under review

ஏ. கே. செட்டியாரின் காந்தி ஆவணப் படம்

From Tamil Wiki
காந்தி - ஆவணப்படம்

மகாத்மா காந்தி அவரது வாழ்க்கையின் சம்பவங்கள் (1940) குறித்து ஏ. கே. செட்டியார் காந்தியைப் பற்றி எடுத்த ஆவணப்படம். 1937-ல் தொடங்கிய அவரது முயற்சி 1940-ல் நிறைவுற்றது. காந்தி பற்றிய முதன்மை ஆவணமாக இந்தப் படம் கருதப்படுகிறது.

காந்தி - ஆவணப்பட முயற்சிகள்

ஏ. கே. செட்டியார் இந்திய திரைப்படக்கலை தொடக்ககாலத்தில் இருக்கையிலேயே காந்தி பற்றி ஓர் ஆவணப்படத்தை உருவாக்க எண்ணினார். உருவாக்கத்திற்காக உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை பலரைத் தொடர்பு கொண்டார் ஏ. கே. செட்டியார். காந்தியுடன் தொடர்பில் இருந்த பலருக்குக் கடிதம் எழுதினார். 1937-ல், தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு காந்தியுடன் முன்பு தொடர்பில் இருந்தவர்களைச் சந்தித்தார்.தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணப்பட்டார். பல நாட்டு அரசுகளிடமிருந்தும் தனியார் அமைப்பினரிடமிருந்தும், காந்தி தொடர்பான படப்பதிவுகளைச் சேகரித்தார்.

Gandhi documentary shares Iamge ©Valliappan Ramanathan

டாக்குமெண்டரி ஃபிலிம்ஸ் லிமிடெட்

காந்தி ஆவணப்பட உருவாக்கத்திற்காக, 1938-ல், 'டாக்குமெண்டரி ஃபிலிம்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தார். தனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலம் ஆவணப்படத்திற்கான நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஒரு லட்சம் ரூபாய் மூலதனம் என்பதை இலக்காகக் கொண்டு டாக்குமெண்டரி ஃபிலிம்ஸ் சார்பில் ஒரு பங்கு ரூ 500/- என்ற மதிப்பில் பங்குப் பத்திரங்களை வெளியிட்டார்.

இதனை வள்ளல் டாக்டர் அழகப்பச் செட்டியார், எஸ். வீ.ஆர். வீரப்பச் செட்டியார், ஏ. சம்பந்தம், ஸி. நரசிம்மராவ் உள்ளிட்ட பலர் ஆதரித்தனர். அழகப்பச் செட்டியார் தன் சார்பில் இரண்டு பங்குகளை வாங்கினார். ஏ.கே. செட்டியார் எதிர்பார்த்த அளவுக்கு நிதி சேரவில்லை என்றாலும் அவரது முயற்சிகளுக்கு பல விதங்களிலும் ஆதரவு கிட்டியது.

காந்தி ஆவணப்படம் உருவாக உதவியவர்கள்

ஆவணப்பட உருவாக்கம்

தனது சேகரிப்புகளை அடிப்படையாக வைத்து, 12000 அடி நீளத்தில், மகாத்மா காந்தி பற்றிய ஆவணப் படத்தை தமிழில் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஏ.கே. செட்டியார். இதன் தொழில் நுட்ப இயக்குநராக டாக்டர் பி. வி. பதி அவர்கள் பணியாற்றினார். இப்படத்தை நிறைவு செய்வதற்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆனது. 1940-ல் இந்த ஆவணப்படத்தை எடுத்து முடித்தார் ஏ.கே. செட்டியார். தமிழில் காந்தி பற்றி வெளியான முதல் வரலாற்று ஆவணப்படம் இதுதான்.

