under review

எம்.ஜி. சுரேஷ்

From Tamil Wiki
எழுத்தாளர் எம்.ஜி. சுரேஷ்
எம்.ஜி. சுரேஷ் (படம் நன்றி: விகடன்)

எம்.ஜி. சுரேஷ் (கோ. சுரேஷ்பாபு; ஜனவரி 13, 1953-அக்டோபர் 2, 2017) தமிழ் எழுத்தாளர்; கவிஞர், பத்திரிகை ஆசிரியர். தமிழில் பின் நவீனத்துவ நாவல்களைப் படைத்த முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர். கோட்பாடுகளையும், இஸங்களையும் பற்றித் தமிழில் பல நூல்களை எழுதினார். தமிழக அரசின் சுகாதாரத் துறையில் பணியாற்றினார். திரைப்படத்துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.

பிறப்பு கல்வி

கோ. சுரேஷ்பாபு என்னும் எம்.ஜி. சுரேஷ், ஜனவரி 13, 1953 அன்று மதுரையில், ரா. கோபாலகிருஷ்ணன் - சியாமளா இணையருக்குப் பிறந்தார். மதுரையில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார்.

தனி வாழ்க்கை

எம்.ஜி. சுரேஷ், தமிழக அரசின் சுகாதாரத் துறையில் எழுத்தராகப் பணியாற்றினார். 21 ஆண்டுகள் பணியாற்றி, கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று, விருப்ப ஓய்வு பெற்றார். மனைவி: நிர்மலா. மகன்; பிரவீண் மகள்; ஸ்வேதா.

எம்.ஜி. சுரேஷ் நூல்கள்
எம்.ஜி. சுரேஷ் உரை நிகழ்வு
எம்.ஜி. சுரேஷ் உரை நிகழ்வு

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

எம்.ஜி. சுரேஷ் ஆனந்த விகடன், கல்கி, குமுதம் போன்ற இதழ்களை வாசித்துத் தன் இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். முதல் கவிதை, 1971-ல், தீபம் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து கணையாழி, இன்று போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதினார். முதல் சிறுகதை, ‘இரண்டாவது உலகைத் தேடி’, 1975-ல், ‘கார்க்கி’ கலை, இலக்கிய இதழில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு 'இரண்டாவது உலகைத் தேடி' 1981-ல், வெளிவந்தது.

சோதனை முயற்சிகள்

எம்.ஜி. சுரேஷ் க்யூபிஸ நாவல், தற்புனைவு (auto-fiction) , தோற்ற மெய்மை ( virtual reality) நாவல் போன்ற வகைமைகளில் பல நாவல்களை எழுதினார். புதிய பல பரிசோதனை முயற்சிகளைச் செய்தார். எம்.ஜி. சுரேஷ் எழுதிய ’அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலர்’ நாவலை, ‘ கடந்த நூறு வருடங்களில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த 10 பரிசோதனை நாவல்களில் ஒன்று’ என்கிறது தமிழ் இனி 2000 வெளியிட்ட உலகத் தமிழ் இலக்கிய வரலாற்று நூல். ’37’ நாவல், தமிழ் இலக்கியச் சூழலில் முதன்முதலில் பல குரல்களில் (Polyphony) வெளியான ஒர் அறிவியல் புனைகதை நூலாகக் கருதப்படுகிறது.

“சுரேஷின் நடையும், பாஷையும் அவருக்கே சொந்தமானவையாக இருக்கின்றன. அது கூட பாரதியாரைப் போலத் தெளிவாகவும், வேகத்துடனும், வலுவுடனும் காணப்படுகிறது” என்று, 'கான்கிரீட் வனம்' நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டார், க.நா. சுப்ரமண்யம். ”‘கான்க்ரீட் வனம்’ படிக்க நேர்ந்த போதே தமிழுக்கு ஒரு அசாதாரணமான, சிறப்பான படைப்பாளி கிடைத்திருப்பதாகத் தோன்றியது. சுரேஷுக்கு எதிலும் ஒரு சுயமான, தனித்துவமான பார்வை இருக்கிறது”- என்றார் அசோகமித்திரன். “புதுமுறை எழுத்துகளில் நம்பிக்கை வைத்திருக்கும் எம்.ஜி.சுரேஷ் பல நாவல்கள் எழுதியிருக்கிறார். நான் படிக்க நேர்ந்த அவரது மூன்று நாவல்களுமே சாகித்ய அகாடமி பரிசு பெறத் தகுதியானவைதான்” என்றார் எழுத்தாளர் சுந்தர ராமசாமி.

