under review

எஸ். ஸ்ரீகுமார்

From Tamil Wiki
முனைவர் எஸ். ஸ்ரீகுமார் (படம் நன்றி: தினமணி)

எஸ். ஸ்ரீகுமார் (முனைவர் ஸ்ரீகுமார்; முனைவர் எஸ். ஸ்ரீகுமார்; டாக்டர் எஸ். ஸ்ரீகுமார்; பேராசிரியர் எஸ். ஸ்ரீகுமார்) (பிறப்பு: மே 08, 1953) கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கிய விமர்சகர். தமிழ்ப் பேராசிரியர். தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

எஸ். ஸ்ரீகுமார், மே 08, 1953 அன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியலில், சிவராமகிருஷ்ண பாகவதர் - சரோஜா இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியை நெய்யூர் எல்.எம். ஏரியா பள்ளியில் படித்தார். இரணியல் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். 1968-ல் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் தாவரவியலில் இளநிலைப்பட்டம் பெற்றார். தமிழில் முதுநிலைப்பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.பில்-க்கு இணையான ஏ.எம்.ஏ. பட்டம் பெற்றார். 'முடியரசன் கவிதைகள்: ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

எஸ். ஸ்ரீகுமார், நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியின் தமிழ்த் துறைத்தலைவராகவும், ஆய்வு மையத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். குடும்ப விவரங்களை அறிய இயலவில்லை.

முனைவர் ஸ்ரீகுமார் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

எஸ். ஸ்ரீகுமார், பள்ளியில் படிக்கும்போது இலக்கிய ஆர்வம் பெற்றார். கவிதைகள் எழுதினார். நண்பர்களுடன் இணைந்து 'இலக்கிய கலாசாரக் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கி, இலக்கியம் சார்ந்த பணிகளை முன்னெடுத்தார். தமிழ் இதழ்கள் பலவற்றில் கட்டுரைகள் எழுதினார். 'நாவலும் சமுதாயமும்' என்பது ஸ்ரீகுமாரின் முதல் நூல். இது 1992-ல் வெளியானது. இதனைத் தொடர்ந்து 'தமிழில் புதிய சிந்தனைகள்', 'மொழியும் சமூகமும்' போன்ற சில நூல்களை எழுதினார். பேராசிரியர், ஆய்வாளர் அ.கா. பெருமாள், காவ்யா சு. சண்முகசுந்தரம் உள்ளிட்ட பிற ஆசிரியர்களுடன் இணைந்து பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

ஸ்ரீகுமாரின் நூல்களில் சில நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, பாளையங்கோட்டை சவேரியார் கல்வியியல் கல்லூரி, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம், பெங்களூரூ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பாடத்திட்டங்களில் இடம்பெற்றன.

ஸ்ரீகுமார் சிறந்த பேச்சாளர். 300-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளிலும், 100-க்கும் மேற்பட்ட பயிலரங்குகளிலும் பங்கேற்றார். ஸ்ரீகுமாரின் வழிகாட்டலில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்.பில். பட்டம் பெற்றனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர். ஸ்ரீகுமார் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை, கலை, இலக்கிய விமர்சன அரங்குகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.

பொறுப்புகள்

  • கல்பாக்கம் வாசகர் வட்ட தலைவர்

விருதுகள்/பரிசுகள்

  • ஸ்ரீகுமார் கல்லூரியில் பயிலும்போது 'வங்க தேசம் அலறுகிறது' எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றார்.
  • தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றார். (2020)

ஆவணம்

முனைவர் எஸ். ஸ்ரீகுமாரின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் ப.ம. மயிலா எழுதினார். இந்நூலை 2015-ல், கலைஞன் பதிப்பகம், தமிழியல் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஆய்வியல் துறை மலாயாவுடன் இணைந்து வெளியிட்டது.

மதிப்பீடு

பேராசிரியர் இரா. மோகனின் மாணவரான முனைவர் ஸ்ரீகுமார், மோகனைப் போலவே ஆய்வு மாணவர்கள் பலரை ஊக்குவித்து ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்கள் பெற உதவினார். தமிழிலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிக் கொணர்வதில் ஆர்வம் கொண்டு செயல்பட்டார். பூவண்ணன், மு. வரதராசன், தமிழண்ணல், சிற்பி பாலசுப்ரமணியம் வரிசையில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதி வெளியிட்ட பேராசிரியர்கள் வரிசையில் ஒருவராக முனைவர் ஸ்ரீகுமார் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • நாவலும் சமுதாயமும்
  • தமிழில் புதிய சிந்தனைகள்
  • மொழியும் சமூகமும்
  • செம்மொழிச் சிந்தனை
  • முடியரசன் படைப்புகள்
  • தமிழில் திணைக் கோட்பாடு
  • இதழியல் நுணுக்கங்கள்
  • மக்கள் தகவல் தொடர்பியல்
  • வைணவமும் வைணவத் திருத்தலங்களும்
  • தமிழ் இலக்கிய வரலாறு
  • நாட்டுப்புற மகாபாரதக் கதைகள் (அ.கா. பெருமாளுடன் இணைந்து எழுதியது)
  • பொன்னிறத்தாள் கதை (அ.கா. பெருமாளுடன் இணைந்து எழுதியது)
  • குமரி நாட்டுப்புறத் தெய்வங்கள் (சு. சண்முகசுந்தரத்துடன் இணைந்து எழுதியது)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2024, 19:37:38 IST