அவ்விடத்தைச் செய்தித் தாள்கள் நிரப்பிடவே கொலைச் சிந்துகள் வழக்கொழிந்தன. தமிழின் குறிப்பிடத்தகுந்த ஓர் இயக்கமாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டது கொலைச்சந்து.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம், எம். வேதசகாயகுமார், அடையாளம் பதிப்பகம், முதல் பதிப்பு: 2021


✅Finalised Page