எம்.ஜி. சுரேஷின் நூல்கள், சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரிகளில் எம்.ஏ., பட்டப் படிப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டன. இவரது படைப்புகளை ஆய்வு செய்து மாணவர்கள் சிலர் எம்.பில், பிஹெச்.டி. பட்டம் பெற்றனர். இவருடைய ”பின்வீனத்துவம் என்றால் என்ன?” என்ற நூல் பல கல்லூரிகளில் பாட புத்தகமாக வைக்கப்பட்டது.

கோட்பாட்டு நூல்கள்

எம்.ஜி. சுரேஷ், உலக இலக்கியங்களின் மீதும், இலக்கியக் கோட்பாடுகளின் மீதும் கவனம் செலுத்தினார். அவை குறித்துப் பல கட்டுரைகளை இலக்கிய இதழ்களில் எழுதினார். இலக்கியக் கோட்பாடுகளில் போஸ்ட் மார்டனிஸம் எனப்படும் பின் நவீனத்துவ கோட்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ‘பின் நவீனத்துவம் என்றால் என்ன?’ என்ற படைப்பின் மூலம் அதனைப் பரவலாக வாசக உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இந்நூல் பின்நவீனத்துவ சூழலையும், மொழி, அதிகாரம், இலக்கியம், உளவியல், பெண்ணியம், ஓவியம், திரைப்படங்கள் உடனான பின்நவீனத்துவ உரையாடல்களையும் அதன் சிந்தனையுலகையும் எளிமையாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து கோட்பாடுகள் சார்ந்தும், இஸங்கள் சார்ந்தும் பல நூல்களை எழுதினார். ‘இஸங்கள்' பற்றிய சரியான புரிதல் ஏற்படுவதற்காக ’இஸங்கள் ஆயிரம்’ என்ற நூலை எழுதினார். பின்நவீனத்துவ அறிஞர்கள் பற்றிச் சில நூல்களை எழுதினார்.

எழுத்தாளர் எம்.ஜி. சுரேஷ்

இதழியல்

எம்.ஜி. சுரேஷ், பின்நவீனத்துவ எழுத்தை வெளியிடுவதற்கும், அதன் கோட்பாடுகளை அறிமுகம் செய்வதற்கும், விவாதிப்பதற்கும் ‘பன்முகம்’ என்ற காலாண்டு இலக்கிய இதழைத் தொடங்கினார். யுவன் சந்திரசேகர், ரமேஷ்-பிரேம், மாலதி மைத்ரி, பாவண்ணன், லதா ராமகிருஷ்ணன் போன்ற பலர் அவ்விதழுக்குப் பங்களித்தனர். அவ்விதழில் டாடாயிசம், சர்ரியலிசம், கியூபிசம் போன்ற பல்வகை இலக்கியக் கோட்பாடுகள் பற்றி பல கட்டுரைகளை எழுதினார் எம்.ஜி. சுரேஷ்

திரை வாழ்க்கை

எம்.ஜி. சுரேஷ், ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘காவலுக்குக் கெட்டிக்காரன்’, ‘உன்னை ஒன்று கேட்பேன்’, ‘கண்ணே கனியமுதே’, ‘என் தமிழ் என் மக்கள்’, ‘அழகி’, ‘இயற்கை’ ஆகிய படங்களில் உதவி இயக்குநர் மற்றும் துணை இயக்குநராகப் பணியாற்றினார். சில படங்களில் சில காட்சிகளில் தோன்றினார். தொலைக்காட்சித் தொடர்கள், நாடகங்கள் சிலவற்றுக்கு வசனம் எழுதினார். தொலைக்காட்சித் தொடர்கள் சிலவற்றுக்கு உதவி இயக்குநராகப் பணி புரிந்தார்.