காந்தி ஆவணப்படம் (தமிழ்)

வெளியீடு

இந்த ஆவணப் படம் முதன் முதலில், தமிழில், ஆகஸ்ட் 23, 1940 அன்று சென்னையில் ராக்ஸி திரையரங்கில் வெளியானது. படம் பற்றிய விளம்பரக் குறிப்பில், " உலகத்தின் பல பாகங்களிலும் 1912 முதல் சுமார் 100 காமிராக்காரர்களால் படம் பிடித்துத் தொகுக்கப்பெற்ற இந்தியாவின் முதலாவது டாகுமெண்டரி பிலிம்" என்ற குறிப்பு இடம் பெற்றிருந்தது.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் இப்படம் வெளியானது. ஆனால், சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி, காரைக்குடி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே இப்படம் வெளியிடப்பட்டது. பிரிட்டிஷாருக்கு அஞ்சிய திரையரங்கு உரிமையாளர்கள் காந்தி பற்றிய படத்தைத் திரையிட மறுத்தனர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1947 -ம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று, புது தில்லியில் இந்தப் படம் இந்தி மொழியில் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் 23-ல், தமிழிலும் தெலுங்கிலும் மீண்டும் திரையிடப்பட்டது

வெளிநாடுகளில் வெளியீட்டு முயற்சிகள்

ஏ.கே.செட்டியார் இப்படத்தை பல்வேறு வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஃபிஜித் தீவு, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெளியிட தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். 1953-ல், ஹாலிவுட்டுக்குச் சென்று ஆங்கிலத்தில் தயாரித்து வெளியிட்டார். அதன் பின்னர் படத்தின் பிரதி காணாமல் போய்விட்டதாகக் கருதப்பட்டது.

மறு வெளியீடு

காணாமல் போய்விட்டதாகக் கருதப்பட்ட காந்தி ஆவணப்படத்தின் பிரதி, முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதியின் அரிய முயற்சியால், சான்பிரான்ஸிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டறியப்பட்டது. ஜனவரி 19, 2006-ல் சென்னையில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதன் மற்றொரு பிரதி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆவணப்பட உருவாக்கதில் பங்களித்தவர்கள்

ஆவணப்படத்தின் உள்ளடக்கம்

இந்த ஆவணப்படத்தில் காந்தியின் பிரிட்டிஷாருக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள், உப்பு சத்தியாக்கிரகக் காட்சிகள், காந்தியின் வெளிநாட்டு, உள்நாட்டுப் பயணங்கள், தொண்டர்களுடான அவரது சொற்பொழிவுகள் எனப் பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது முதன்முதலில் தமிழில் வெளியான போது ஆவணப் படத்திற்கான சம்பவங்களை ராவ்பகதூர் எஸ்.வி. சாரி அவர்கள் தொகுத்திருந்தார். வசனங்களை த.நா. குமாரசாமி எழுதியிருந்தார். வை.மு. கோதைநாயகி, செருகளத்தூர் சாமா, சா. கணேசன், டி.கே. ஜயராமய்யர் ஆகியோர் படத்தைப் பின்னணியில் விளக்கிக் கூறினர். பின்னணிப் பாடல்களை டி.கே. பட்டம்மாள், ஸி. ராஜரத்னம், சூர்யகுமாரி, பாய் சுந்தராபாய் ஆகியோர் பாடியிருந்தனர். இசை: பி. சுப்பிரமணியம்.

நூல்

ஆ. இரா.வேங்கடாசலபதியின் முயற்சியினால் காந்தி ஆவணப்பட உருவாக்கத்தை பற்றி ஏ.கே. செட்டியார் எழுதியுள்ள கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'அண்ணல் அடிச்சுவட்டில்' என்னும் தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஆவணம்

காந்தியின் ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் யூ ட்யூபில் காணக் கிடைக்கிறது.

காந்தி, சி.எஃப் ஆண்ட்ரூஸ், பியர்சன் (டாகுமெண்டரி ஃபிலிம்ஸ்)

வரலாற்று இடம்

தமிழில் வெளியான முதல் ஆவணப் படம் ’மகாத்மா காந்தி’ தான். இந்தியாவின் முதலாவது டாகுமெண்டரி பிலிம்" என்ற குறிப்பு திரைப்படத்தின் விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளது. காந்தி உயிருடனிருக்கையிலேயே உருவாக்கப்பட்டது இந்த ஆவணப்படம் என்பதனால் ஒரு சமகால வரலாற்றுப் பதிவும்கூட.

உசாத்துணை


✅Finalised Page