பொறுப்புகள்

எம்.ஜி. சுரேஷ், மத்திய அரசின் திரைப்படத் தணிக்கைக் குழுவின் ஆலோசனை உறுப்பினராகப் பணியாற்றினார்.

விருதுகள்

  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது - அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் நாவலுக்கு.
  • ஏலாதி இலக்கிய விருது - பின்வீனத்துவம் என்றால் என்ன? நூலுக்கு.
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பாரதியார் நினைவுப் பரிசு
  • இலக்கியவீதி அன்னம் விருது

மறைவு

எம்.ஜி. சுரேஷ், அக்டோபர் 2, 2017 அன்று, சிங்கப்பூரில் தனது மகள் வீட்டில் காலமானார்.

இலக்கிய இடம்

எம்.ஜி. சுரேஷ், கதை, கட்டுரை, திறனாய்வு, பின் நவீனத்துவம் சார்ந்த பல நூல்களை எழுதினார். புதிய புனைவு வெளியில் பல படைப்புகளை எழுதினார். வாசகனையும் பிரதியையும் ஒன்றிணைத்து அவனையும் படைப்பின் மையத்தோடு ஒன்றச் செய்தாக எம்.ஜி. சுரேஷின் சில நாவல்கள் அமைந்தன. பரிசோதனை முறையில் பல நாவல்களைப் படைத்தார். கோட்பாடுகளின் மீது கொண்ட ஆர்வத்தினால் இலக்கிய அழகியலை, நுண்ணுணர்வைத் தன் படைப்புகளில் நிராகரித்தார். புனைவுக்குள் வரலாற்றையும், வரலாற்றுக்குள் புனைவையும், புதிய தொன்மங்களையும், தொன்மத்துக்குள் சமகால அரசியலையும் முன் வைத்து எழுதியவராக எம்.ஜி. சுரேஷ் மதிப்பிடப்படுகிறார்.

எம்.ஜி. சுரேஷ் பற்றி ஜெயமோகன், “எம்.ஜி.சுரேஷ் தமிழில் பின் நவீனத்துவம் குறித்த அறிமுக நூல்களையும் விவாதக் கட்டுரைகளையும் எழுதியவர்களில் ஒருவர். பின்நவீனத்துவத்தை ஒரு சிந்தனை அலையாக அல்லாமல் ஒருவகை புதிய மதமாகவே அவர் எடுத்துக்கொண்டார். அதற்கான ஆவேசமான வாதிடல்கள் அவருடைய நூல்களில் உண்டு. அவை பின்நவீனத்துவர் என தன்னை முன்வைத்த ஒருவரின் குரல்கள். அந்தப்புரிதலுடன் வாசிப்பவர்களுக்கு பின்நவீனத்துவ ஆசிரியர்கள், மற்றும் கருதுகோள்களைப்பற்றிய புரிதலை அளிப்பவை அவருடைய நூல்கள் [1]” என்கிறார்.

எம்.ஜி. சுரேஷ் நூல்கள்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • இரண்டாவது உலகைத் தேடி
  • அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள்
நாவல்கள்
  • விரலிடுக்கில் தப்பிய புகை
  • தாஜ்மஹாலுக்குள் சில எலும்புக் கூடுகள்
  • கான்கிரீட் வனம்
  • கனவுலகவாசியின் நனவு குறிப்புகள்
  • அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்
  • அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்
  • சிலந்தி
  • யுரேகா என்றொரு நகரம்
  • 37
  • தந்திர வாக்கியம்
கட்டுரை நூல்கள்
  • பின்வீனத்துவம் என்றால் என்ன?
  • இஸங்கள் ஆயிரம்
  • டாவின்சி கோடும் டெளன்லோட் பிரதிகளும்
  • அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே
  • பின் நவீனத்துவமும் உளவியலும்
  • படைப்பும் பன்மையும்
  • எம்.ஜி.சுரேஷ் கட்டுரைகள்
  • ஃபூக்கோ
  • தெரிதா
  • பார்த்
  • லக்கான்
  • தெலூஸ்-கத்தாரி

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page